மட்ரிட்: ஸ்பெயினின் லா லிகா லீக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள பட்டியலில் தற்போது முதலிடத்தை வகிக்கும் ரியால் மட்ரிட்டை வெல்லும் கட்டாயத்தில் உள்ளது அதே மட்ரிட் நகரைச் சேர்ந்த நடப்பு வெற்றியாளர் அட்லெட்டிக்கோ மட்ரிட். இரு அணிகளும் நாளை அதிகாலை நான்கு மணிக்கு மோதுகின்றன. பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ள அட்லெட்டிக்கோவிற்கும் ரியாலுக்கும் 10 புள்ளிகள் வித்தியாசம் உள்ளன. எனினும், ரியாலைவிட அட்லெட்டிக்கோ ஓர் ஆட்டம் குறைவாக ஆடியுள்ளது.
ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்ற பருவம் லீக் கிண்ணத்தை வென்றது அட்லெட்டிக்கோ. இந்த ஏழு ஆண்டுகளில் ரியால், பார்சிலோனா ஆகிய இரண்டும்தான் லீக் கிண்ணத்தை வென்றன. இவற்றின் பிடியை உடைத்த பெருமை அட்லெட்டிக்கோவைச் சேரும்.
எனினும், இப்பருவத்தில் இதுவரை சற்று தடுமாறியுள்ளது அட்லெட்டிக்கோ. தான் ஆடிய 15 லீக் ஆட்டங்களில் எட்டை வென்றுள்ளது, ஐந்தில் சமநிலை கண்டது, இரண்டில் தோல்வியடைந்தது. மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தற்போது உள்ளது ரியால் மட்ரிட். பார்சிலோனா பிரச்சினை மேல் பிரச்சினையை எதிர்கொண்டுவருவது அதன் பரம வைரியான ரியாலுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இதுவரை எதிர்பார்ப்புகளை மிஞ்சி லீக் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரியால் பெட்டிஸ், ஐந்தாம் இடத்தில் உள்ள ரியால் சோசியடாட் அணியுடன் இன்று பின்னிரவு மோதுகிறது. அட்லெட்டிக்கோவைப் போல் இவ்விரு அணிகளும், லீக் கிண்ணத்தைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

