பள்ளி விடுமுறையில் வெளிநாடு செல்லவில்லை என்றாலும் சிங்கப்பூரில் குடும்பத்துடன் சேர்ந்து செல்ல பல நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்த டிசம்பர் மாத விடுமுறையை எப்படி கழிக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் சிறுவர்களும் பெற்றோரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய இடங்கள் சில.
இந்த விடுமுறையை குடும்பத்தாருடனும் நண்பர்களுட னும் இணைந்து கொண்டாடி மகிழுங்கள்!
டிசம்பர் மாதம் முழுவதும், குளிர்காலத்தை சிங்கப்பூரிலேயே அனுபவிக்கலாம். 'பே ஃப்ரண்ட்' நிகழ்ச்சி இடத்தில் அமைந்திருக்கும் இந்த விளையாட்டரங்கத்தில், பனிக்கட்டியால் செய்த சறுக்கி விளையாடும் பலகை, பனி சிற்பங்கள், பனி மேசை, நாற்காலிகள் என்று பலவற்றை சிறுவர்கள் கண்டு மகிழலாம்.
இடம்: குளிர்கால விளையாட்டரங்கம்
நேரம்: காலை 10 முதல் பிற்பகல் 2 வரை, பிற்பகல் 3 முதல் இரவு 7 வரை, இரவு 7 முதல் 10 மணி வரை.
தேதி: 1 டிசம்பர் 2022 - 1 ஜனவரி 2023
சிங்கப்பூர் டிஸ்கவரி மையத்தில் பல்வேறு நடவடிக்கைகள் சிறுவர்களுக்கு இலவசமாக திட்டமிடப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் மரம், தேடல் பயணம், நின்றுகொண்டு ஆடும் பெரிய பரமபதம், 'பௌன்சி காஸில்' போன்ற நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடலாம். மையத்தில் ஜூனியர் சுற்றுலா வழிகாட்டி கட்டண பயிலரங்கம் ஒன்றும் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்: சிங்கப்பூர் டிஸ்கவரி மையம்
நேரம்: காலை 11 முதல் இரவு 8 மணி வரை
தேதி: 21 நவம்பர் 2022 - 2 ஜனவரி 2023
பல நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் கற்றல் பயணங்களுக்குச் சிறுவர்கள் பதிந்துகொள்ளலாம். உதாரணமாக, 'பென்குவின் இண்டர்நேஷனல்' என்ற நிறுவனத்தின் கப்பல் தளத்திற்குச் சென்று கப்பல் பற்றியும் கப்பல் சார்ந்த வேலைகள் பற்றியும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளலாம். கற்றல் பயணங்களில் செல்ல 'லிட்டில் டே அவுட்' இணையத்தளத்தில் பதிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூர் பூமலையில் இரவில் ஒளியூட்டப்பட்ட மரங்களைக் கண்டு மகிழலாம். சிற்ப வேலைகளையும் இந்த ஒளி வெளிச்சத்தில் கண்டு ரசிக்கலாம். இங்கு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, விழாக்கால விளக்குகள் மற்றும் அலங்காரங்களும் இருக்கும்.
இடம்: ஒளியூட்டப்பட்ட பூங்கா
நேரம்: 4 டிசம்பர் 2022 - 2 ஜனவரி 2023

