ஆ. விஷ்ணு வர்தினி
வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் திரு ஜெயராஜ் இந்திர ராஜுக்கு 68 வயது ஆகிவிட்டபோதும், தம்மையும் தம்மைச் சுற்றி உள்ளோரையும் சிரத்தையோடு பேணி, தம்மை இன்னும் திடகாத்திரமாக வைத்துக்கொள்ளும் ஆரோக்கியமான பல பழக்கவழக்கங்களை மேற்கொண்டு இளமையுடன் திகழ்கிறார்.
திரு இந்திர ராஜின் நாளானது அனைத்து வார நாள்களிலும் விடிகாலை ஐந்து மணிக்குத் தொடங்குகிறது. இவரும் இவரின் மனைவியும் காலையில் நீந்தச் சென்றுவிட்டு, பின்னர் தங்களது அலுவல்களைத் தொடங்குவர்.
1989ஆம் ஆண்டிலிருந்தே கிட்டத்தட்ட தினமும் நீந்தும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்ட இவர், இதனை தமக்கு அறிமுகப்படுத்தியது தம் மனைவி திருவாட்டி மேரி அங் லுவாங் சூதான் என்றும் பகிர்ந்துகொண்டார். இளமையில் தமக்கு வந்த மூச்சுத்தடை நோயைக் கருதி நீச்சல் கற்றுக்கொண்ட இவர், தற்போது அதை உத்வேகமூட்டும் நல்ல வாழ்வியல் பழக்கமாகக் கொண்டுள்ளார். திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் 1,100 மீட்டர் நீந்துகின்றார் இவர்.
இளமையிலிருந்தே குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார், நான்கு சகோதரர்களில் மூன்றாவதாக விளங்கும் திரு இந்திர ராஜ். குடும்ப நலனே இவர் எடுத்த பல வேலைசார்ந்த முடிவுகளுக்குக் காரணமாய் இருந்தது.
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தாம் பணிபுரிந்துவரும் சட்ட நிறுவனமான 'ஹரோல்ட் சீட் அண்ட் இந்திர ராஜ்', தம் கூட்டாளி ஹரோல்ட் சீட்டுடன் சேர்ந்து திரு இந்திர ராஜ் தொடங்கியதாகும்.
அதன் உருவாக்கத்திற்கு முன்னர் ஒரு சில சட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த திரு இந்திர ராஜ், அச்சமயத்தில் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கவியலா அளவிற்கு வேலைப் பளு இருந்ததாக உணர்ந்தார். உறவுகளைப் பேணுவதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற தமது கொள்கையின் அடிப்படையில், தமக்கேற்ற வேலைப்பளுவுடன் கூடிய, அத்தகைய சுதந்திரத்தைக் கொடுக்க முடிந்த வேலையிடத்தை உருவாக்கிக்கொண்டார்.
"1989ஆம் ஆண்டில் வேலைப்பளு காரணமாக எனக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நான் பழகிக்கொண்ட நீச்சல் எனது வாழ்க்கையைப் பேரளவில் மாற்றியது. உடற்பயிற்சி செய்யாத என்னுடைய பல நண்பர்கள் அதிக மனஉளைச்சலோடு காணப்படுவர். அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம் எனது சுருக்கங்களற்ற சருமத்தையும் சோர்வற்ற நடத்தையையும் பற்றி வியந்து கேட்பர். நீச்சல் பயிற்சி மேற்கொள்வதை அவர்களுக்கு நான் பரிந்துரைப்பதுண்டு. மேலும், வழக்கறிஞர்களாகப் பணிபுரியும் என் நண்பர்கள், தொடர்ந்து கடுமையாக உழைத்து உடலை வருத்திக்கொண்டதைக் கண்டுள்ளேன். அவர்களுள், பக்கவாதம், புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு, இளமையிலிருந்தே மிக வேதனையுற்றிருப்போரும் உள்ளனர். அத்தகைய வாழ்க்கைமுறையை நான் விரும்பவில்லை." என்றார் திரு இந்திர ராஜ். தற்போது பராமரிப்பு இல்லத்தில் உள்ள 74 வயதான தம் அண்ணனைச் சென்று காணுவதற்கும் தினமும் நேரம் ஒதுக்கி வருகின்றார் இவர்.
வழக்கறிஞர் பணி தவிர்த்து, சமூகத்திற்கும் தொண்டூழியம் செய்து வருகின்றார் திரு இந்திர ராஜ். செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையின் தொடக்கத்திலிருந்தே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு அதன் உருவாக்கத்திலும் நிர்வாகத்திலும் பங்குகொண்டிருந்தார் திரு இந்திர ராஜ். மேலும், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பிலும் உறுப்பினராக இருந்து வந்துள்ளார் இவர். இத்தகைய தொண்டூழியப் பணிகளே அதிக மனநிறைவைத் தருவதாக இவர் உணர்கிறார்.
தம் மனைவியைச் சந்திக்கும் முன் தமது வாழ்வில் முதல் காதலாக இருந்தது இசைதான் என்றார் திரு இந்திர ராஜ். 1966ஆம் ஆண்டில் ஆங்கிலோ சீனப் பள்ளியின் இசைக்குழுவில் 'டிரம்பெட்' எனும் ஊதுகொம்பினை இவர் வாசித்து வந்தார். பாடாங் திடலில் நடந்தேறிய முதல் தேசிய தின அணிவகுப்பிலும் திரு இந்திர ராஜ் வாசித்தார். தற்போது, இவர் வழக்கமாகச் செல்லும் வெஸ்லி மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் இயங்கும் வெஸ்லி சோலி டியோ கிளோரியா எனும் இசைக்குழுவில் தொடர்ந்து வாசித்து வருகின்றார். கொவிட்-19 சூழலில் காற்றிசைக் கருவிகளைத் தேவாலயத்தின் பொது நிகழ்வுகளில் வாசிக்க இயலாமல் போனாலும், தனிப்பட்ட முறையில் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பயிற்சி செய்து வருகின்றார் இவர்.
"என்னை மிகவும் உற்சாகமாக வைத்துக்கொள்வது இசைதான். படிப்பையும்விட எனக்கு இளமையிலிருந்தே இசையில் தான் அதிக விருப்பம் இருந்தது. இன்றுவரை ஊதுகொம்பு வாசிப்பதை விடாமல் தொடர்கிறேன்," என்கிறார் திரு இந்திர ராஜ்.
இவ்வகையில், திரு இந்திர ராஜ் தமது ஆரோக்கியத்தையும் குடும்ப நலனையும் சமூக நலனையும் பேணுவதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார். தமது அலுவல்களை எல்லாம் தாமே செய்துகொண்டு, மனஉறுதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்கும் திரு இந்திர ராஜ் தம்மைச் சுற்றியுள்ளோரையும் மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றார்.
ஒவ்வொரு நாளையும் முழுமையாக அனுபவிப்பதோடு, அதை முடிந்த அளவிற்கு இரசிக்கவேண்டும் என்ற அடிப்படையில் தமது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டுள்ளார் திரு இந்திர ராஜ்.
வெற்றிகரமாக மூப்படைவதற்கான செயல்திட்டம்
உறுதியுடனும் கண்ணியத்துடனும் சிங்கப்பூரர்கள் மூப்படைவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில் 2015ஆம் ஆண்டில் மூப்படைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு இச்செயல்திட்டத்தைத் தொடங்கியது.
அக்குழு 2017ஆம் ஆண்டில் 'இளமை உணர்வில் நான் எஸ்ஜி' எனும் திட்டத்தைத் தொடங்கி, செயல்திட்டத்தையும் துடிப்பான மூப்படைதலையும் ஊக்குவிக்க முனைந்தது.
மேல்விவரங்களுக்கு http://www.ifeelyoung.sg/ இணையப்பக்கத்தை நாடலாம்.
தற்கால, எதிர்கால மூத்தோருக்குச் சேவையாற்றவும் மேலும் பலதரப்பட்ட தேவைகளுக்கு உடனடியாக உதவவும் கொவிட்-19 சூழலால் புதிய செயல்பாட்டுச் சூழலையும் கற்றலையும் கொண்டு புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டமானது, பராமரிப்பு, பங்களிப்பு, இணைப்பு ஆகிய மூன்று கூறுகளை மையப்படுத்துவதாக அமைகிறது.
பராமரிப்பு எனும் கூறு, நடைப்பிணிகளைத் தவிர்க்கவும், மூத்தோரின் வாழ்வு நலனை மேம்படுத்தவும், பராமரிப்பு சேவைகள் மூலம் தங்களது உடல் மற்றும் மனநலத்தைப் பேணி வாழவும் ஊக்குவிக்கும்.
பங்களிப்பு எனும் கூறு, மூத்தோருக்கான வேலை வாய்ப்புகளையும், கற்றல் அனுபவங்களையும், தொண்டூழியப் பணி ஈடுபாட்டையும் அதிகரிக்க முற்படும்.
கடைசியாக, இணைப்பு எனும் கூறு, 'கம்பத்து உணர்வு' போன்ற மூத்தோருடைய சமூகப் பிணைப்பையும், இளம் தலைமுறையினருடனான உறவுகளையும் மின்னிலக்கத் தளங்களில் வலுப்படுத்துவதோடு அரவணைப்புடன் கட்டப்பட்ட சூழலில் மூப்படைவதற்கும் ஆதரவளிக்கும்.

