சாரணியர் படை முகாம்

சாரணியர் படை முகாம்

4 mins read
8d870605-c579-42fb-9535-efe699966958
-
multi-img1 of 2

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சாரணியர் (கேர்ள்ஸ் கைட்) முகாம் கடந்த ஜூன் 1 முதல் 4ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.

முதல் இரண்டு நாள்களில் மெய்நிகர் மூலம் இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 1,990 மாணவிகள் கலந்துகொண்டனர். அடுத்த இரண்டு நாள்களில் சிங்கப்பூரில் சில பள்ளிகளில் மட்டும் நேரடியாக முகாம்கள் நடத்தப்பட்டன.

சாரணியராகச் சேவையாற்றியிருந்த அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராக மெய்நிகர் தளத்தில் கலந்துகொண்டு முகாமில் உரையாற்றினார்.

முகாமில் கலந்துகொண்ட அக்‌ஷயாஞ்சலி கலைச்செல்வன் கூறுகையில், "அதிபர் ஹலிமா யாக்கோப் தன்முனைப்பு அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டது என்னை மிகவும் கவர்ந்தது. சிங்கப்பூர் பெண்கள் கடந்த பத்தாண்டுகளில் கணிசமான அளவில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சிங்கப்பூர் ஒரு நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக மாற இன்னும் அதிகம் முயற்சி செய்ய வேண்டும். மாணவர்களின் சிறு செயல்களும் பெரிய மாற்றத்தை உருவாக்கக் கூடியவை என்பதையும் குறிப்பிட்டார்," என்று கூறினார். இவர் முதன்முதலாக இந்த முகாமில் கலந்துகொண்டவர்.

தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் அக்‌ஷயாஞ்சலி, 'பிரவுனீஸ்' (brownies) எனப்படும் இணைப்பாட நடவடிக்கையில் இருக்கிறார். முகாமிலிருந்து பல புதிய நட்புகள் உருவானதாகவும் சில எளிமையான சமையலைக் கற்றுக்கொண்டதாகவும் பெருமையுடன் கூறினார். நோய்த்தொற்று காரணமாகத் தொடக்கப்பள்ளியில் முகாம்களுக்குச் செல்லும் அனுபவத்தை இழந்த இவருக்கு இந்த முகாம் ஒரு வரமாக அமைந்தது என்றும் பகிர்ந்துகொண்டார்.

பிரவுனிகளைச் சேர்ந்த மாணவிகள் பாலின சமத்துவம் பற்றியும் வயது சற்று அதிகமுள்ள 'கேர்ள்ஸ் கைட்' மாணவிகள் பருவநிலை மாற்றம், மன ஆரோக்கியம் போன்றவற்றை விரிவாகக் கற்றுக்கொண்டனர்.

மேலும் இணையம் வழி சிரிப்பு யோகா, மென்மை யோகா, நாற்காலி யோகா போன்ற மன அமைதிப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டதோடு 'SheCan' இணையத்தளம் மூலம் மற்ற நாடுகளிலிருந்து கலந்துகொண்ட பிரவுனிகள், 'கேர்ள்ஸ் கைட்' மாணவிகளோடு பேசும் வாய்ப்பும் கிடைத்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

பள்ளியில் பருவநிலை மாற்றம் பற்றிக் கற்பித்தாலும் அது மேலோட்டமாகத்தான் இருக்கும் என்று கிறிஸ்லின் இன்பன்ட் ஹென்றி ஜான்சன், 13 குறிப்பிட்டார். முகாமில் தான் நுண் நெகிழிகள் பற்றிக் கற்றுக்கொண்டதாகவும் சமூக சீர்கேட்டின் தாக்கத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

நுண் நெகிழிகள் நம் உண்ணும் உணவு, இரத்தம் ஆகியவற்றில் இருப்பதைக் கேட்டுத் திடுக்கிட்டுப்போன அவர், அன்று முதல் நெகிழியின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பதாகக் கூறினார்.

வெஸ்ட்குரோவ் தொடக்கநிலை, ஜூரோங் கில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்ட நேரடி முகாமில் ஹவ்காங் தொடக்கப்பள்ளியில் பயிலும் ராகவி தமிழவேலும், 9, கலந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய பள்ளியில் 'பிரவுனிகள்' இணைப்பாட நடவடிக்கை இல்லை என்றும் ஆர்வத்தினால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் 'ஓலவ்' முதல் குழுவின் உறுப்பினர். மற்ற மாணவர்கள் 'கேம் ஃபையர்' முடிந்தவுடன் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் ராகவி தனிப்பட்ட முறையில் கலந்துகொண்டதால் அவர் இரவை 'கேர்ள்ஸ் கைட்' தலைமையகத்தில் கழித்தார்.

மற்ற மாணவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பைப் பெற்றதை எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். எதிர்காலத்தில் ஆசிரியராகவேண்டும் என்று குறிப்பிட்ட அவருக்கு இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகத் தெரிவித்தார்.

ஜூன் மூன்றாம் தேதி இரவு நிகழ்ந்த 'கேம் ஃபையர்' நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவிகள் கலந்துகொண்டனர். அதோடு ஜூன் நான்காம் தேதி மெதுவோட்டம் ஓடிக்கொண்டே குப்பை பொறுக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர். மற்ற பள்ளி மாணவர்கள், இணையம் வழி இந்நடவடிக்கைகளில் இணைந்துகொண்டனர்.

மூன்று ஆண்டுகள் இணைப்பாட நடவடிக்கையிலிருந்தும் இதுவரை முகாமிற்குச் சென்றிடாத ஜூரோங் ஹில் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கொசுறு இன்மயிஹாசினி, 15 குறுகிய காலகட்டத்தில் இந்த முகாம் பல இனிய நினைவுகளை உருவாக்கியதாகப் பகிர்ந்துகொண்டார். முகாமை முற்றிலும் விரும்பிய அவர் தனக்கு 'கேம் ஃபையர்' நடவடிக்கை அதிகம் பிடித்திருந்தது என்றார். மேலும் முகாம் ஏற்பாடு செய்திருந்த நடவடிக்கைகள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தந்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இறுதி நாள் இரண்டு மணி நேரம் நீடித்த மெதுவோட்டத்துடன் கூடிய குப்பை பொறுக்கும் நிகழ்வில் மூன்று பைகள் நிறைய குப்பைகளைப் பொறுக்கி இருந்தார். அன்றைய தினம் அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் பூங்காவில் கிடந்த குப்பைகளைப் பார்த்ததும் தானாகவே சென்று அந்த குப்பைகளைப் பொறுக்கி குப்பைத் தொட்டியில் போடும் நல்ல பண்புகளையும் நான் இந்த முகாமில் கற்றுக்கொண்டேன் என்றும் பகிர்ந்துகொண்டார்.

இவரைப்போல இந்த முகாமில் கலந்துகொண்டவர்கள் தங்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டு வரும்போது இந்த முகாம் வெற்றிகரமாக அமைந்தது என்பதை உணர முடிகிறது. நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற பயனுள்ள முகாம்களில் மாணவர்கள் கலந்துகொண்டு பல புது அனுபவங்களைப் பெறலாம்.

முகாமில் கலந்துகொண்டு மற்ற இன மாணவர்களுடன் எளிமையான சமையலைச் செய்து பார்க்கிறார் ஹவ்காங் தொடக்கப்பள்ளி மாணவியான

ராகவி தமிழவேல்.

முகாம்களில் தீ மூட்டுவதற்காக (கேம் ஃபையர்) மாணவிகள் மரக்கட்டைகளை அடுக்குகின்றனர்.