தூய்மை, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை கொவிட்-19 நோய்த்தொற்று சூழல் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, மக்கள் வெளியில் உண்ண செல்கையில் தங்களது மேசைகளைச் சுயமாக சுத்தம் செய்வதற்கு ஆண்டிசெப்டிக் மெல்லிழைத்தாட்களைக் கொண்டிருந்தனர். பொதுப் போக்குவரத்திலும் கழிவறைகளிலும் உள்ள சுகாதார நிலை பற்றி கவனமாக உள்ளனர். கிருமிகள் பரவுவது பற்றிய மக்களின் விழிப்புணர்வை நோய்த்தொற்று காலம் கூட்டியுள்ளதாக தெரிவித்த திரு பே, பொது இடங்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு இது உகந்த நேரம் என்றார்.
மாதந்தோறும், சூ-சி அறநிறுவனம் "சூ சி சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தினம்" நிகழ்வை வெவ்வேறு அக்கம்பக்கங்களில் நடத்தி வட்டாரவாசிகளை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை எடுத்துவர ஊக்குவிக்கிறது. நெகிழிப் பைகள், புட்டிகள் முதலியவை வீட்டுக் கழிவுகளில் அடங்குகின்றன. இவை குப்பையாவதற்குப் பதில், மறுசுழற்சி செய்யப்படலாம். எனவே, கழிவுகளைக் குறைப்பதன்மூலம் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்வது பற்றிய பொது விழிப்புணர்வை இந்த மாதாந்திர நிகழ்வு அதிகரிக்கிறது.
சூ-சி அறநிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை நிர்வாகி சூசன் டான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மறுசுழற்சியையும் பொது சுகாதாரத்தையும் உள்ளடக்கியுள்ளதாக விளக்கினார். "குடும்பங்கள் மறுசுழற்சியை முக்கியமாக கருதினால், குப்பையாக விளங்கக் கூடிய கழிவுகள் குறைந்து துப்புரவாளர்களின் பணிச்சுமை குறையும்."
20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தினத்தை சூ-சி அறநிறுவனம் ஏற்பாடு செய்ததை தொடர்ந்து மக்களின் ஆதரவும் கூடியுள்ளதாக குமாரி சூசன் கூறினார்.
"முன்னர், சிலர் மறுசுழற்சி செய்யக் கூடிய பொருள்களுடன் கலந்திருக்கும் குப்பை கொண்ட பெரிய பைகளைக் கொண்டு வருவர். இவற்றை தொண்டூழியர்கள் பிரிப்பர். ஆனால், கொவிட்-19 காலம் நமக்கு சாதகமாக அமைந்தது. வழக்கமான மறுசுழற்சி நிகழ்வுகளை நடத்த முடியாததால், மக்கள் இந்நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தொண்டூழியர்களின் சுகாதாரத்தை இன்னும் முக்கியமாக கருதினர். சிகரெட் துண்டுகள், மெல்லிழைத்தாட்கள், முகக்கவசங்கள் ஆகியவை கிருமிகள் நிறைந்தவை. அவை தொண்டூழியர்களின் சுகாதாரத்துக்குப் பாதகம் விளைவிப்பவை. பெரும்பாலனோர் தற்போது குப்பையையும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களையும் பிரித்து வைக்கின்றனர்," என்று குமாரி சூசன் டான் நிலையைச் சித்தரித்தார்.
பொதுச் சுகாதார மன்றம் ஆண்டுதோறும் விடுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப சூ சி அறநிறுவனம் சுயமாக தொடங்கும் துப்புரவு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம், இன்னும் தூய்மையான சூழலை ஏற்படுத்துவதற்கு சமூகத்துக்கு நல்லதோர் உதாரணமாகவும் இது விளங்குகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக மறுபயனீடு செய்யக்கூடிய தமது தண்ணீர் புட்டியைச் சுட்டினார் திரு பே. தினசரி வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர் ஊக்குவித்தார். மறுபயனீடு செய்யக்கூடிய தண்ணீர் புட்டிகளை எடுத்து வருவது நெகிழி புட்டிகளின் பயன்பாட்டை குறைத்து கழிவுகளை குறைக்கும் என்று எடுத்துரைத்தார்.
குப்பைத்தொட்டிகள் இல்லாத, துப்புரவாளர்கள் குறைவாக இருக்கும் பெருவிரைவு ரயில் முதலிய பொது இடங்கள் தூய்மையாகவே உள்ளன. இதனால், மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கடமையுணர்ச்சியுடன் இயங்கினாலும், அதை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அவ்வளவு ஆர்வம் கொண்டிருப்பதில்லை என்பதைக் காட்டுகிறது.
கலந்துரையாடலின் கேள்வி பதில் அங்கத்தில், பலரும் அமரர் திரு லீ குவான் யூ சிங்கப்பூரின் பொது சுகாதாரத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளை குறிப்பிட்டனர். சுற்றுச்சூழல் நிர்வாக அதிகாரியான 66 வயது திரு லோ கொக் பெங், "1968ல் திரு லீ சிங்கப்பூரின் தூய்மைபடுத்துதல் இயக்கத்தை முன்னெடுத்தார். சிங்கப்பூர் ஆற்றினை சுத்தப்படுத்துவதற்கு 10 ஆண்டுகளை அர்ப்பணித்தார். இதனை அடுத்து, தென்கிழக்காசியாவில் ஆக தூய்மையான, நவீனமயமான பூங்கா நகரமான நாடாக சிங்கப்பூரை மாற்றியமைத்தார். இந்த வரலாற்று நிகழ்விலிருந்து, சிங்கப்பூரில் வசிக்கும் அனைவரும் சமூக அக்கறையுடன் செயல்படுவது மிக அவசியம் என்று உணரவேண்டும்."
ஆனால், மக்களின் வாழ்க்கை நிலைகள் மாறியுள்ளதை அவர் கவனித்தார். "சமீப காலத்தில், துப்புரவாளர்களையும் பணியாளர்களையும் நாம் நம்பி இருக்கிறோம். இதுவே வருங்காலத்தில் நமது நாட்டின் முன்னேற்றத்தை தடை செய்கின்றன," என்று திரு லோ தெரிவித்தார்.
தாமே தெருக்களைக் கூட்டும் அமரர் திரு லீயின் பழைய புகைப்படம் ஒன்றினை கண்டதை திரு பே நினைவுகூர்ந்தார். அது தம் நினைவிலிருந்து அகலாது என்றும் கூறினார்.
சிங்கப்பூர் துப்புரவாளர்களை முழுதாக நம்பி இருந்தால், நிலைத்தன்மையான மேம்பாட்டினை நாம் காண முடியாது என்பதை திரு பே வலியுறுத்தினார்.
"பொது இடங்களின் சுகாதாரத்தை பராமரிப்பதுடன், இல்லமாக கருதும் இந்நாட்டின் சுகாதார விவகாரங்களில் நாம் பங்கு கொள்ள வேண்டும். மனிதர்கள் உண்டாக்கும் கழிவுகள் இல்லாத, இயற்கை குப்பைகள் மட்டுமே உள்ள சிங்கப்பூர் தெருக்களை ஒரு நாள் காண ஆசை கொண்டுள்ளேன்."
முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்துக்கு ஆதரவாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு இச்செய்தியை வழங்கியுள்ளது.

