பறவைப் பூங்கா ஜூரோங்கில் இருந்து மண்டாய் வனவிலங்கு காப்பகத்திற்கு மாற இருக்கிறது. இந்த பறவைப் பூங்கா 1971ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூரோங் பறவைப் பூங்கா அதே ஜனவரி மாதம் 3ஆம் தேதி தன்னுடைய கதவுகளை மூட இருக்கிறது.
இறுதியாக ஜூரோங் பறவைப் பூங்காவைப் பார்வையிட விரும்புபவர்களுக்காக நவம்பர் 19ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரை உள்ளூர்வாசிகளுக்கு நுழைவுக்கட்டணம் 10 வெள்ளி என மண்டாய் வனவிலங்கு காப்பகம் அறிவித்துள்ளது.
இச்சூழலில் இப்பூங்காவின் பிரியர்கள் சிலர் தங்களின் மறக்க முடியாத அனுபவங்களையும் பூங்காவைப் பற்றிய சுவாரசிய நினைவலைகளையும் நம்மிடம் பகிர்ந்தனர்.
பறவைகளும் விலங்குகளும் அதிக புத்திக்கூர்மை உடையவை
மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் 'கிங்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் ஷோவின்' விலங்குகளுக்கான விளக்கக் காட்சிப் பகுதியில் மேலாளராக பணிபுரியும் சந்திரமோகன் இப்பூங்காவுடனான தன்னுடைய பந்தம் தன் சிறுவயதிலேயே தொடங்கியதாக கூறினார்.
இவருடைய மாமா தற்போது இவர் பணிபுரியும் அதே விலங்குகளுக்கான விளக்கக் காட்சிப் பகுதியில் முன்னாள் இயக்குநராக பணிபுரிந்தவர்.
பள்ளிக்காலத்திலேயே அடிக்கடி மாமாவுடன் இப்பூங்காவிற்கு வரும் மோகன், விரைவில் பறவைகளுடன் நெருங்கி பழகத் தொடங்கினார். பறவைகள் மீது கொண்டிருந்த பற்றால் தேசிய சேவையை முடித்த கையோடு 2000ஆம் ஆண்டில் பறவைப் பூங்காவில் வேலைக்குச் சேர்ந்தார்.
மூன்றாண்டு சேவைக்குப் பின் 2003ஆம் ஆண்டு வெளியேறிய இவர் மீண்டும் 2011ஆம் ஆண்டில் அந்த வேலையில் சேர்ந்தார். இவர் 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான சிங்கப்பூர் அனுபவ விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பறவைகளும் குழந்தைகள்போலத்தான். குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதைத் தாயால்தான் புரிந்துகொள்ள முடியும். அதுபோலத்தான் பறவைகளுடன் நெருங்கி பழகினால் அவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். எதையுமே எதிர்பார்க்காமல் நம்மிடம் நேசமுடன் இருக்கும் பறவைகளுடன் பழகும் வாய்ப்பு இப்பூங்காவில்தான் எனக்கு முதலில் கிடைத்தது. பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் இப்பூங்கா மூடப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இங்குள்ள பென்குவின் பறவைகள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலும் குக்கீ என்ற ஆப்பிரிக்க பென்குவின் என்னை கடித்தது எனக்கு இப்போதும் நினைவு இருக்கிறது. இன்று இதே பென்குவின் என் கட்டளைகளுக்கு கீழ்படிவதும் என் மீது உண்மையான அன்பைக் காட்டுவதும் நான் சம்பாதித்த பெரிய சொத்தாக நினைக்கிறேன்.
பெனாசிர் பேகம்
உயிர்மருத்துவ அறிவியல் பட்டயம்
மனிதர்களைப் போல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் இவ்வுலகம் சொந்தமானது. அவர்களுக்கு ஏற்ற வகையிலும் நாம் இயற்கையை பேணிக் காக்க வேண்டும். அதற்கான எனது பங்கை நான் ஆற்ற வழிவகுத்த இப்பறவைப் பூங்கா என்றென்றும் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. இங்கு நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்.
நாள்: நவம்பர் 17 - ஜனவரி 2 வரை
இடம் : பென்குயின் கோஸ்ட் & பேர்ட்ஸ் ஆஃப் பிளே
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை.
நாள்: நவம்பர் 19 - ஜனவரி 3 வரை
இடம்: வாகனத்தில் வழிகாட்டு சுற்றுலா
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 2.30 முதல் மாலை 4 மணிவரை.
மேல் விவரங்களுக்கு tours@mandai.com தொடர்புகொள்ளலாம்.
பறவைகளுடன் அதிக நேரம் செலவிடுவது ஒருவித மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மனிதர்களைவிட பறவைகளும் விலங்குகளும் அதிக புத்திக்கூர்மையும் பாசமும் உடையவை. ஒவ்வொரு நாளும் பணிக்கு செல்வதே எனக்கு சுற்றுலா செல்வது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தும். என் வாழ்வின் பெரும்பகுதியை நான் இப்பூங்காவில் கழித்திருக்கிறேன். புதிய இடத்திற்குச் செல்வது மகிழ்ச்சி என்றாலும் ஜூரோங் பறவைப் பூங்கா மூடப்படுவது என்னுள் ஒரு பகுதியை இழப்பதற்கு ஈடாகக் கருதுகிறேன்.
சந்திரமோகன்
'கிங்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் ஷோவின்' விலங்குகளுக்கான விளக்கக் காட்சிப் பகுதியின் மேலாளர்

