டாக்கா: ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் இந்தியா நேற்று முன்தினம் தோற்கடித்தது. இப்போட்டி பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. ஹர்மன்பிரித் சிங் இரண்டு கோல்களும் ஆகாஷ்தீப் சிங் ஒரு கோலும் போட்டு இந்திய அணியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றனர்.
பாகிஸ்தான் அணி எவ்வளவு முயன்றும் இந்தியாவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இருதரப்பு ஆட்டக்காரர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.
இருப்பினும், கிடைத்த வாய்ப்பு களை நன்கு பயன்படுத்திக்கொண்ட இந்தியா வாகை சூடியது.
இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் இந்தியா 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.
இரண்டாவது ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணியை 9-0 எனும் கோல் கணக்கில் அது பந்தாடியது.
பாகிஸ்தானைத் தோற்கடித்ததன் மூலம் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் அது ஜப்பானை நேற்று சந்தித்தது.

