புதுடில்லி: புதுடில்லியில் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் நேற்று விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ இரண்டாவது முறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
ஆனால் டெல்லிக்கு தற்போது முக்கிய தருணம் என்பதால் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து இம்மாத இறுதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். எனவே நீதிமன்றத்தில் முன்னிலையாகும் தேதியை மாற்றி வைக்கும்படி சிபிஐயிடம் மணீஷ் சிசோடியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ, புதிய தேதியுடன் அழைப்பாணை அனுப்புவதாகக் கூறியுள்ளது. டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதையடுத்து மணீஷ் சிசோடியா மற்றும் 14 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கடுமையாக மறுத்தது. ஆம் ஆத்மியை உடைக்க தன்னுடன் பாஜக பேரம் பேசியதாக மணீஷ் சிசோடியா பொதுவெளியில் கூறியதைத் தொடர்ந்து, தன் மீது வீண் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக அவர் கூறி வருகிறார். இந்த வழக்கில் ஆந்திரா ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்பி மகுண்டா சீனிவாச ரெட்டி யின் மகன் ராகவ்வையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அதேபோல் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் சிபிஐ விசாரணை செய்தது.