இந்திய பிரியாணி வகைகளை சிங்கப்பூருக்குக் கொண்டுவரும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது ஆம்பூர் பிரியாணி உணவகம். 2016 முதல் கஃப் சாலையில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி, ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் வண்ணம் செயற்கை நிறங்கள், அதிக எண்ணெய், டால்டா ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் உணவைத் தயாரித்து வருகிறது.
பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மசாலா கலவையுடன் சமைக்கப்படும் ஆம்பூர் பிரியாணியின் பிரியாணி வகைகளுடன், செட்டிநாட்டு உணவு, தோசை வகைகள் முதலிய பலதரப்பட்ட தனித்துவமான இந்திய உணவு வகைகள் இங்கு பிரபலமாகி உள்ளன.
இதற்கு தொடக்கமாக அமைந்தது, ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் நிறுவனரும் உரிமையாளருமான திரு முத்துசாமி இந்தியாவுக்குச் சென்று அங்கு கிடைத்த பிரியாணி வகைகளைச் சுவைத்ததே. அதுவரை 'தம்' பிரியாணி வகையைப் பெரிதும் சுவைத்திராத அவரிடத்தில், அச்சுவையையும் மணத்தையும் சிங்கப்பூருக்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
இந்தியாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆம்பூர் பிரியாணியின் தலைமை சமையல்காரர் உள்ளிட்ட அதன் சமையல், விருந்தோம்பல் குழு உணவு தரத்தை முதன்மையாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பயன்
படுத்தவும் கட்டுப்படியாகும் விலையில் உணவு வகைகளை வழங்கவும் ஆம்பூர் பிரியாணி முயற்சி செய்து வருகிறது.
"உறவும் நட்பும் உணவோடு கலந்தது என்ற வாசகத்துடன் வாடிக்கையாளர்களை வரவேற்கிறது ஆம்பூர் பிரியாணி. இந்தியாவில் கிடைக்கும் உண்மையான தரத்திலான பிரியாணியை சிங்கப்பூரில் உள்ளோர் சுவைக்க வாய்ப்பளிக்கவே நாம் தொடங்கினோம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, சாப்பிட்டுக்கொண்டே இருக்கக்கூடிய பிரியாணி வகைகளை மக்கள் இங்கு எதிர்பார்க்கலாம்," என்றார் ஆம்பூர் பிரியாணி உணவக நிறுவனரும் உரிமையாளருமான திரு முத்துசாமி, 38.
கஃப் சாலையில் மட்டுமன்றி, பெஞ்சுரு பகுதியிலும் தற்போது ஆம்பூர் பிரியாணி கடந்த ஐந்து மாதங்களாக இயங்கி வருகிறது. ஜூரோங், துவாஸ் பகுதிகளில் வசிப்போருக்கு, குறிப்பாக அங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆம்பூர் பிரியாணியைக் கொண்டு சேர்க்க இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா வரை பயணம் செய்ய சிரமப்படுவோர் இங்கு வந்து நல்ல வரவேற்பு தந்துள்ளதாகக் கூறினார் திரு முத்துசாமி.
திருமணம், பிறந்தநாள் விழா முதலிய பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஆம்பூர் பிரியாணி சேவை வழங்கி வருகிறது.
சைவ, அசைவ, நனிசைவ முறையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உணவுப் பட்டியலைத் தயாரித்துக் கொடுக்கவும் ஆம்பூர் பிரியாணி முயற்சி எடுத்து வருகிறது.
இதனால் தனித்துவமான உணவு பாணிகளையும் புதுமையான உணவு தெரிவுகளையும் வழங்கி வந்துள்ளது இந்த உணவகம்.
"நிகழ்வுகளுக்கு பருத்திப்பால், கலவை பாணியிலான ஹக்கா நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் முதலிய தனித்துவமான உணவு வகைகளையும் நாங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தயாரித்து தருகிறோம். சிங்கப்பூர் இந்திய பாணியிலான உணவு வகைகளையும் முன்னர் தயாரித்துள்ளோம்.
"இயற்கைக்கு உகந்த வகையில் நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் தட்டுகள் கொடுப்பதை விடுத்து தொன்னை, பாக்கு மட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி வரு
கிறோம்," என்றார் திரு முத்துசாமி.
இவ்வாண்டு, புதிதாக வாழையிலை பரோட்டா, ஆந்திரா, கேரளா பாணிஉணவு வகைகள் ஆம்பூர் பிரியாணி கடையில் அறிமுகமாக இருக்கின்றன.
தொடர்ந்து புதுப்புது சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, மக்களின் விருப்பங்களை அறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளது ஆம்பூர் பிரியாணி.
2018ல் வீட்டு விநியோகச் சேவையை தொடங்கிய ஆம்பூர் பிரியாணிக்கு, கொவிட்-19 காலத்தில் அது பெரிதும் கைகொடுத்தது. நேரடி வாடிக்கையாளர்கள் இல்லாத அச்சமயத்தில் பல விநியோகச் சிக்கல்கள் ஏற்பட்ட போதிலும், தொடர்ந்து திங்கள் முதல் ஞாயிறு வரை இயங்க முயற்சி செய்தே வந்தனர் ஆம்பூர் பிரியாணி குழுவினர்.
'ஃபைன் டைனிங்' கிளையைத் தொடங்குவது ஆம்பூர் பிரியாணியின் வருங்காலத் திட்டம். அதோடு, விரைவில் ஆஸ்திரேலியாவில் கால்பதிக்கவும் அது முயன்றுவருகிறது.

