யானையைக் காப்பாற்றிய
அதிகாரிகளுக்குப் பாராட்டு
புதுடெல்லி: மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய காட்டு யானையைக் காப்பாற்றிய கால்நடை மருத்துவர்களையும் வனத்துறை அதிகாரிகளையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பாரகி அருகே பந்திப்பூர் வனப்பகுதி எல்லைக்குட்பட்ட ஓம்காரா வனப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருந்ததால் அங்குள்ள விவசாயி ஒருவர், தனது தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார்.
இதில் காட்டு யானை ஒன்று சிக்கி படுகாயம் அடைந்தது. அங்கு வந்த மருத்துவக் குழுவினர் பத்து மணி நேரம் தொடர்ந்து சிகிச்சை அளித்து யானையைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் காட்டு யானையின் உயிரைக் காப்பாற்றிய பந்திப்பூர் வனத்துறையினரையும் மருத்துவக் குழுவினரையும் பிரதமர் மோடி, மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் படத்தையும் வெளியிட்டு இதனைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
'பயங்கரவாதச் சம்பவங்கள்
80 விழுக்காடு குறைந்தன'
மும்பை: பிரதமர் மோடியின் ஆட்சியில் பயங்கரவாதச் செயல்கள் 80 விழுக்காடு குறைந்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜவஹர்லால் டார்டாவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் பங்கேற்று அவர் பேசினார்.
"பிரதமர் மோடி ஆட்சிக்கு முன்பு வரை காஷ்மீர், வடகிழக்கு மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் உள்நாட்டுப் பாதுகாப்பு சவால்களைச் சந்தித்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இன்று காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி, இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 விழுக்காடு அளவுக்கு குறைந்திருப்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்," என்று அமைச்சர் அமித் ஷா கூறினார்.
கேரளாவில் பேருந்து கவிழ்ந்து
16 மாணவர்கள் காயம்
புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்திற்கு களப் பயணத்திற்காக, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்றனர்.
மாணவர்கள் சனிக்கிழமை மாலை பேருந்தில் கட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
பன்னா மாவட்டத்தில் உள்ள குவாகேடா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் உயிரிழந்தார்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 32 மாணவர்களில் 16 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் ராய்புரா அரசு மருத்துவமனையில் முதன்மை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் தலையில் படுகாயமடைந்த மாணவர் உட்பட இருவர் மேல் சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் உடடினயாகத் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

