ஆ. விஷ்ணு வர்தினி
எழுத்தாளர்களாக, கவிஞர்களாக பரிமாணம் காண மாணவர்
களுக்குத் தளம் அமைத்துக் கொடுக்கிறது 'இணைய மேடை' எனும் வலைப்பதிவு. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழியல் மாணவர்களது ஆங்கில, தமிழ் எழுத்துப் படைப்புகளை இத்தளம் ஒருங்கிணைத்துள்ளது.
இவர்களின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இத்தளத்தில் காணப்படும் மூன்று சொல் சிறுகதைகள், கடிதங்கள், திரைப்பட விமர்சனங்கள் ஆகியவை மாணவர்களின் புத்தாக்க, பன்முகத்தன்மைகொண்ட முயற்சிகளைப் பறைசாற்றுகின்றன. தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணியத்தின் பங்கு என்ன, தமிழர்களின் அடையாளத்தை இலக்கியம் எவ்வகையில் பறைசாற்றுகிறது என்பது குறித்து தங்களது ஆய்வுமுறை கருத்து
களையும் மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் தெற்காசிய ஆய்வுகளின் ஒரு பிரிவான தமிழியலில் இரண்டு பாடத் தொகுப்புகள் இடம்பெறுகின்றன. 'தமிழ்க் கலாசாரமும் சமுதாயமும்', 'நவீன தமிழ் இலக்கியம்' ஆகிய இரு பாடத் தொகுப்புகளும் பலதரப்பட்ட தமிழியல் கூறுகளை அலசி ஆராய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றன. சமூகவியல், மானுடவியல், வரலாறு முதலிய பல்வேறு துறைகளை இப்பாடம் உள்ளடக்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்களின் சிறப்பான படைப்புகளைக் காட்சிப் படுத்தும் வண்ணம் இந்த வலைப் பதிவு தொடங்கப்பட்டது.
"மாணவர்களின் படைப்பாற்றலை, புத்தாக்கச் சிந்தனையை வெளிக்கொணரவும் தமிழர் எனும் அடையாளத்தை வலுப்
படுத்தவும் பயன்படும் தளமாக விளங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உருவானது இந்த இணைய மேடை," என்றார் தெற்காசிய ஆய்வுத் திட்ட விரிவுரையாளரும் தமிழியல் பிரிவு தலைவருமான டாக்டர் தாரிணி
அழகிரிசாமி.
மாணவர்களின் சிந்தனை மணிகள் கூடுதல் தமிழ் மக்களை சென்றடைவதையும் தமிழின்பால் மாணவர்களின் ஆர்வம் தொடர்ந்து பெருகுவதையும் எதிர்நோக்கியுள்ளதாகவும் டாக்டர் தாரிணி கூறினார். காலப்போக்கில் சிங்கப்பூரைத் தாண்டி இளையர்களை இணைக்கும் ஒரு கருத்துப் பரிமாற்ற தளமாகவும் வளக் களஞ்சியமாகவும் இது திகழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். வலைப்பதிவு முகவரி: https://nustamilstudies.wixsite.com/inaiya

