கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் கவனத்தைப் பல்வேறு பொழுதுபோக்கில் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பலரும் மிதிவண்டி ஓட்டுவதில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
உடலைக் கட்டாக வைத்துக்கொள்ளவும் அன்புக்குரியவர்களுடன் பொழுதைக் கழிக்கவும் தங்களின் மனநலனைப் பேணவும் மிதிவண்டி ஓட்டுவதில் மக்கள் மோகம் கொண்டுள்ளனர். வீட்டில் இருந்தபடி வேலை செய்வது ஒரு புறம், விடுமுறைக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியாதது மறுபுறம் எனத் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை மக்கள் இரண்டு சக்கரங்களில் உலா வந்து சமாளிக்கின்றனர்.
மடக்கக்கூடிய மிதிவண்டிகளுக்கான தேவை கடந்த ஆண்டு இதனாலேயே எகிறியது. சில கடைகளில் காத்திருப்புப் பட்டியலில் மக்கள் தங்களின் பெயர்களைக் கொடுத்திருந்தனர்; மற்றும் பலர் பயன்படுத்தப்பட்ட மிதிவண்டிகளையும் வாங்கத் தயாராகினர்.
பூங்காக்களையும் பூங்கா இணைப்புக் கட்டமைப்பையும் பயன்படுத்தி மிதிவண்டி ஓட்டுநர்கள் தங்களின் பயணங்களைத் திட்டமிட வேண்டும் என்பதற்காகவே சிங்கப்பூர் நில ஆணையத்தின் 'வொன்மேப்' மூலமாக இயங்கும் 'ரைட்என்ஜாய்' (Ridenjoy) பயணச் செயலி கடந்த மாதம் செயல்படத் தொடங்கியது.
அதுமட்டுமா, கொள்ளைநோய் காலகட்டத்தில் மிதிவண்டி ஓட்டுவதற்குரிய பாதைகள் தொடர்பில் 'கூகல் மேப்ஸ்' வழி பலரும் தேடுதல் மேற்கொண்டிருந்தனர். இதை அறிந்து கடந்த நவம்பர் மாதத்தில் மிதிவண்டிப் பயணப் பாதைகள் தொகுப்பு ஒன்றை நிறுவனம் தொடங்கி வைத்தது.
மிதிவண்டி ஓட்டத் தொடங்கியதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணம் கூறி வர, தாதியராகப் பணிபுரியும் திருமதி ரத்தினமாலா, தாம் கண்ட பலன்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
"முன்களப் பணியாளராக இருப்பதால் நான் சில நேரங்களில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். என் மகன் இவ்வாண்டு தொடக்கப்பள்ளி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவருடன் நேரத்தை ஒன்றாகச் செலவிடுவதற்கு இந்த மிதிவண்டி ஓட்டும் பொழுதுபோக்கே மிக ஏற்றதாக இருக்கிறது," என்றார் திருமதி ரத்தினா.
கணவர் திரு டினேஷ் குமார், மகன் திரிஷான் டினேஷ் இருவருடனும் குடும்ப உறவை வலுவாக்கும் ஓர் இன்பமான நடவடிக்கையாக மிதிவண்டி ஓட்டுவது அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"முதலில் மிதிவண்டி ஓட்டுவதில் என் கணவர்தான் நாட்டம் காட்டினார். அவர் காட்டிய வழியில் நானும் என் மகனும் மிதிவண்டி ஓட்டத் தொடங்கினோம். எங்கள் இல்லப் பணியாளர் ஃபிட்ராவுக்கும் நாங்கள் மிதிவண்டி வாங்கித் தந்தோம். நாங்கள் குடும்பமாக பொழுதைக் கழிக்கும் நடவடிக்கையாக இது மாறிவிட்டது," என்றார் இந்த இளம் தாயார்.
கூடுதல் செய்தி: சி.சுபாஷினி

