செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

விமான நிறுவன இணையத்தளத்தில் ஊடுருவியதாக பயணி பரபரப்புத் தகவல்

பெங்களூரு: இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையத்தளத்தில் தம்மால் ஊடுருவ முடிந்ததாகவும் அதன் மூலம் தன்னுடன் விமானப்பயணம் மேற்கொண்டவரின் கைபேசி எண்ணைத் தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் நந்தன் குமார் என்ற பயணி கூறியுள்ளார். தனது பெட்டி மற்றொரு பயணியிடம் தவறுதலாகச் சென்றுவிட்டதை அடுத்து, அதைப் பெறுவதற்காக அவர் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மற்றொரு பயணியின் கைபேசி எண்ணை அந்நிறுவனத்தார் தர மறுத்தனர். இதையடுத்து, இண்டிகோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் நுழைந்து, தாமே அந்த எண்ணைப் பெற்றதாகவும் நந்தன் குமார் கூறியுள்ளார். ஆனால், இண்டிகோ இணையத்தளம் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

12ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கசிந்தது: 17 பேர் அதிரடிக் கைது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை அடுத்து, 24 மாவட்டங்களில் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிகளுக்கான மாவட்ட ஆய்வாளர் பிரிஜேஷ் குமார் உட்பட 17 பேர் கைதாகி உள்ளனர். இந்நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பிரிஜேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.