புதுடெல்லி: சிங்கப்பூர் பூப்பந்து விளையாட்டாளர் லோ கியன் இயூ இந்தியப் பொது விருதுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடுமையாகப் போராடியும் பட்டம் வெல்லும் வாய்ப்பைப் பறிகொடுத்தார்.
கடந்த மாதம் உலக வெற்றியாளர் பட்டத்தைத் தனதாக்கி, பூப்பந்து உலகில் புதிய நாயகனாக உருவெடுத்த 24 வயது லோ, இந்தியப் பொது விருதிலும் வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும், இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 17ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவின் லக்ஷயா சென்னிடம் 24-22, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று ஏமாற்றமளித்தார் 15ஆம் இடத்தில்இருக்கும் லோ.
முன்னதாக நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், சிங்கப்பூரின் டெரி ஹீ-டான் வெய் ஹான் இணை 21-15, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் சென் டாங் ஜை - பெக் யென் வெய் இணையைத் தோற்கடித்து, பட்டம் வென்றது.
உலகத் தரவரிசையில் 182வது இடத்தில் இருக்கும் ஹீ-ஹான் தம்பதியர், தாக்குதல் ஆட்டமுறையைக் கையாண்டு, 40வது இடத்திலுள்ள மலேசிய இணைக்கு அதிர்ச்சி அளித்தனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 21-16, 26-24 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனீசியாவின் ஹேந்த்ரா செத்தியவான் - முகம்மது ஆசன் இணையை வீழ்த்தியது.

