பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு கட்டண விதிப்பு

பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு கட்டண விதிப்பு

2 mins read
f2274a37-a5d7-4c3f-a350-b604c28fd191
-

வாடிக்­கை­யா­ளர்­கள் இவ்­வாண்டு நடுப்­ப­குதி முதல் பொருள்­கள் வாங்­கும்­போது பெரும்­பா­லான பேரங்­கா­டி­கள் கூடு­த­லாக ஐந்து காசு அல்­லது அதற்கு மேற்­பட்ட கட்­ட­ணத்தை பிளாஸ்­டிக் பைக­ளுக்கு விதிக்­கும். இது தொடர்­பான திருத்­தப்­பட்ட புதிய சட்ட மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது. பிளாஸ்­டிக் பைகள், காகி­தப் பைகள் போன்­ற­வற்­றுக்கு 'என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ்', 'கோல்ட் ஸ்டோ­ரேஜ்', 'ஜயன்ட்', 'ஷெங் சியோங்', 'பிரைம்' ஆகிய பேரங்­கா­டி­கள் இந்­தக் கட்­ட­ணத்தை வசூ­லிக்க உள்­ளன.

வள நீடித்த நிலைத்­தன்­மைச் சட்­டம் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்ட மசோ­தா­வின் பல்­வேறு சட்­டத் திருத்­தங்­களில் இது ஒன்­றா­கும். சிங்­கப்­பூ­ரில் பொட்­ட­ல­மி­டும் வழக்­கத்­தை­யும் உணவு விர­யத்­தை­யும் குறைப்­ப­தற்கு இந்­தச் சட்­டத்­தி­ருத்­தங்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 2021ல் சிங்­கப்­பூ­ரின் மொத்த பிளாஸ்­டிக் கழி­வு­களில் ஆறு விழுக்­காடு மட்­டுமே மறு­ப­ய­னீடு செய்­யப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

"குறைந்­த­பட்­சக் கட்­டண விதிப்பு முடிந்­த­வரை குறை­வாக இருக்­கும். இத­னால் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கட்­ட­ணம் தொடர்­பான தாக்­கம் அதி­கம் இருக்­காது. அத்­து­டன் ஒரு முறை பயன்­ப­டுத்­தப்­படும் பைக­ளின் பயன்­பாடு தொடர்­பில் அவர்­கள் மேலும் கவ­லை­யு­டன் நடந்­து­கொள்­வதை இது ஊக்­கு­விக்­கும்," என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சும் கூட்­டாக வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

பைக­ளுக்­குக்­கான கட்­டண விதிப்பு நடை­முறை வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் இருப்­பதை உறு­தி­செய்ய சில நிபந்­த­னை­க­ளைப் பேரங்­கா­டி­கள் நிறை­வு­செய்ய வேண்­டும்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பைக­ளின் எண்­ணிக்கை, கட்­ட­ணத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட தொகை, அந்­தத் தொகை எவ்­வாறு இதர தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது போன்­ற­வற்றை நிறு­வ­னங்­கள் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.

பானங்­க­ளைக் கொண்ட போத்­தல்­க­ளை­யும் உலோக டின்­க­ளை­யும் மறு­ப­ய­னீடு செய்­யும் விகி­தத்தை அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­திக்­குள் உயர்த்த, 10 முதல் 20 காசு விலை­யேற்­ற­மும் விதிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. உண­வுக் கழி­வைக் கையா­ளும் முயற்­சி­யாக தொழில்­து­றை­யும் வர்த்­தக இடங்­களும் தங்­க­ளின் உண­வுக் கழிவை அடுத்த ஆண்டு முதல் பிரித்­து­வைக்க வேண்­டும். ஆண்­டு­தோ­றும் திரட்­டப்­படும் உண­வுக் கழி­வில் இவ்­வி­டங்­க­ளால் உரு­வா­னவை சுமார் 40 விழுக்காடாகும்.