நீண்டகால பராமரிப்புச் செலவினம் குறித்த கவலையா?
2020ல் தொடங்கப்பட்ட கேர்ஷீல்ட் லைஃப், தீவிர உடல் குறைபாடுகளால் ஏற்படும் செலவினத்தைக் குறைக்க மாதாந்திர வழங்குதொகைகளை அளிக்கும் ஒரு தேசிய உடல் குறைபாடு காப்பீடு திட்டமாகும்.
கேர்ஷீல்ட் லைஃப்பால் பயனடைவோர் யார்? எனது பெற்றோரின் சார்பில் நான் கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாமா?
1980இல் அல்லது அதற்கு பின்னர் பிறந்த சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்தோ, அல்லது 30 வயதானதன் பின்னோ, (எது பின்னர் வருகிறதோ) கேர்ஷீல்ட் லைஃப்பில் தாமாகவே இணைக்கப்படுவர்.
எல்டர்ஷீல்ட் 400 திட்டத்தில் இருந்துகொண்டு, தீவிர உடற்குறை இல்லாத 1970க்கும் 1979க்கும் இடையே பிறந்தோர், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து கேர்ஷீல்ட் லைஃப்பில் தாமாகவே இணைக்கப்பட்டுள்ளனர்.
கேர்ஷீல்ட் லைஃப்பில் தாமாகவே இணைக்கப்படாதோர் அதில் பதிவு செய்துகொள்ளலாம். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்வோர், அடுத்த பத்தாண்டுகளுக்கான காப்புறுதி சந்தாக்களைச் செலுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து $4,000 வரை பெறலாம்.
கேர்ஷீல்ட் லைஃப்பில் பதிவு செய்துகொள்ள உங்களது பெற்றோரை நீங்கள் ஊக்குவிக்கலாம், வழிகாட்டலாம்.
உங்களது மெடிசேவ்வை பயன்படுத்தியோ, அவர்களது மெடிசேவ் கணக்கில் பணம் நிரப்பியோ, அவர்களது காப்புறுதி சந்தா தொகையை செலுத்துவதற்கு உதவலாம்.
கேர்ஷீல்ட் லைஃப்புக்கான காப்புறுதி சந்தா தொகை எவ்வளவு? இத்தொகை வரும் ஆண்டுகளில் உயருமா?
வயது, பாலினம், எல்டர்ஷீல்ட் காப்புறுதி கொண்டுள்ளனரா, கேர்ஷீல்ட் திட்டத்தில் இணைந்துகொண்ட ஆண்டு, என பல காரணிகளின் அடிப்படையில் கேர்ஷீல்ட் லைஃப்புக்கான காப்புறுதி சந்தா தொகை நிர்ணயிக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் செலுத்தவேண்டிய காப்புறுதி சந்தா வயதாக ஆக உயரும். அரசாங்கம் செய்யும் வழக்கமான மாற்றங்களைப் பொறுத்தும் அது உயரக்கூடும்.
www.careshieldlife.gov.sg எனும் தளத்தில் உள்ள 'கேர்ஷீல்ட் லைஃப் பிரீமியம் செக்கர்' மின்சேவையைப் பயன்படுத்தி உங்களது காப்புறுதி சந்தா எவ்வளவு என்பதை சரிபார்க்கலாம். இப்போதிலிருந்து 2025 வரை, காப்புறுதி சந்தாக்கள் (பொருள், சேவை வரி இல்லாமல்) 67 வயதுக்கு கீழுள்ளோருக்கு ஆண்டுதோறும் 2 விழுக்காடு உயரும்.
2025க்குப் பின், காப்புறுதி சந்தாக்களின் உயர்வு தனியார் கேர்ஷீல்ட் லைஃப் மன்றத்தால் குறிப்பிட்ட ஒரு கட்டமைப்பின்படி பரிந்துரைக்கப்படும்.

