சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பூமி தின நிகழ்ச்சி

சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பூமி தின நிகழ்ச்சி

2 mins read
ebefea02-e482-455a-a1cb-dfb62dc3fc69
-

சூரியக் குடும்பத்தில் மனிதர்கள் வாழக்கூடிய இடம் பூமி ஒன்றுதான். நம்மைத் தாங்கும் இந்த பூமியை பாதுகாப்பது நம்முடைய கடமை.

இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 53 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதியன்று உலக பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1970ஆம் ஆண்டு 150 ஆண்டு பழைமையான தொழிற்சாலைக்கழிவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அப்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக்கோரி நூறாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அதுவே பூமி தினம் ஆனது. அப்போது முதல் இந்த பூமி தினத்தில் ஒரு பில்லியன் மக்கள் பங்கேற்பதாக கூறப்படுகிறது.

தண்ணீர் சிக்கனம், மின்சார சிக்கனம், எரிபொருள் சிக்கனம், நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளால் புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாம்.

பூமியானது தண்ணீரை நம்பி இருக்கிறது. தண்ணீர் மழையை நம்பி இருக்கிறது. மழை இயற்கையை நம்பி இருக்கிறது. இயற்கையைக் காப்பாற்ற மரக்கன்றுகளை அதிகம் நடுவதே நாம் பூமிக்குச் செய்யும் நன்றியாகும்.

சிங்கப்பூரில் பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த

சரியான புரிதலையும் சிறுவர்களிடம் உருவாக்கும் வகையில் 'தி பொலிவாக்ஸ்' இன்டர்டைடல் எக்ஸ்ப்ளோரர்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.

ஏப்ரல் 22ஆம் தேதியன்று விவோசிட்டியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், ஏப்ரல் 29ஆம் தேதியன்று கிளார்க் கீ சென்ட்ரலிலும் இந்நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்பட இருக்கின்றது.

கடல்வாழ் உயிரினங்களுக்கான தொட்டியைக்கொண்டு கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்நிகழ்ச்சி வழிவகுக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறுவர்களுக்கு கடல்வாழ் உயிரினங்களை அருகில் பார்க்கும் அரிய வாய்ப்பும் கிட்டும்.

இளம் பருவத்திலேயே சிறுவர்களுக்கு இயற்கைமீதும் உயிரினங்கள்மீதும் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவது இதன் நோக்கம். அத்துடன், மனத்தைக் கவரும் வகையில் சிறுவர்களுக்குக் கடல் சுற்றுச்சூழல் பற்றிக் கற்றுக்

கொடுக்கின்றது.

மேலும், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மறுபயனீடு, மறுசுழற்சி மூலம் நம் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது பற்றியும் சிறுவர்கள் இந்த நிகழ்ச்சியின்மூலம் கற்றுக்கொள்வர்.

மேல்விவரங்களுக்கு 'தி பொலிவாக்ஸ்' இணையத்தளத்தை நாடலாம்.

நம்மை மீறி ஒரு குப்பையைக் கீழே போட்டாலும்கூட, அது பூமிக்குச் செய்யும் தீமைதான். நமக்கெனச் சொந்தமாக இருக்கும் ஒரே வீடு நம் பூமிதான். உயிர்கள் வாழ வேறு எந்த இடமும் இல்லை. பூமியை பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்போம்!