தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம், என்று பாடினான் பாரதி. தனி ஒரு மனிதனின் உணவுத் தேவை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தே இவ்வாறு பாடினான் பாரதி.
அந்த வகையில் 2020, 2021ஆம் ஆண்டுகள் மலேசியாவிற்கு நெருக்கடியான ஆண்டுகளாகும். கடந்த ஈராண்டுகளாக மக்கள் அளவுகடந்த துயரத்தில் தவித்து வருகின்றனர்.
கொவிட்-19 பெருந்தொற்றால் கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல லட்சம் மலேசியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். வர்த்தகங்கள் முடங்கின.
நடுத்தர மக்களின் அதாவது பி40 பிரிவு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை மக்கள் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தத்தளித்தனர், தவித்தனர்.
கடந்த 2020ல் நாட்டில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்ட போது, மலேசிய அரசாங்கம் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி நல்கியது. முதல் கட்டமாக வருமான வரம்பைப் பொறுத்து பல பிரிவுகளாக மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
வாகனங்கள், வீட்டுக் கடன்களுக்கு மாதாந்திரக் கட்டணம் செலுத்துவது 6 முதல் ஓராண்டு காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. EPF எனப்படும் ஊழியர் சேமநிதி யில் இருந்து 10,000 வெள்ளி வரை மீட்டுகொள்ள அனுமதிக்கப்பட்டது.
நடுத்தர மக்கள், பெரிய அளவில் வர்த்தகம் செய்பவர்களுக்கு சிறப்பு உதவி நிதி, வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு கடந்த ஈராண்டுகளாக அரசாங்கம் வழங்கிய பல்வேறு உதவிகள் மூலம் மலேசியர்கள் துன்பமான காலகட்டத்தை கடந்து சமாளித்து வந்தனர்.
மலேசியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 34 மில்லியனாகும். அரசாங்கத்தால் எத்தனை பேருக்குத்தான் உதவ முடியும்? இந்த சூழலில்தான் மக்கள் அரசு சாரா அமைப்புகளின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த அமைப்புகளால் ஒரு குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்க முடியும் என்ற நிலையில், நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் மக்களுக்கு உதவும் நடவடிக்கையை முன்னெடுத்தன.
மக்களுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கலாமே என்ற சிந்தனையில் நாடு தழுவிய நிலையில் இருக்கும் பி40 பிரிவு நடுத்தர மக்கள் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட உதவின.
ஏற்கெனவே வர்த்தகம் செய்து முடங்கிப் போனவர்களுக்கும் புதிதாக வர்த்தகம் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கும் வழிகாட்டின.
இத்தகைய உதவிகளால் பல்லாயிரம் மக்கள் இந்த சிரமமான காலகட்டத்தை கடந்து வந்தனர்.
மலேசிய மக்கள் தங்களின் இறுக்கமான காலகட்டத்தை எதிர்கொள்ள உதவி வழங்கிய மற்றொரு தரப்பினர் தொழிலதிபர்களாவர்.
மலேசியத் தொழிலதிபர்கள் பலர் தங்களது பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமங்களிலிருந்து மீண்டு வர உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தேவையான நிதியுதவி வழங்கி அவர்களுக்கு ஆர்வமுள்ள தொழிலில் ஈடுபட உதவினர்.
ஒரு மாநிலத்தில் 10 தொழிலதிபர்கள் 10 பேருக்கு உதவி வழங்கினாலும் 14 மாநிலத்தில் 140 பேர் பயனடைவார்கள். இதுவொரு சிறிய கணக்குதான். ஆனால், எத்தனையோ தொழிலதிபர்கள் பல ஆயிரம் மக்களின் சுமையை குறைத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.
தனியார் தொழில்நிறுவனங்களும் சமூக உதவித் திட்டங்களை மேற்கொண்டன. கொவிட்-19 பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேர்வு அடிப்படையில் வர்த்தகம் செய்ய வாய்ப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றை அமைத்துத் தந்துள்ளன தனியார் தொழில் நிறுவனங்கள். இதன்வழியும் பல ஆயிரம் மக்கள் பயனடைந்து இந்த இறுக்கமான காலத்தை கடந்து வருகின்றனர்.
அதேநேரத்தில், சிரமமான காலத்தை சுயமுயற்சியின் மூலம் தங்களால் மீண்டு வரமுடியும் எனும் கொள்கையில் உள்ள மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.
வீட்டில் இருந்து ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என்ற கொள்கையில் செயலில் இறங்கியவர்கள் பலர். பெருந்தொற்று மலேசிய மக்களுக்கு தன்னம்பிக்கையை விதைத்துள்ளது. 2020ல் நடைமுறையில் இருந்த பொது முடக்கத்தின்போதும், அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போதும், பல சிறு வர்த்தகர்கள் வீட்டிலிருந்தே தொழில் செய்யத் தொடங்கினர்.
'கிராப் ஃபுட்' 'ஃபுட் பாண்டா' மூலம் உணவு விநியோகம் செய்வது, பொருள் விநியோகம் செய்வது, வீட்டில் தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் விநியோகம் செய்வது, பலவகை உணவு வகைகளை தயாரித்து விற்பது என்று தங்கள் வருமானத்தை சுயமாக தேடிக்கொண்டு சமாளித்த மக்கள்தான் அதிகம் என்பது கண்கூடாகத் தெரிந்தது.
"நமக்கு நாமே" எனும் தாரக மந்திரத்துடன் இந்த இறுக்கமான காலகட்டத்தை கடந்த மக்கள் பல ஆயிரம் பேர்.
பெருந்தொற்றின் இறுக்கமான காலகட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நாடெங்கும் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் மக்களுக்கு அரசு சாரா இயக்கங்கள் மீண்டும் உதவிக்கரம் நீட்டின.
'நமக்கு நாமே' தாரக மந்திரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் மனப்பான்மையை கிருமித்தொற்றும் வெள்ளப் பேரிடரும் ஏற்படுத்திய நிலையில் மக்கள் அதில் இருந்து மீண்டு வருவதற்கு அரசு சாரா இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் என்று பலரும் போட்டிபோட்டு உதவியதால் மக்கள் ஓரளவுக்கு அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
நாட்டுக்கு நாடு உதவி, மக்களுக்கு மக்கள் உதவி, வீட்டுக்கு வீடு உதவி என்ற அடிப்படையில் செயல்பட்டதால் மக்களின் துயரம் ஓரளவு துடைக்கப்பட்டுள்ளது.
இதுவும் கடந்து போகும் எனும் நம்பிக்கையில் தாங்கள் அனுபவிக்கும் இந்த இறுக்கமான காலகட்டத்தை மக்கள் கடந்து வருகின்றனர்.

