பண நெருக்கடி, சிதறிய குடும்பம் என வெவ்வேறு குடும்பப் பின்னணிகளைச் சேர்ந்த தன் சக மாணவர்களைச் சந்தித்தபோது அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற சேவை உணர்வு கிலோடியாவுக்குள் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பொறியியல் துறையில் பயின்ற அவர், எளிதில் பாதிப்படையக்கூடிய இளையர்களுக்காக தன் நேரத்தை அர்ப்பணிக்க முடிவெடுத்தார். அதையே தனது வாழ்க்கைத்தொழிலாக அமைத்துக்கொள்ள எண்ணி, தொழில்நுட்பக் கல்விக்கழகப் படிப்புக்குப் பின் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சமூக மேம்பாட்டுப் பட்டயப்படிப்பை மேற்கொண்டார்.
சிங்கப்பூரின் சமூக சேவைத் துறைக்கு இளையர்களைத் தயார்ப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த பட்டயப்படிப்பு. வர்த்தகம், சமூக நிறுவனம், உளவியல், புத்தாக்கம் ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்த இப்பட்டயத்துக்கான பாடத்திட்டம் கிலோடியாவுக்குப் பயனுள்ளதாக அமைந்தது.
பொறியியல் துறை சார்ந்த வேலையில் இருக்கும் வேலைப் பாதுகாப்பும் ஊதியமும் சமூக சேவைத் துறையில் குறைவு என்று பெற்றோர் கூறியும் தனது முடிவிலிருந்து கிலோடியா பின்வாங்கவில்லை. தற்போது 'அக்செஸ்' அமைப்புடன் இணைந்து வசதிகுறைந்த இளையர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார் கிலோடியா.
"சேவை உள்ளம் கொண்ட மற்ற இளையருடன் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உணவு இடைவேளையின்போது தொண்டூழியத்தைப் பற்றியும் சிங்கப்பூரின் சமூக சூழலைப் பற்றியும் நாங்கள் இயல்பாகப் பேசுவது எனக்குப் பெரும் ஊக்குவிப்பாக உள்ளது," என்றார் 21 வயது கிலோடியா ரூத் செல்வக்குமார்.
கிலோடியா மேற்கொண்ட அதே சமூக மேம்பாட்டுப் பட்டயப்படிப்பை ரிஷிகாவும் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்காற்ற இப்படிப்பு தனக்குத் தூண்டுகோலாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். அந்த ஆர்வம் அவரை எகிப்து நாட்டின் ஐக்கிய நாட்டு சபையின் பருவநிலை மாற்ற மாநாடுவரை கொண்டு சென்றது.
'கிரீன் எஸ்ஜி பாலிசி பேப்பர்' எனும் கொள்கை அறிக்கைக்கு அவர் பங்களித்ததுடன் மாநாட்டில் அதை நேரடியாகப் படைத்தும் இருந்தார் ரிஷிகா. தான் வளர்த்துக்கொண்ட ஆய்வு, படைப்புத் திறன்கள் இந்த அனுபவங்களுக்கு மெருகூட்டியதாக அவர் தெரிவித்தார்.
'சிங்கப்பூர் யூத் ஃபார் க்லைமட் ஆக்ஷன்' எனும் அமைப்பின் துணைத் தலைவராகத் தொடர்கிறது ரிஷிகாவின் அரும்பணி. பிற இளையர்களையும் இதில் ஈடுபடுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளார் இவர்.
"வர்த்தகங்கள், சமூகத்தினர், இளையர் என வெவ்வேறு தரப்பினருக்கும் தொண்டூழியத்தில் பங்குண்டு. அவர்களை எவ்வாறு இன்னும் அதிகமாக ஈடுபடுத்தலாம் என்பது குறித்த தெளிவான புரிதல் எனக்கு ஏற்பட்டுள்ளது," என்றார் 19 வயது ரிஷிகா செல்வன்.

