வாடிக்கையாளர்கள் இவ்வாண்டு நடுப்பகுதி முதல் பொருள்கள் வாங்கும்போது பெரும்பாலான பேரங்காடிகள் கூடுதலாக ஐந்து காசு அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணத்தை பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கும். இது தொடர்பான திருத்தப்பட்ட புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகள், காகிதப் பைகள் போன்றவற்றுக்கு 'என்டியுசி ஃபேர்பிரைஸ்', 'கோல்ட் ஸ்டோரேஜ்', 'ஜயன்ட்', 'ஷெங் சியோங்', 'பிரைம்' ஆகிய பேரங்காடிகள் இந்தக் கட்டணத்தை வசூலிக்க உள்ளன.
வள நீடித்த நிலைத்தன்மைச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் பல்வேறு சட்டத் திருத்தங்களில் இது ஒன்றாகும். சிங்கப்பூரில் பொட்டலமிடும் வழக்கத்தையும் உணவு விரயத்தையும் குறைப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2021ல் சிங்கப்பூரின் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் ஆறு விழுக்காடு மட்டுமே மறுபயனீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
"குறைந்தபட்சக் கட்டண விதிப்பு முடிந்தவரை குறைவாக இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் தொடர்பான தாக்கம் அதிகம் இருக்காது. அத்துடன் ஒரு முறை பயன்படுத்தப்படும் பைகளின் பயன்பாடு தொடர்பில் அவர்கள் மேலும் கவலையுடன் நடந்துகொள்வதை இது ஊக்குவிக்கும்," என்று தேசிய சுற்றுப்புற வாரியமும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
பைகளுக்குக்கான கட்டண விதிப்பு நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய சில நிபந்தனைகளைப் பேரங்காடிகள் நிறைவுசெய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட பைகளின் எண்ணிக்கை, கட்டணத்திலிருந்து பெறப்பட்ட தொகை, அந்தத் தொகை எவ்வாறு இதர தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது போன்றவற்றை நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
பானங்களைக் கொண்ட போத்தல்களையும் உலோக டின்களையும் மறுபயனீடு செய்யும் விகிதத்தை அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் உயர்த்த, 10 முதல் 20 காசு விலையேற்றமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உணவுக் கழிவைக் கையாளும் முயற்சியாக தொழில்துறையும் வர்த்தக இடங்களும் தங்களின் உணவுக் கழிவை அடுத்த ஆண்டு முதல் பிரித்துவைக்க வேண்டும். ஆண்டுதோறும் திரட்டப்படும் உணவுக் கழிவில் இவ்விடங்களால் உருவானவை சுமார் 40 விழுக்காடாகும்.

