வெற்றியாளரைக் கணித்த நீர்நாய்

2 mins read
6eb266c5-f447-4533-9f31-cc82e96ee4ea
-
multi-img1 of 2

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மனிதர்கள் கணித்து (ஜோதிடம்) சொல்வதைவிட விலங்குகள் கணித்து சொல்வது பிரபலமாகி விட்டது.

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தற்பொழுது கத்தாரில் நடைபெற்று வருகின்றன. அதில் சென்ற புதன்கிழமை நடந்த போட்டியில் ஜெர்மனியும் ஜப்பானும் போட்டியிட்டன.

அந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கணிக்க மூன்று குவளைகள் வைக்கப்பட்டன. அந்த மூன்றில் ஒன்று ஜப்பான், மற்றொன்று ஜெர்மனி நாட்டுக் கொடிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

டாயோ என்ற நீர்நாயிடம் சிறிய பந்து ஒன்றைக் கொடுத்தனர். அது அந்தப் பந்தைத் தூக்கிச் சென்று ஜப்பான் கொடி ஒட்டப்பட்டு இருந்த குவளையில் போட்டது.

அது போட்டதுபோலவே அன்றைய ஆட்டத்தில் ஜப்பான் இரண்டு கோல் போட்டு ஜெர்மனியை வென்றது. டாயோ தற்பொழுது 'பால்' எனும் பெயர்கொண்ட ஆக்டோபஸ்போல பிரபலமாகிவிட்டது.

'பால்' என்ற ஆக்டோபஸ் 2010ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினும் ஹாலந்தும் போட்டியிட்டன.

அந்தப் போட்டியில் யார் வெற்றி பெற்று தங்கக் கோப்பையைப் பெறுவார்கள் என்று பல நாடுகள் ஆவலுடன் காத்திருந்தன.

இரண்டு நீர் நிரப்பப்பட்ட கண்ணாடித் தொட்டிகளில் ஸ்பெயின், ஹாலந்து நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

பால் மெதுவாக ஊர்ந்து சென்று ஸ்பெயின் நாட்டுக் கொடி ஒட்டப்பட்டிருந்த நீர்த்தொட்டிக்குள் புகுந்தது.

அது கணித்ததுபோலவே அந்த ஆண்டு ஸ்பெயின் வெற்றிபெற்று உலகக் கிண்ணக் காற்பந்துக்கான கோப்பையைத் தட்டிச் சென்றது.

பால் அந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் எட்டு முறை வெற்றியாளரைக் கணித்து பிரபலமானது.

பால் போல டாயோவும் இனி வரும் போட்டிகளில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.