கொவிட்-19 நெருக்கடிநிலை: இபிஎல் குழுக்கள் சந்திப்பு
லண்டன்: கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஏற்பட்ட இடையூறு குறித்து கலந்துரையாடி தீர்வு காண இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் குழுக்கள் நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றன. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் பல குழுக்களுக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல முக்கியமான ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
செல்சி, லிவர்பூல் ஆகிய குழுக்களின் முக்கிய ஆட்டக்காரர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்பர்ஸ் குழுவின் ஆட்டக்காரர்கள், ஊழியர்கள் என 13 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாதம் 5ஆம் தேதியிலிருந்து இக்குழு ஆட்டங்களில் களமிறங்கவில்லை.
இதற்கிடையே, மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் தமது குழுவுக்கு அவர் தலைமை தாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லுயிஸ் ஹேமில்டன் தண்டிக்கப்படக்கூடும்
பாரிஸ்: அனைத்துலக மோட்டார் பந்தய சம்மேளனத்தின் ஆண்டிறுதி விழாவில் கலந்துகொள்ளாத காரணத்துக்காக எஃப் 1 விரைவுகார்ப் பந்தய நட்சத்திரம் லுயிஸ் ஹேமில்டனுக்கு தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது பென் சுலாயிம் இவ்வாறு கூறியுள்ளார். விதிமுறைகளை மீறுவோருக்கு மன்னிப்பு கிடையாது என்றார் அவர். கார் பந்தயத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் ஆண்டிறுதி விழாவில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் வன்முறையால் கைவிடப்பட்டது ஆட்டம்
பாரிஸ்: பிரெஞ்சு காற்பந்து லீக் போட்டியில் போட்டியிடும் லியோன் குழு களமிறங்கிய ஆட்டம் ஒன்று ரசிகர்கள் வன்முறையால் கைவிடப்பட்டது. ரசிகர்கள் வன்முறை காரணமாக இதற்கு முன்பு லியோன் குழு களமிறங்கிய மற்றோர் ஆட்டமும் கைவிடப்பட்டது.
விளையாட்டரங்கத்தில் கூடியிருந்து ரசிகர்கள் சிலர் பட்டொளிகளை திடல் நோக்கி வீசியதால் அங்கு பதற்றம் நிலவியது. பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் அவர்களை நெருங்கியபோது அந்த ரசிகர்கள் திடல் நோக்கி விரைந்தனர். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

