முழுமையாக நீர் உட்புகுந்து செல்லக்கூடிய டென்னிஸ் திடல் சிங்கப்பூரில் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொருள் அறிவியல் நிறுவனமான டௌ (Dow), 'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்புடனும் 'பி.டி.ஸ்போர்ட்' நிறுவனத்துடனும் இணைந்து, ஜூரோங் வெஸ்ட் டென்னிஸ் மையத்தில் அத்திடலை அமைத்துள்ளது.
எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் முழுமையாக வடிந்து செல்லும் வகையில் இந்தக் கடினத் தரைத் திடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், மழை நின்றதும் விளையாட்டாளர்கள் திடலுக்குத் திரும்பி, ஆட்டத்தைத் தொடரலாம்.
அத்துடன், இந்த 'கிரீன்பேவ்' பூச்சு, தீங்கு விளைவிக்கக்கூடிய புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து திடலைப் பாதுகாப்பதால் திடலின் நிறமும் மங்காது.
மேலும், இந்த நீர் உட்புகும் மேற்பரப்பு, உருளை மூலம் தரையைச் சமப்படுத்தும்போது ஏற்படும் கழிவுகளையும் குறைக்க உதவும். இதனால், திடலையும் நீண்டகாலத்திற்குப் பயன்படுத்தலாம்; பராமரிப்பும் குறைவாகவே தேவைப்படும்.

