பொதுமக்கள் பொதுக் கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருக்க ஊக்கமூட்டும் வகையில், 10 காப்பிக்கடை கழிவறைகள், வீட்டில் உள்ள கழிவறைகளைப் போலவே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.
சுவரொட்டிகள், தடுப்புச்சுவர் அலங்காரம், ஒட்டுத்தாட்களுடன் அவை அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. உலக கழிவறை தினத்தைஒட்டி, பொது சுகாதார மன்றத்தின் பொதுக் கழிவறை துப்புரவு இயக்கம் நேற்று தொடங்கியது.
கழிவறை தடுப்புச் சுவர்கள், கழிவறை கற்கள் பதித்த தோற்றத்துடன், சிறுசிறு செடிகளை வைப்பதற்கான தாங்கிகளுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை பார்த்ததுமே வீட்டுக் கழிவறையைப் போன்ற எண்ணம் வரும்.
தங்களுடைய வீட்டில் இருக்கும் கழிவறையைப் போலவே பொதுக் கழிவறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு பொதுமக்கள் மனதில் நன்கு நிலைபெற இது உதவும்.
இந்த அலங்கார முயற்சிகள் கட்டம் கட்டமாக இதர 110 காப்பிக்கடைகளுக்கு டிசம்பர் மாத வாக்கில் விரிவுபடுத்தப்படும்.
பொதுக் கழிவறைகளுக்கு வெளியே தொண்டூழியர்கள் இருப்பார்கள். அவர்கள் கைத்துடைப்பு தாட்களைக் கொடுப்பார்கள்.
கழிவறையைப் பயன்படுத்திய பிறகு தண்ணீரை இழுத்துவிடுவது, தரையை ஈரப்படுத்தாமல் இருப்பது போன்ற நல்ல பழக்கங்களைப் பின்பற்ற தொண்டூழியர்கள் பொது மக்களுக்கு ஊக்கமூட்டுவார்கள்.
நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுபுற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ளும் ஒரு காப்பிக்கடைக்கு நேற்று சென்றார்.
சிராங்கூன் அவென்யூ 4ல் இருக்கும் அந்தக் காப்பிக்கடைகழிவறைக்கு வெளியே சுவரொட்டிகளைப் பொருத்திய அமைச்சர், பொதுக் கழிவறைகளின் துப்புரவை வலியுறுத்தினார்.
கொவிட்-19 போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்க துப்புரவான கழிவறைகள் அவசியம் என்று அமைச்சர் விளக்கினார்.
பொறுப்புடன் நடந்துகொள்ளும்படி பொதுமக்களை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பொதுக் கழி வறைகளின் துப்புரவு தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தின்கீழ், முதல் தடவையாக சிங்கப்பூர் பசுமைக் கட்டட தயாரிப்புச் சான்றிதழ் திட்டத்தின்படி கழிவறை தயாரிப்புப் பொருட்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

