கருணாநிதி துர்கா
மூன்று வயதிலிருந்து காற்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபடும் பிரணவ் ராம் தமிழ் செல்வனுக்கு, 6, சிறுவயதிலிருந்து காற்பந்தாட்டம் என்றாலே கொள்ளைப் பிரியம்.
பிரணவின் குடும்பத்தினர் அனைவருமே காற்பந்தில் ஆர்வம் கொண்டவர்கள்.
அவரது அண்ணனான 23 வயது கிரிஷவ் ராம் தமிழ் செல்வனும் காற்பந்தாட்டத்தில் சாதனைகள் புரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார்.
இதனாலேயே, பிரணவுக்கும் இவ்விளையாட்டின்மீது ஒரு தனி ஆர்வம் ஏற்பட்டது.
தற்போது, லயன் சிட்டி செய்லர்ஸ் காற்பந்துப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார் இவர்.
அதுமட்டுமல்லாமல், போர்ச்சுகலின் 'இண்டிவிஜுவல்' காற்பந்துப் பயிற்சி அமைப்பின் பயிற்றுநரிடமிருந்தும் இணையம் வழியாகப் பயிற்சி பெற்று வருகிறார் பிரணவ்.
அண்மையில் நிகழ்ந்த 'ஜே௭ஸ்௭ஸ்எல் 7' (JSSL 7s) அனைத்துலக விளையாட்டில், இவர் தனது அணிக்காக அதிகப் புள்ளிகள் பெற்றுத் தந்த விளையாட்டாளராக விளங்கினார்.
இவ்வாறு ஓர் ஆண்டிலேயே பல வெற்றிகளைக் கண்டு இதுவரை போட்டிகளில் மொத்தம் 24 கோல்கள் அடித்துள்ளார் இவர்.
பல சாதனைகளைப் படைக்கவேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக இவர் கொண்டிருக்கவில்லை. எனினும், காற்பந்து இவருக்கு முழுமையான மனநிறைவையும் உற்சாகத்தையும் கொடுப்பதால் காற்பந்தில் இவருக்கு எதுவும் பெரிய சவாலாகத் தோன்றவில்லை.
தன் குடும்பத்தினரும் பயிற்றுநர்களும்தான் தனக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பதாக கூறுகிறார் பிரணவ். சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பதோடு லிவர்பூல் காற்பந்து அணிக்காகவும் விளையாடவேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாட்டில் கவனம் செலுத்துகிறார் இவர்.