தொடக்கப்பள்ளி நான்கிலிருந்து ஆறு வரை பயிலும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதை சொல்லும் போட்டியின் இறுதிச் சுற்றில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார் இயூ டீ தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த வாங்கல் பிரதீப் அக்ருதா, 11.
ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் மாகோ கதை சொல்லும் போட்டியில் கலந்துகொண்ட 36 பேரில் ஒருவரான அக்ருதா முதல் பரிசாகச் சான்றிதழ், வெற்றிக்கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டதோடு, பரிசாக ஒரு கைக்கணினியும் கிடைத்ததால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
ஏகேடி கிரியேஷன்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டி தமிழ்மொழி மாதமும் தமிழ்ச் சோலையின் ஒன்றாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டியும் இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் இடம்பெற்றது.
வானொலிப் படைப்பாளர் சுப்பு அடைக்கலவன், நிகழ்ச்சி நெறியாளர் ஜிடி மணி, அனைத்துலக்க கதை சொல்லியான ஜீவா ரகுநாத் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்து வெற்றியாளரைத் தேர்வு செய்தனர்.
போட்டியின் இறுதி இரண்டு சுற்றுகள் கடினமாக இருந்தன. முதல் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட பத்து மாணவர்கள் இரண்டாவது சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் சுற்றில் தாங்கள் தேர்ந்தெடுத்த கதையைக் கூறியபின் இரண்டாம் சுற்றில் நடுவர்கள் மூவரும் பரிந்துரைத்த சொற்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காகிதத்தைத் தங்களுக்குப் பிடித்த வடிவில் கிழித்து அதை ஒரு பொருளாக நினைத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றை வைத்து அளிக்கப்பட்ட 30 நொடிகளில் ஒரு கதையை யோசித்து கூறுவதில் சில மாணவர்கள் தடுமாறினர். இந்தச் சவாலை நன்கு கையாண்ட ஐந்து மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டனர்.
இறுதிச் சுற்றில் மற்றுமொரு சவாலாக நடுவர் ஜீவா எழுப்பிய ஒலிகளை தங்களின் கதையில் சேர்த்துக் கொள்வதோடு ஒரு கதாபாத்திரத்தையும் கோவையாக தங்கள் கதையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இத்தனை சவால்களை எதிர்கொண்டும் தங்களின் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்திய முதல் மூன்று வெற்றியாளர்களுக்கும் அரையிறுதிப் போட்டியாளர்களுக்கும் பரிசுகள் கிடைத்தன. பங்குபெற்ற மற்றப் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்ற ஆண்டு இதே போட்டியில் மூன்றாவது பரிசை வென்ற அக்ருதா, "தமிழ்க் கதைகளின் மேல் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது என் தமிழாசிரியரே. அதிலிருந்து தொடங்கிய என் ஆர்வம் இதுவரை என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த உந்துதல்தான் என்னைப் பல போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறது," என்றார்.
அக்ருதாவின் தாயாரான பத்மப்ரியா, "வீட்டில் நாள்தோறும் தமிழில் பேசுவது, நூலகத்திற்குச் சென்று தமிழ்ப் புத்தகங்களை இரவல் பெற்றுப் படிப்பது போன்றவற்றின் மூலமாக என் மகள் அவளுடைய தமிழ்மொழி ஆர்வத்தை வளர்த்துக்கொண்டாள். என்னுடைய ஐந்து வயது இரண்டாவது மகளும் அக்காவைப்போல தமிழில் ஆர்வத்துடன் காணப்படுகிறாள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்," என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.

