மாணவர்களுக்கான 'ஸ்டாப் மோஷன்' பயிலரங்கு

மாணவர்களுக்கான 'ஸ்டாப் மோஷன்' பயிலரங்கு

2 mins read
3283490c-0fcf-42f8-85dc-19c2b4445d45
-

உயிரோவியக் கலையின் அடிப்படை நுணுக்கங்கள், 'ஸ்டாப் மோஷன்' எனும் மாறுபட்ட உயிரோவியக் கதை உருவாக்கம், மின்னிலக்கப் பாணியில் திரைப்படங்களை எவ்வாறு உருவாக்குவது போன்ற திறன்களைத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் அண்மையில் கற்றுக்கொண்டனர்.

தமிழ்ச் சோலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேர 'ஸ்டாப் மோஷன்' உயிரோவிய பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் இடம்பெற்ற பயிலரங்கை 'கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்' நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான ஜெகன்நாத் ராமானுஜம் வழிநடத்தினார். கிட்டத்தட்ட 60 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

மின்னிலக்க தளங்கள் எளிதில் வசப்படும் இக்காலத்தில் மாணவர்கள் தங்கள் பாடங்களில் பெரும்பாலானவற்றை மின்னிலக்க வடிவில் கற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு இந்தப் பயிலரங்கு மூலம் வளர்த்துக்கொண்ட திறன்கள் அவர்களின் அன்றாட வாழ்கையைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் வண்ணம் அமையும்.

உள்ளூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், சிறுவர்கள் விரும்பி படிக்கும் 'காமிக்ஸ்' எனும் கேலிச் சித்திர படங்களின் உருவாக்கம் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.

பயிலரங்கில் மாணவர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுக் கற்றுக்கொண்ட திறன்களை வெளிப்படுத்தும் வகையில் குழு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்த மாணவர்கள் ஒன்றிணைந்து அந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சொங்ஃபூ பள்ளியைச் சேர்ந்த 9 வயது ஏகன் வீர சற்குணன் உயிரோவியத்திற்கு முதன் முறையாக அறிமுகமானவர். இதுவரையில் குழு நடவடிக்கைகளில் ஈடுபடாத ஏகன் புதிய நபர்களோடு உரையாடி மகிழ்ந்தது மட்டுமின்றி, அதன் மூலம் பல திறன்களையும் கற்றுக்கொண்டார்.

"கலந்துகொண்ட மாணவர்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் உயிரோவியத்தை முதல்முறையாக கேள்விப்பட்டுள்ளனர். தமிழ் மாணவர்களுக்கு இந்த திறன்களைக் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

"நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் வந்திருந்தார்கள். வருங்காலத்தில் மாணவர்கள் இந்தத் துறை மூலம் வாழ்க்கைத் தொழிலையும் தேர்ந்தெடுக்கலாம் என்பதை நான் அவர்களுக்கு உணர்த்தினேன்," என்றார் ஜெகன்நாத்.