கலந்துறவாடுதல் மூலம் சிறுவர்களுக்கு குதூகலம் மூட்டிய கதை சொல்லும் அமர்வு அண்மையில் நடைபெற்றது. கதைகள் கேட்பது, பாடல்கள் பாடுவது, கதைகளின் மூலம் நம் பாரம்பரிய கலைகளை அறிந்துகொள்வது போன்றவற்றை சிறுவர்கள் கண்டு ரசித்தனர்.
தமிழ்ச் சோலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக 'ஏகேடி கிரியேஷன்ஸ்' ஏற்பாடு செய்திருந்த இந்த ஒன்றரை மணி நேர நிகழ்வில் சிறுவர்கள் தமிழர் விழுமியங்கள், பண்புகள் ஆகியனவற்றைக் கதைகள் மூலம் கற்றுக்கொண்டனர்.
ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வை ஏகேடி கிரியேஷன்ஸை சேர்ந்த ராணி கண்ணா, அனைத்துலக கதை சொல்லியான ஜீவா ரகுநாத் இருவரும் வழிநடத்தினர்.
நிகழ்ச்சியில் ஏறக்குறைய 30 சிறுவர்கள் தங்கள் பெற்றோரோடு பங்கு பெற்றனர்.
சுவாரசியமான பாணியில் கதைச் சொல்லி சிறுவர்களின் கவனத்தை ஈர்த்தனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
மேலும் நிகழ்வின் நடுவில் எறும்பு, காகம், சிங்கம் என மூன்று வேடங்கள் தரித்த கேளிக்கைக் கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பறை இசை, கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றை சிறுவர்களுக்கு தனது ஆட்டத்தின் மூலம் எறும்பு, காகம், சிங்கம் ஆகியவை அறிமுகப்படுத்தின.
கதைகளின் மூலம் சேமிக்கும் பழக்கம், வேண்டுமென்ற மனப்பாண்மை, பேராசை வளர்க்கப்படாமல் இருப்பது போன்ற பண்புகளை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
சிறுவர்கள் தங்களின் புத்தாக்கத்திறனை மேம்படுத்தியதோடு கேட்கும் திறனையும் வலுப்படுத்தினர்.
"தமிழ் மொழி மீதான ஆர்வத்தை சிறுவர்களுக்கு இந்த வயதில் விதைத்தால்தான் அது வாழ்நாள் முழுவதும் அவர்களின் மனதில் நிற்கும்.
"அவ்வாறு சிறுவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் கலந்துறவாடினால் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த முயற்சி என்று நம்பினோம்," என்று ராணி கண்ணாவும், ஜீவா ரகுநாத்தும் கூறினார்கள்.
கதிர்வீச்சு தொழில்நுட்பராக இருக்கும் 37 வயது ஷாலினி நாயர் அவரது ஆறு வயது மகள் கீதா தேவி சுரேனைக் கதை சொல்லும் அமர்விற்கு அழைத்து வந்திருந்தார்.
"ஷாலினியின் தாய்மொழி மலையாளம் என்பதால் வீட்டில் மகளுக்கு தமிழிலில் உரையாட வாய்ப்பு கிடைப்பதில்லை.
"இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் என் மகள் தமிழில் சரளமாக உரையாட முடியும் என்று நம்புகிறேன். வீட்டில் தமிழ் புழக்கம் குறைவாக உள்ளதால் வெளியில் ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளில் கலந்துகொண்டு கீதா பயன்பெற முடியும்.
"அடுத்த ஆண்டு முதல் வகுப்புக்கு செல்வதற்கு முன் அவள் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பது என் இலக்கு," என்றார் ஷாலினி.

