திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

 'பீஸ்ட்' படத்தின் இந்திப் பதிப்புக்கான தலைப்பு மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அண்மையில் வெளியான அப்படத்தின் சுவரொட்டிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 'பீஸ்ட்' என்ற தலைப்பே அந்தந்த மொழிகளில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தி சுவரொட்டியில் மட்டும் படத்தின் தலைப்பு 'ரா' என்று உள்ளது. இந்திய உளவு அமைப்பு 'ரா' என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இது வெளிநாட்டு தீவிரவாதிகளை வேரறுக்கும் கதையைக் கொண்டுள்ள கதை என்பதால் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விஜய் உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 திரையுலகில் அறிமுகமான புதிதில் தாம் உருவக்கேலிக்கு ஆளானதாகச் சொல்கிறார் ராஷி கண்ணா.

இதுகுறித்து தொடக்கத்தில் வேதனை அடைந்தாலும் பிறகு கடுமையாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொண்டதாகச் சொல்கிறார்.

"நடிக்க வந்த புதிதில் பல்வேறு அவமானங்களை எதிர்கொண்டேன். என் உடல் தோற்றத்தை வைத்து பலரும் கிண்டல் செய்தனர்.

"உண்மையாகவே நான் அப்போது உடல் பெருத்துத்தான் காணப்பட்டேன். என்னை டேங்கர் லாரி என்று என் காதுபடவே கேலி செய்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய இதுபோன்ற விமர்சனங்களால் வேதனை அடைந்தேன். பின்னர் நம்மால் எதையும் மாற்ற முடியும் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பிறகுதான் உடற்பயிற்சி எனக்குக் கைகொடுத்தது," என்கிறார் ராஷி கண்ணா.

இவர் தற்போது தனுசுடன் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தியுடன் 'சர்தார்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அதன் வசூலும் அமோகமாக உள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் ரூ.223 கோடி என்கிறார்கள்.

உலக அளவில் ஆயிரக்கணக் கான திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளதால் அடுத்த ஒரு வாரத்துக்கு வசூல் மழை கொட்டும் என தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முதல் நாள் வசூல் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும் வரும் நாள்களிலும் இதே நிலை நீடிக்கும் என நம்புவதாகவும் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் கூறுகின்றனர். 'பாகுபலி' பட இந்திப்பதிப்பின் வசூலை இந்தப் படம் எளிதில் கடந்துவிடும் என்றும் பிற மொழிகளிலும் தெலுங்குப் பதிப்புக்கு ஈடான வசூல் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு அரிய தகவல்கள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. கவிஞர் தாமரை இதை எழுதியுள்ளார்.

கடந்த 24ஆம் தேதி துபாய் கண்காட்சியில் நடைபெற்ற ரகுமானின் இசைக்கச்சேரியில் இப்பாடலும் இடம்பெற்றது. அதைக் காட்சிப்படுத்தி இப்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 'மூப்பில்லா தமிழே தாயே' பாடல் இளையர்களை தங்கள் கலாசார வேர்களுடன் இணையவும் தமிழ் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது. சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ், பூவையார் ஆகியோர் ரகுமானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.