உடற்பயிற்சிக் கூடங்கள், மன்றங்களில் (கிளப்ஸ்) உறுப்பினராக சேர இலவச அனுமதி, நிறுவனத்தால் கொடுக்கப்படும் ஆரோக்கியமான மதிய உணவு, நீடிக்கப்பட்ட விடுமுறைகள் போன்ற நன்மைகளை அனுபவிக்க ஒருவர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக அல்லது நிர்வாகக் குழுவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஆனால், ராயல் கிங்ஸ் குரூப்ஸ் சிங்கப்பூர் நிறுவனத்தில் உள்ள தேசிய சேவை புரியும் ஊழியர்கள் இதே நன்மைகளை அனுபவிக்கலாம். எந்தப் பதவி
யில் இருப்பவர்களும் இந்தச் சலுகைகளைப் பெறலாம்.
தேசிய சேவைக்கு அது வழங்கும் ஆதரவு தனது நிறுவனத்தின் முக்கிய கொள்கையாக உள்ளது என்று ராயல் கிங்ஸ் குரூப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு சிராஜ்தீன் செய்யது முஹம்மது, 44, கூறினார்.
ராயல் கிங்ஸ் நிறுவனம் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. தேசிய சேவை புரிபவர்களுக்கு பலவித சலுகைகளை அளித்து ஆதரிக்கும் இந்த நிறுவனத்திற்கு 'என்எஸ் மார்க்' (கோல்ட்) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் தேசிய அளவில் கொடுக்கப்படும் ஒரு விருது.
தேசிய சேவையை ஆதரித்து முழுமைத் தற்காப்பைப் பரிந்துரைக்கும் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் இவ்விருது வழங்கப்படும்.
வணிக நிறுவனங்கள் தங்களின் கொள்கைகள், நடை
முறைகள், பணியிடத்தில் தேசிய சேவைக்கான தங்கள் ஆதரவைக் காட்டும் முயற்சிகள் பற்றிய விவரங்களை தற்காப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கலாம்.
மதிப்பாய்வுக்குப் பிறகு நிறுவனத்தின் முயற்சிகள் போதுமானதாகக் கருதப்பட்டால் இந்த அங்கீகாரம் வழங்கப்படும். இந்த அங்கீகாரத்தில் இரண்டு வகைகள் உள்ளன. 'என்எஸ் மார்க்' விருது அதில் ஒன்று.
'என்எஸ் மார்க்' (கோல்ட்) அங்கீகாரம் என்ற மற்றொரு விருது, தேசிய சேவையை ஆதரிக்கும் வகையில் எதிரிபார்ப்புக்கும் அதிகமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
'என்எஸ் மார்க் (கோல்ட்)' அங்கீகாரத்தைப் பெற்ற நிறுவனங்களுக்கு மின்சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், உள்துறை அமைச்சு, தற்காப்பு அமைச்சு சேர்ந்து நடத்தும் தொழில் கண்காட்சிகளுக்கு இந்நிறுவனங்கள் அழைக்கப்படும்.
இதில், தேசிய சேவை சார்ந்த கொள்கைகளையும் நடைமுறை
களையும் ஆதரிக்கும் நிறுவனங்களில் முன்மாதிரியாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் தற்காப்பு, உள்துறை அமைச்சுக்களால் குறிப்பிடப்படும். மேலும், என்எஸ் மார்க் (கோல்ட்) அங்கீகாரத்தைப் பெற்ற நிறுவனங்கள் முழுமைத் தற்காப்பு தொடர்பான விருதை யும் பெற வாய்ப்பு உண்டு.
இவ்விருது நாட்டின் தற்காப்பை வலுப்படுத்த உதவும் முன்மாதிரி யான தனி நபர்களுக்கும் நிறு
வனங்களுக்கும் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருது.
தற்காப்பு அமைச்சர் உபசரிப்பில், மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட இரவு விருந்தின்போது இந்த மதிப்புமிக்க விருது நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனால், ராயல் கிங்ஸ் குரூப்ஸ் நிறுவனம் தேசிய சேவைக்கு ஆற்றிய ஆதரவையும் அங்கீகாரத்தையும் கருத்தில் கொண்டு 'என்எஸ் மார்க்ஸ்' விருதுக்கு நிறுவனம் தன் பெயரை சமர்ப்பித்தது என்று திரு சிராஜ்தீன் கூறினார்.