கோலாலம்பூர்: பெர்சத்து கட்சியின் தலைவராக முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தொடர்ந்து பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்சத்து கட்சியினர் ஏகமனதாக திரு முகைதீனுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது போன்ற குற்றச்சாட்டுகளை திரு முகைதீன் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு முகைதீன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளபோதிலும் அவருக்கு பெர்சத்து கட்சியினர் தொடர்ந்து ஆதரவு வழங்குவர் என்று அக்கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் கூறினார்.
"குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள காரணத்தினால் திரு முகைதீன் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகத் தேவையில்லை என்று கட்சியினர் அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அவர் தொடர்ந்து எங்கள் தலைவராக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதை பெர்சத்து கட்சியின் உச்சநிலை மன்றத்திடம் வலியுறுத்துவோம்," என்றார் அவர்.
பெர்சத்து கட்சி மட்டுமல்லாமல், மலேசியாவின் எதிர்க்
கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலின் தலைவராகவும் திரு முகைதீன் இருக்கிறார்.
அக்கூட்டணியில், தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சி, கெராக்கான் ராக்யாட் கட்சி, சாபா முன்னேற்றக் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

