தமிழே வாழ்க 2.0 அமிழ்தம்

தமிழே வாழ்க 2.0 அமிழ்தம்

2 mins read
ee90a61b-519c-4925-8b1f-ac17aba20ab0
-

கவிதைகள் மூலம் சிறுவர்களின் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் சக்தி நுண்கலைக் கூடம் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. பாலர் பள்ளி மாணவர்களிலிருந்து தொடக்கநிலை ஆறு பயிலும் மாணவர்கள் வரை ஏறக்குறைய 210 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தினார்கள்.

முதன்முதலில் 2021ல் நடந்தேறிய இந்தப் போட்டி நல்ல வரவேற்பைப் பெற்றதால் மீண்டும் 'தமிழே வாழ்க 2.0 அமிழ்தம்' எனும் தலைப்பில் தமிழ் மொழி மாதத்தை ஒட்டி சென்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி பிற்பகல் உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது.

சக்தி நுண்கலைக் கூடத்தின் கலை இயக்குநரான தேவி வீரப்பன், "மாணவர்கள் தமிழ் மொழியைத் தொடர்ந்து தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தவேண்டும் என்பதில் நாங்கள் முனைப்பாக இருந்தோம். இம்முறை நம் பாரம்பரியத்தையும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம்," என்று கூறினார்.

அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் முன் சிறுவர் குழந்தை இலக்கியத்தைப் படைத்த கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் கவிதைகளை மனனம் செய்து பயமின்றி மேடையில் ஏறி தன்னம்பிக்கையுடன் அவர்கள் கவிதைகள் சொன்னதைக் கண்டு பெற்றோர் அகமகிழ்ந்தனர்.

மாணவர்கள் புத்தாக்க முறையில் கவிதைகளை எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக ஆடல் பாடல் மூலம் படைத்தது பார்வையாளர்களை ஈர்த்தது.

தமிழர் பாரம்பரியம் பற்றிய செய்திகளை சிறு வயதிலேயே சிறுவர்களுக்குச் சொல்ல வேண்டிய பண்புகள் குறித்த கவிதைகள் மேடையில் வாசிக்கப்பட்டன. மாணவர்கள் சிலர் விலங்குகள்போல வேடமிட்டதோடு சிலர் நாடகமேடையில் பொருள்களைப் பயன்படுத்தி சுவாரசியமான பாணியில் நிகழ்ச்சிகளைப் படைத்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன. புக்கிட் தீமா தொடக்கப்பள்ளியில் பயிலும் ஷர்னி சன்னாகிருஷ்ணன், 11, அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் தனது 7 வயது தங்கை சமிக்ஷா சன்னாகிருஷ்ணனோடு இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்.

முதல் பரிசு பெறவில்லை என்றாலும் ஆறுதல் பரிசை வென்ற சகோதரிகள் இருவரும் இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தமிழ் மொழிப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்தனர்.

போட்டிக்கு தனது இரு மகள்களையும் அழைத்து வந்திருந்த பாதுகாப்பு அதிகாரி மாணிக்கம் ரதி, 42, "தமிழ்மொழி மாதத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகளின் மூலம் மாணவர்களுக்கு தமிழ்மொழி ஆர்வத்தை விதைக்க முடியும். போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலும் சிறுவர்களுக்கு கலந்துகொண்ட மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும். இனி வரும் நிகழ்ச்சிகளில் அச்சமில்லாமல் கலந்துகொள்வார்கள்," என்றார்.