இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக திருமணமாக உள்ள ஒரு காதல் ஜோடி, தங்களது திருமணத்தை மிகவும் வித்தியாசமான முறையில் இணையம் மூலமாக நடத்த உள்ளனர்.
இவர்களது திருமணம் 'கூகல் மீட்' மூலம் நடக்கவுள்ளது. இந்த கூகல் சந்திப்பில் கலந்துகொள்ளும் நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு சோமேட்டோ (Zomato) மூலம் விருந்து வைக்க உள்ளனர்.
அத்துடன், தங்களது மொய் அன்பளிப்புகளை 'ஜி-பே' வழியில் பெறவும் அசத்தலான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கூகல் மீட்டில் திருமணம்
இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்தீபன் சர்க்கார், அதிதி தாஸ் ஜோடி, இம்மாதம் 24ஆம் தேதி திருமணத்தை நடத்தவுள்ளனர். இவர்கள் 100 பேரை மட்டுமே நேரில் பங்கேற்க அழைத்துள்ளனர்.
அதேசமயத்தில், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 350 பேரை 'கூகல் சந்திப்பு' மூலம் திருமணத்தில் கலந்துகொள் வதற்கு வரவேற்றுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளி லும் வசிக்கும் இந்த 350 பேருக்கும் சோமேட்டோ நிறுவனத்தின் உணவு விநியோகம் செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
தள்ளிப்போன திருமணம்
இதுகுறித்து மணமகன் சந்தீபன் சர்க்கார் கூறுகையில், "கடந்த ஆண்டே எங்களின் திருமணம் நடந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா தொற்றால் நானும் பாதிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதிக்குப் பிறகே குணமடைந்தேன்.
"எனவேதான், திருமணம் என்ற பெயரில் எனது உறவினர்களையும் அழைத்து, அவர்களது நிலைமையையும் மோசமாக்க விரும்பாமல், அவர்களை இணையத்தின் வழி ஒன்றிணைக்க முடிவு செய்தோம்.
"அது மட்டுமின்றி, அவர்கள் அனைவருக்கும் சோமேட்டோ மூலம் உணவு விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.
உறவினர்களின் பாதுகாப்பு
"கொவிட்-19 சூழலில், நேரில் வந்து திருமண நிகழ்வில் கலந்துகொள்ள நிச்சயம் பல பேர் தயங்குவார்கள். இதனால், நாங்கள் போட்டுள்ள திட்டம்தான் சிறந்தது. எங்கள் விருந்தினர்களின் உயிருக்கும் அது பாதுகாப்பாக இருக்கும்," என்று மணப்பெண் அதிதி கூறினார்.
நம்பிக்கை அளிக்கும் ஜோடி
இனிவரும் காலங்களில், வெர்ச்சுவல் திருமணம் (Virtual Marriage) புதுமையான ஒன்றாக மாறும் என்றும் எங்களின் வழியை அதிகமானோர் பின்பற்றுவார்கள் என்றும் சந்தீபன்-அதிதி ஜோடி நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.