பாலும் பால் பொருட்களும் ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவாகும். இதில், இயற்கை ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம், லாக்டின் (புரதம்), லாக்டோஸ் (இரட்டைச் சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
உலகளவில் இந்தப் பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருட்களை ஆறு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன் படுத்தி வருகின்றனர்.
நம்மில் பலருக்கும் மில்க் ஸ்வீட், மில்க் ஷேக், சாக்லேட் மில்க், பாதாம் மில்க் மிகவும் பிடிக்கும்.
பாலை பலரும் சூடாகவோ அல்லது குளிராகவோ பருக விரும்புகிறார்கள். சிலர் பாலுடன் சாக்லேட்டையும் வாழைப்பழத்தைச் சேர்த்து உட்கொள்வார்கள். பால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரமாகும். பாலில் உள்ள லாக்டோஸ் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.
இதனால், எந்த உணவோடு எதைச் சேர்த்துச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். பாலுடன் ஒருசில உணவுப் பொருட்களைச் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும் என்கிறார் மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பிரீதம் மூன்.
மீன்-பால், இறைச்சி:
பால் குளிர்ச்சி தன்மை கொண்டது. மீன், வெப்பத்தன்மை கொண்டது. இவை இரண்டும் சேர்ந்த கலவையானது உடலில் சமநிலையின்மையை உருவாக்கும். அதேேபால், அதிக புரதச் சத்துள்ள இறைச்சி செரிமானம் ஆவதற்கு பல மணி நேரம் எடுத்துக் கொள்ளும். பாலும் எளிதில் சீரணிக்கக் கூடியது அல்ல. இவை இரண்டையும் சேர்த்து உண்டால் உடல் பாதிப்பு ஏற்படும். மீன், இைறச்சியுடன் தயிரையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. அது தோல் நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.
பால்-வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம்:
பால்-வாழைப்பழ மில்க்-ஷேக் உடலுக்கு மிகவும் சத்து என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. அப்படி சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். பால் மிகவும் குளிர்ச்சியான உணவு, வாழைப்பழம் சூடான உணவு. இவை இரண்டையும் சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டு சோர்வாக உணர்வீர்கள். ஸ்ட்ராபெர்ரி, முலாம் பழத்துடன் (Muskmelon) பாலைச் சேர்த்து சாப்பிடுவது தவறு. இது உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும். வாந்திக்கும் வித்திடும் என்கிறார் டாக்டர் பிரீதம்.
முள்ளங்கி-பால்:
ஆயுர்வேதத்தின்படி முள்ளங்கியை உண்டபிறகு பால் சாப்பிடக் கூடாது. ஏனெனில், அது பொருந்தாத உணவுக்கலவையாக கருதப்படுகிறது. முள்ளங்கி சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்கு பிறகு பால் பருகலாம்.
பால்-எலுமிச்சை:
எலுமிச்சஞ்சாறு குடித்ததை மறந்து சிறிது நேரத்தில் பாலை பருகினால் குடலில் ஒவ்வாமை ஏற்பட்டு செரிமான மண்டலம் பாதிப்படையும். ஏனெனில், எலுமிச்சையில் உள்ள அதிக 'சிட்ரிக்' அமிலத் தன்மை பாலுடன் சேர்ந்து வேதி மாற்றங்கள் அடைந்து உடல் பாதிப்பு ஏற்பட காரணமாகிறது. இது நெஞ்செரிச்சலை வரவழைத்து, உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும் என்கிறார் மருத்துவர் பிரீதம்.