தனிமை மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. வீட்டிலுள்ள அனைவரும் தங்களது வேலைகளில் ஈடுபடும்போது செல்ல நாய்களும் தனிமையை உணர்கின்றன. இந்தத் தனிமையைப் போக்குவதற்காக பிரிட்டன் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த விலங்கு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் ஒரு சாதனத் தைக் கண்டுபிடித்துள்ளனர்.
'டாக்போன்' என்ற அக்கருவியின் மூலம் நாய்கள், தொலைவில் இருக்கும் தங்களது உரிமையாளர்களை அழைக்கமுடியும்.
உணர்கருவி பொருத்தப்பட்ட பந்தை செல்லப்பிராணிகள் குலுக் கும்போது 'டாக்போன்' வேலை செய்யும். இது அருகிலுள்ள மடிக்கணினியை இயக்கி உரிமையாளருக்கு காணொளி அழைப்பை விடுக்கும்.
பிரிட்டனின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் இலியானா டக்லஸ், ஃபின்லாந்தைச் சேர்ந்த ஆல்ட்டோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களுடன் இணைந்து இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
"இதனைப் பயன்படுத்தும் நாய்கள், அழைப்பை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் பந்துகளைக் குலுக்குகிறதா? இல்லையா? என்பது நமக்குத் தெரியாது. ஆயினும், காணொளிச் சேவையின் மூலம் உரிமையாளர்களைக் காணும்போது நாய்கள் நடந்துகொள்ளும் விதம், நேரில் காணும்போது ஓரளவு நடந்துகொள்வது போல இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த 'டாக்போன்' கருவி தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. கொவிட்-19 கிருமிப்பரவலின்போது வீட்டிலேயே வேலை பார்த்து வந்த உரிமையாளர்கள் மீண்டும் வேலையிடங்களுக்குத் திரும்பும்போது செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் பதற்றத்தைத் தணிக்க இக்கருவி உதவும் என்று இக்குழுவினர் நம்புகின்றனர்.
புகைப்படம்: பெக்சல்ஸ்

