சிங்கப்பூர்: சுசுகி கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற இந்தோனீசியாவுக்கு எதிராக இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் மலேசியா கட்டாயமாக வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் மலேசியாவின் சுசுகி கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்து
விடும்.
மலேசியாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இன்று தமது 40வது ஆட்டத்தில் டான் செங் ஹோ பொறுப்பு வகிக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
'பி' பிரிவின் இந்தோனீசியாவும் நடப்பு வெற்றியாளர் வியட்னாமும் தரப்புக்கு ஏழு புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளன. கோல் வித்தியாசத்தில் இந்தோனீசியா பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
வியட்னாம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆறு புள்ளிகளுடன் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்
களைப் பிடிக்கும் குழுக்கள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் கம்போடியாவை வியட்னாம் சந்திக்கிறது.
இதில் வியட்னாம் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்று நம்பப்படுகிறது.
இன்று மலேசியாவும் இந்தோனீசியாவும் முதல் சுற்றில் அவற்றின் கடைசி ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து மலேசியா தாக்குதலில் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற பிறகு இன்றைய ஆட்டம்தான் ஆக முக்கியமானது என்று 53 வயது டான் தெரிவித்தார்.
"எல்லா ஆட்டங்களும் முக்கியமானவை. ஆனால் இந்தோனீசியாவுக்கு எதிராக நாங்கள் களம்இறங்கும் அடுத்த ஆட்டம், போட்டியில் தொடர்ந்து இருப்பது அல்லது வெளியேறுவதை நிர்ணயிக்கும். வாழ்வா, சாவா என்று நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் களமிறங்குவோம்," என்று டான் தெரிவித்தார்.
டானின் தலைமையின்கீழ், இதற்கு முன்பு நடைபெற்ற இந்தோனீசியாவுக்கு எதிரான ஆட்டங்கள் மலேசியாவுக்குச் சாதகமாக முடிந்தன.
2019ஆம் ஆண்டில் இந்தோனீசியாவுக்கு எதிரான இரண்டு
ஆட்டங்களில் முறையே 2-0, 3-2 எனும் கோல் கணக்கில் மலேசியா வெற்றி பெற்றது. ஆனால் அப்போது இருந்த இந்தோனீசியா குழு வேறு. இப்போது வலிமைமிக்க பல ஆட்டக்காரர்கள் இந்தோனீசியக் குழுவில் உள்ளனர்.
அதுமட்டுமல்லாது, புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக தென்கொரியாவைச் சேர்ந்த ஷின் டே யோங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் வீரர்கள் பலரைக் கொண்டுள்ள புதிய இந்தோனீசியக் குழு இவ்வாண்டில் சுசுகி கிண்ணப் போட்டியில் துடிப்புடன் விளையாடி வருகிறது.
இதற்கிடையே, டென்மார்க் லீக் குழுவில் விளையாடும் டியோன் கூல்ஸ் இன்றிரவு மலேசியாவுக்காகக் களமிறங்குகிறார். சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்ட தற்காப்பு ஆட்டக்காரரான கூல்ஸ், மலேசியாவுக்கு பலம் சேர்ப்பார் என்று டான் உறுதியாக நம்புகிறார்.
மலேசியாவின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் ஐடில் ஸஃபுவான் ரட்சாக்கும் ஷாருல் சஹாட்டும் காயம் அடைந்திருப்பதால் கூல்ஸின் வருகையால் மலேசியா நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
"கூல்ஸின் வருகையால் எங்கள் குழு நிச்சயம் வலுவடையும். அவர் எங்களது நட்சத்திர ஆட்டக்காரர். அவர் களமிறங்குவதால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஏற்படும்," என்றார் டான். சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களும் ஆட்டத்தைக் காண நேரில் வந்து ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

