ஆடல், பாடல், கதை வழி தமிழ் கற்ற சிறார்கள்

ஆடல், பாடல், கதை வழி தமிழ் கற்ற சிறார்கள்

2 mins read
784fc868-196f-49eb-949e-3469f71cfabe
-
multi-img1 of 4

பிள்ளைகளுக்குப் பிடித்த வகையில் கேலிச்சித்திர கதாபாத்திரங்களைக் கொண்டு தமிழில் 'அய்யோ... அந்த கிளி!' என்ற கதையைச் சொன்னார் எழுத்தாளர் திருவாட்டி அபி க்ரிஷ்.

அனைத்து இன சிறுவர்களும் கலந்துகொண்ட ஆங்கிலத்திலும் தமிழிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறார்கள் தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

தேசியக் கலை மன்றமும் 'தி ஆர்ட்ஸ் ஹவுஸும்' இணைந்து நடத்தும் 'மான்ஸ்ட்ரஸ் ஃபன்' என்ற நிகழ்ச்சித் தொகுப்பில் தமிழ்மொழி நிகழ்ச்சிகளில் ஒன்றாக 'அய்யோ... அந்த கிளி!' என்ற புத்தகத்தின் வாசிப்பு நிகழ்ச்சி ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

சிறார்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அன்பளிப்புப் பைகளில் இருந்த மணிகள், கைப்பாவை/பொம்மை ஆகியவற்றை வைத்து விளையாடி தமிழில் எழுதப்பட்டிருந்த கதையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

மற்ற சில கதைகளையும் பாடல்களையும் பாடி தமிழில் 'வணக்கம்', 'உறக்கம்', 'ஓடு' என எளிய தமிழ் வார்த்தைகளையும் சிறுவர்கள் கற்றுக்கொண்டனர்.

"மொழி எவ்வளவு அழகான ஒன்று என்பதை உணர்த்தவே 'நூல் மான்ஸ்டர்ஸ்' எனும் நிறுவனத்தை ஆரம்பித்தேன். இக்காலத்து சிறார்களுக்கு தமிழ் பிடிக்குமா என்று கேட்டால் பிடிக்காது. தமிழ் என்றால் பயம் என்று கூறுவதால் ஆங்கில கதைகளிலுள்ள அதே ஈர்ப்பை தமிழ்க் கதைகளிலும் கொண்டுவர வேண்டும். அதை சிறுவர்கள் படிக்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்," என்றார் திருவாட்டி அபி.

சிறு வயதிலிருந்தே பிள்ளைகளிடத்தில் தமிழ்மொழி ஆர்வத்தை வளர்க்க விருப்பம் உள்ள பெற்றோர் திருவாட்டி அபியின் 'நூல் மான்ஸ்டர்ஸ்' நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவர் எழுதிய கதைகளின் ஒலிப்பதிவுகள், காணொளிப் பதிவுகள், படங்கள் போன்ற பலவித படைப்புகளை இலவசமாகப்

பயன்படுத்தலாம்.

'அய்யோ! அந்த கிளி' என்ற புத்தகத்தை வாசித்துக்காட்டுகிறார் திருவாட்டி அபி க்ரிஷ். சிறுவர்களும் அவர் சொல்வதைப் பின்பற்றி கைகளை அசைத்து ஆடி, பாடி கற்றுக்கொள்கிறார்கள்.