சுசுகி கிண்ண இறுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் 4-0 என இந்தோனீசியாவை வீழ்த்தியது
சிங்கப்பூரில் நடந்துவரும் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணப் போட்டிகளில் தாய்லாந்து அணி வெற்றியாளராக வாகை சூடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மொத்தம் பத்து அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்ற சுசுகி கிண்ணப் போட்டிகளில் தாய்லாந்தும் இந்தோனீசியாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இரண்டு ஆட்டங்கள் கொண்ட இறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் தேசிய விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே கோலடித்து தாய்லாந்திற்கு முன்னிலை பெற்றுத் தந்தார் சனதிப் சொங்கிராசின். பின்னர் இரண்டாம் பாதியின் ஏழாம் நிமிடத்திலும் அவர் தம் பங்கிற்கு இன்னொரு கோலைப் போட்டார்.
சுப்பசொக் சராச்சத் 67ஆம் நிமிடத்திலும் போர்டின் ஃபாலா 83ஆம் நிமிடத்திலும் கோலடிக்க, தாய்லாந்து அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது.
நடப்பு சுசுகி கிண்ணப் போட்டிகளில் ஆக அதிகமாக 18 கோல்களைப் போட்டிருப்பினும், இந்தோனீசிய அணியினரால் தாய்லாந்தின் தற்காப்பைத் தகர்த்து, வலையை நெருங்க முடியாமல் போனது பெரும் சோகம்.
போட்டிக்குப்பின் பேசிய தாய்லாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அலெக்சாண்டர் போல்கிங், "தாய்லாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்கள் இப்படி நன்றாக விளையாடும்போது பயிற்றுவிப்பாளரின் பணி எளிதாகிறது," என்றார்.
கடந்த செப்டம்பரில்தான் அவர் அப்பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை இரவு 8.30 மணிக்கு நடக்கவிருக்கும் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, தாய்லாந்து அணி ஆறாவது முறையாக சுசுகி கிண்ணத்தைக் கைப்பற்றி, சாதனை படைப்பதைத் தடுக்க முடியாது.

