வியட்னாமில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் நீச்சலில் நேற்று மேலும் நான்கு தங்கப் பதக்கங்களை அள்ளியது.
மகளிர் 200 மீட்டர் எதேச்சைபாணி நீச்சலில் கான் சிங் ஹுவீ 2 நிமிடம் 2.06 நொடிகளில் முதலாவதாக வந்தார். சக சிங்கப்பூரர் சான் ஸி யிக்கு (2 நிமிடம் 3.21 நொடி) வெண்கலப் பதக்கம் கிட்டியது.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் புதியவரான லெட்டிஷியா சிம் 50 மீ. நெஞ்சு நீச்சலில் தங்கத்தைக் கைப்பற்றினார். அவர் 31.43 நொடிகளில் பந்தயத் தொலைவை நீந்திக் கடந்தார். இப்போட்டியில் 32.10 நொடிகளை எடுத்துக்கொண்ட இன்னொரு சிங்கப்பூரர் கிறிஸ்டி சியூவிற்கு வெண்கலம் கிட்டியது.
அதன்பின் நடந்த 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியில் ஒலிம்பிக் நாயகன் ஜோசஃப் ஸ்கூலிங் தொடர்ந்து ஐந்தாவது முறையாகத் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் சக சிங்கப்பூரர் குவா ஸெங் வென் வசமானது.
இறுதியாக நடந்த 4x100 மீ. கலப்பு பாணி அஞ்சல் நீச்சலில் குவா ஸெங் வென், ஜோசஃப் ஸ்கூலிங் உள்ளிட்டோர் அடங்கிய சிங்கப்பூர் ஆடவர் குழு தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்தது.
அத்துடன், சிங்கப்பூரின் கிளென் லிம் ஆடவர் 400 மீ. எதேச்சைபாணி நீச்சலில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

