முருகக் கடவுளுக்கு உகந்த தைப்பூச விழா இன்று கொண்டாடப்படுகிறது. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாத பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். இந்த தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயிலுக்கு விரதமிருந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூச நாளில் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
தைப்பூசத்தில் முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன், தலைமுடி காணிக்கை செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவதும் சிறப்பாகும்.

