வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்காக அஞ்சல்வழி வாக்களிக்கக்கூடும். நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது சாத்தியமாகும்.
இதன்படி, வெளிநாடுகளில் குறிப்பிட்ட சில நகர்களில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளர்கள் நேரடியாகச் செல்லத் தேவையில்லை. 2020 பொதுத் தேர்தலின்போது பயணக் கட்டுப்பாடுகளுக்கிடையே வெளிநாட்டு வாக்காளர்கள் சிலர் வாக்களிக்கவில்லை.
புதிய சட்ட மசோதா வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்களுக்கு வாக்களிக்க மேலும் வசதியாக இருக்கும் என்று தேர்தல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கைவழி தெரிவித்தது.
தேர்தலுக்கு முன் வாக்காளர் பதிவேடு திருத்தி அமைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தேர்தல் பதிவகத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு வாக்காளர்கள் என மீண்டும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யத் தேவை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் ஏறத்தாழ 200,000 சிங்கப்பூரர்கள் வசிக்கிறார்கள்.
2020 பொதுத் தேர்தலின்போது பதிவான 6,570 வெளிநாட்டு வாக்காளர்களில் 4,794 பேர் வாக்களித்தனர்.
சட்டத்திருத்த மசோதாவை பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக் குழு விவாதங்களுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் இதன் இரண்டாவது வாசிப்பு நிகழும் என்றார்.
வாக்களிப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல், தேர்தல் விளம்பரச் சட்டங்களை மாற்றுதல், தேர்தல் செயல்முறைகளை வலுவாக்குதல் ஆகியவை தொடர்பில் முக்கியச் சட்டத்திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
புதிய திருத்தச்சட்டங்களின்கீழ் தாதிமை இல்லங்களில் வாக்களிப்பு நிலையங்கள், நடமாடும் வாக்களிப்புக் குழுக்கள் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளில் 16 வயதுக்கும் குறைந்தோர் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படும். சிறார்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை இது தவிர்க்க உதவும் என்று கூறப்பட்டது.
தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்வதிலும் மாற்றங்கள் இருக்கும்.

