சிறுகதை: சரவணபவன் ஆதவன்
அளவுக்கு மீறிய அமைதி அந்த குளிரூட்டப்பட்ட அறையை விழுங்கி இருந்தது. நான்கு பேரின் முகங்களும் எந்த சலனமும் இல்லாமல் ஆளுக்கொரு திசையில் மற்றவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்திருந்தன.
அறையில் கண்காணிப்பு கேமரா மெல்லிய சிவப்பு லைட்டை விட்டுவிட்டு மின்னியது. அதனூடாக எங்கோ இருந்து இவர்களை அவதானித்து கொண்டிருக்கிறார்கள். அறைக்கு வெளியில் காவல்துறை அதிகாரி ஒருவர் நிற்கிறார். இடுப்புப் பட்டியில் தொங்கும் கருமைநிற கைத்துப்பாக்கி அதனுடன் இன்னும் சில தற்காப்பு ஆயுதங்கள் என்று அவரை எடுப்பாகக் காட்டியது.
அறையின் உள்ளே இருப்பவர்கள் சாதாரணமாக பேசினாலே அவருக்கு கேட்கும். ஆனால் உள்ளிருப்பவர்களின் வலுவிழந்த பேச்சொலி வெளியே கேட்கவில்லை. அங்கும் இங்குமாக கூடத்தில் நடந்துபோகும் சக அதிகாரிகளுக்கு புன்னகையை மட்டும் உதிர்த்துக்கொண்டிருந்தார்.
கட்டடத்தின் ஓரம் சிறிய மரங்களில் இருந்து குருவிகளின் கீச்சொலிகள் அடிக்கடி கேட்பது இந்த அமைதியை தொந்தரவு செய்வதாக உணர்கிறார்.
நால்வரின் முகங்களிலும் பலநாள்கள் அழுது கழித்த சோர்வு. இனி அழுது எதுவும் ஆவதற்கு இடமில்லை என்ற மெல்லிய தெளிவும் கையறு நிலையும் அவர்கள் மனங்களில் பதிந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் அவனின் முகத்தில் சற்று அதிகமாகவே தெளிவு இருந்தது.
இந்த சிறையில் இருந்த கடந்த நான்கு ஆண்டுகளில் சாந்தன் ஒரு சுற்று பெருத்து விட்டான். வேலை என்று பெரிதாக இல்லை. ஒரு பூந்தோட்டம் பத்தடி அகலம் நாற்பது அடி நீளத்தில் இருந்தது. அதற்கு அருகில் சமாந்தரமாக அகலம் சற்று கூடுதலாக ஒரு காய்கறித்தோட்டம். காலை சாப்பாடு முடிந்து சிறிய மண்வெட்டியோடு தோட்டத்தில் இறங்கினால் மதியம் சாப்பாட்டுக்கு அழைக்கும் மட்டும்தான் வேலை. யாரும் மேற்பார்வையாளர்கள் என்று கழுத்தறுக்க மாட்டார்கள். வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சுதந்திரம். கட்டுப்பாடான சுதந்திரம். இப்படி ஏதோ ஒன்று அவனுக்கு இருந்தது. ஒருவேளை அவன் மீது கரிசனை வந்திருக்கலாம். அவன் கரிசனையை எதிர்பார்க்காமல் தினம் தினம் காலையில் உழைத்தான். ஆனால் அந்த உழைப்பு உடல் பெருக்கத்தை தடுக்கவில்லை. அவனை அறியாமல் உடல் வளர்ந்ததுதான் மிச்சம். மற்ற நேரங்களில் ஓவியம் வரைவதும் நூல்கள் வாசிப்பதுமாக நேரம் கழிந்தது. முன்பெல்லாம் இந்த பழக்கங்கள் கொஞ்சம் கூட அவனுக்கு இல்லை. சின்ன வயதில் படிப்பும் ஏறவில்லை. ஏதோ வாசிக்க புரிந்து கொள்ள தெரியும் என்பதோடு சரி. வழக்கு நடந்து கொண்டிருந்த சமயம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் நாள்களில் மட்டும் அவனுக்கு வெளியுலகை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது.
மலேசியாவில் ஒரு ஷாப்பிங் மாலில் காவலாளி வேலை பார்த்தான். சாதாரண வாழ்க்கைக்கு ஏற்ற வருமானம் கிடைத்தது. இருபத்தியிரண்டு வயதில் இருந்து சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இன்னும் அறுபது வயதில் சிறிய வேலைக்குப் போகும் தகப்பன் மூர்த்தி அவரின் சம்பாத்தியத்தில் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடு. குடும்பத்தில் வறுமை என்று இல்லை. மனிதர்கள்தானே. அதனால் வரும் பேராசை இருப்பதற்கு மேல் ஆசைப்படும் சாதாரண மனம் உள்ளவர்கள். கடனில் கார், டிவி என்று வாங்கிப் போட்டிருக்கும் நடுத்தர வர்க்கம்.
அடிக்கடி மாறும் காலநிலைபோல சந்தர்ப்பமும் சூழலும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் மாறத்தொடங்கியதை சட்டை செய்யாமலே இருந்தான்.
சாந்தனுக்கு காவலாளி தொழிலில் எதிர்பார்க்காத முன்பின் தெரியாத பலருடன் பழக்கம் ஏற்பட்டது. அதிலும் ஒருவர் சீனர் மற்றவர் தமிழர்.
மூவருக்கும் ஒத்த வயது என்பதால் இளவயது பேச்சுக்கள் நாளாந்தம் வேலை ஓய்வு நேரத்திலும் மாலையில் வேலை முடிந்து வீடு போகும் போதும் இருக்கும்.
இந்தப் பழக்கம் அவனுக்கு மேலும் பலரை அறிமுகப்படுத்தியது. ஜெகனை ஒரு கிளப்பில் மற்ற இருவருடனும் போன நேரம் சந்தித்தான். ஜெகன் நல்ல நெடுவல் சிவலை. முடி வளர்த்து பின்னால் சேர்த்து கட்டியிருந்தான்.
கைகளில் பச்சை குத்தி கையில்லாத டிஷர்ட் போட்டு காதுகளில் கடுக்கன்கள், கழுத்தில் சின்னிவிரல் மொத்த வெள்ளி சங்கிலி என்று நவநாகரிக இளைஞனாக அறிமுகமானான்.
சாந்தனும் தமிழ் பேசும் கலகலப்பான ஆள். நல்லா பேசுறான் என்பதால் ஜெகனுடன் பழக்கம் நீண்டது. ஜெகன் அந்த பகுதியில் இருந்த பெரிய கிளப்புகளில் மெம்பராக இருந்தான். அவனுடன் போகும் போது சாந்தனுக்கும் நல்ல கவனிப்பு கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக தானும் குடித்து பழகியது ஒரு கட்டத்தில் பெண்கள் சகவாசமும் வந்தது.
சாந்தனுக்கு பல பெண்களை அறிமுகப்படுத்தி வைத்தான் ஜெகன். அது மட்டும் இல்லாமல் சாமான்கள் டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றிலும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க செய்தான்.
மலேசியாவில் இருந்து வாரம் ஒரு தடவை சிங்கப்பூருக்கு போகும் லாரி மரக்கறி வகைகளை ஏற்றிச் செல்லும்.
சில சமயங்களில் ராதிகாவும் அந்த லாரியில் வருவாள். அவள் பேசும்போது முகம் முழுக்க சிரிப்பு இருக்கும். சாதாரண அழகுதான் என்றாலும் கவரக்கூடிய முகம்.
சாந்தனுக்கு தொடக்கத்தில் ஒரு சந்தேகம் இருந்தது. அவள் ஜெகனின் காதலியாக இருக்கலாம் என்று. ஏனெனில் இரண்டு மூன்று தடவைகள்தான் கிளப்புக்கு வந்திருப்பாள். ஆனால் ஒதுக்காக இருந்த பிரத்தியேக இருக்கையில் ஜெகனுடன் இரகசியம் பேசுவதிலே அதிக நேரம் கழிப்பாள்.
சாந்தனையும் ஜெகனின் மற்ற நண்பர்களையும் பார்த்து புன்முறுவலுடன் கடப்பது ஒன்றுதான் வேறு பேச்சு இல்லை. ராதிகாவின் தனிமைப்படுத்தல் சாந்தன் மாதிரி கொஞ்சம் இறுக்கமான தமிழர் கலாசாரம் தெரிந்த நண்பர்களுக்கும் இந்த சந்தேகம் வந்ததில் ஆச்சரியம் இல்லைதான்.
தனது காதலி மற்றவர்களுடன் அதிகம் நெருங்குவதை விரும்பாத கடைசித் தலைமுறையாகக் கூட இருக்கலாம்.
கட்டுப்பாடுகளை உடைக்கும் மேலைத்தேய கலாசாரம் இன்னும் வீரியமாக ஊடறுக்காத சமூகப் பின்புலம் சாந்தனுக்கு அமைந்தது.
அப்பா மூர்த்தி, அம்மா பாக்கியம், தங்கை சுகந்தி என்று அவனுடன் சேர்ந்து நான்கு பேர் கொண்ட குடும்பம்.
வருமானம் தேவைக்கு செலவு செய்யக் கூடிய வகையில் இருந்தாலும் பெரிய செலவுகளுக்கு வங்கிக் கடனை நாடவேண்டும்.
வாரம் ஒரு தடவை போகும் சிங்கப்பூர் பயணத்தில் ராதிகாவுடன் பேசும் நீண்ட பொழுதுகள் சாந்தனுக்கு அமைந்தது.
தானும் சாந்தனை போல ஜெகனால் அதே நிறுவனத்தில் வேலை பெற்றதையும் சொன்னவள் என்ன வேலை என்ற விபரத்தை நீண்ட நாட்கள் சொல்லாமல் தவிர்த்தாள்.
"உங்களுக்கு எவ்வளவு சம்பளம் ஒரு டிரிப்புக்கு?" முதல் தடவை சாந்தனின் சம்பளம் பற்றி விசாரித்தாள்.
"ஆண்களிடம் சம்பளத்தையும் பெண்களிடம் வயசையும் கேட்கக்கூடாது," என்று பெரிய ஜோக் சொன்னவன் மாதிரி சிரித்தான்.
"அதுக்கு இல்லை. நீங்கள் பாவிக்கும் வாட்ச், போன் எல்லாம் பழைய மாடல் வசதி குறைவாக இருக்கும் போல?" என்றாள் மெல்லிய சிரிப்புடன். அவள் கைகளில் புது வரவு ஆப்பிள் ஐஃபோன் இருந்தது. மணிக்கட்டில் கறுப்பு நிற ஐ வாட்ச்சும் பளபளத்தது.
சாந்தனும் "மாதம் ஆயிரம் ரிங்கிட் வரும். செலவுக்குச் சரியாக இருக்கும்," என்றான் சலிப்புடன்.
"நான் ஒரு தடவை மாதம் வந்து போக எனக்கு பத்தாயிரம் ரிங்கிட் சம்பளம் தெரியுமா?"
இடுப்பில் மறைத்து வைத்திருந்த பொட்டலம் ஒன்றை டிஷர்ட்டை விலக்கிக் காட்டினாள்.
சாந்தனுக்கு விளங்கிவிட்டது. "இதெல்லாம் சட்டவிரோதம் நீங்கள் தப்பான தொழில் செய்வது போல தெரிகிறது," புரிந்திருந்தாலும் அதைப்பற்றி விலாவாரியாக அவளுடன் பேச விரும்பாமலும் பதற்றத்தை வெளிக்காட்டாமல் மீண்டும் மெலிதாக சிரித்தான்.
"எந்தத் தொழிலில் ஆபத்தில்லை? நான் நல்ல வசதியா இருக்கிறேன். உங்களுக்கு விரும்பினால் ஜெகனிடம் பேசி இணைத்துக்கொள்ள வைக்கிறேன். என்னைமாதிரி பலர் இந்த தொழிலில் இருக்கிறார்கள் எல்லாரும் மாட்டுவதில்லை தானே?" என்று சற்று அடங்கிய தொனியில் சாந்தனின் மண்டையை கழுவினாள்.
ஒரு கட்டத்தில் அவனும் பரிச்சாத்தமா அந்த வேலையை செய்ய முற்பட்டான். சந்தர்ப்பத்தை பயன்படுத்து என்று உள்மனம் உந்தித்தள்ளியது. பிறகு கைநிறைய பணம் அவனை தொடர்ந்து தப்பு செய்யத் தூண்டியது. அதிஷ்டம் எப்போதும் நிரந்தரமாக இருப்பதில்லை என்பதை ஒருநாள் உணர்ந்து கொண்டான்.
என்ன பேசுவது என்று தெரியாமல் மற்ற மூவரும் இருந்தார்கள். அவன் மட்டும் ஏதேதோ பேச்சுக்கொடுத்து மூவரின் அமைதியை தொந்தரவு செய்துகொண்டிருந்தான்.
இந்த இரண்டு மணித்தியாலங்கள் உறவினருடன் பேச அனுமதி அளிக்கப்பட்டது. கருநீலத்தில் புது டெனிம் கை இறுக்கமான கறுப்பு வெள்ளை குறுக்குக் கோடுகளுடன் புது டிஷர்ட் தந்தையார் வாங்கி வந்திருந்தார்.
வேலைக்குப் போகத்தொடங்கிய பிறகு முதன் முதலாக அப்பா வாங்கித்தந்த உடுப்புகள் என்று அவன் நினைவில் பொறி தட்டியது. அளவு சரியாகத்தான் இருந்தது. சாந்தன் அதை அணிந்து கொள்ள நாலைந்து படங்களை தங்கை போனில் எடுத்தாள்.
தாய் தகப்பனுடன் சேர்ந்தும் ஒருபடம். தங்கையுடன் ஒருபடம். படம் எடுக்கும் போதும் யாரும் யாரையும் சிரிக்கச் சொல்லவில்லை. ஆனால் அவன் சிரித்தான். வலுக்கட்டாயமாக வரவழைத்த சிரிப்பு என்றாலும் சிரித்தான். தாயார் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த கோழி சாப்பாட்டை பரிமாறினார். வழமை போல சுவையாக இருந்த சாப்பாடு. அவன் அதை இரசித்து உண்டான்.
இருக்கும் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற தவிப்பு அவனில் எஞ்சியிருந்தது. அவனை பார்க்கும்போது மற்ற மூவரும் உடைந்து கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் நடுக்கத்திலும் முக வாட்டத்திலும் கலங்கிய கண்களிலும் அது தெரிந்தது.
அவனோ இயன்றவரை அவர்களை தனது செயலால் தேற்ற முயல்கிறான். அந்த இரண்டு மணித்தியாலம் முடியும் வரை அவன் அழவில்லை. அழுதும் பயனில்லை என்பது நால்வருக்கும் தெரியும்.
பிரிவுத் துயர் மூவருக்கும் ஏனெனில் அவர்கள் இன்னும் வாழப்போகிறார்கள். துயரை சுமந்துகொண்டு வாழ்வார்கள். மகனின் வாழ்நாள் நினைவுகளில், முற்றுப்பெறாத நினைவுகளில் தாயும் தந்தையும் அண்ணனை நினைத்து தங்கையும் இருப்பார்கள். குளிரூட்டப்பட்ட அறையிலும் முத்துக்களாக வியர்வை பூத்திருந்த முகங்கள்.
"அம்மா இதுவரைக்கும் உங்களின் பாங்கில் போட்டிருக்கும் பணம் எவ்வளவு வெள்ளி வந்திருக்கும்?" சிங்கப்பூருக்கு மரக்கறி ஏற்றியிறக்கும் தொழிலுக்குப் பிறகு மேலதிகமான காசை தாய் தந்தைக்கு கூட்டுக்கணக்கில் வைப்பிலிட்டிருந்தான்.
"அது இருந்துதான் என்ன செய்யுறது?" வேண்டா வெறுப்பான தாயின் வார்த்தைகள்.
"இல்லை அம்மா சில தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள் தேவைப்பட்டால் உதவி செய்வாங்க."
"வேண்டாம்டா உன்ர நண்பர்களின் சகவாசம். இப்படியொரு இக்கட்டான நிலைக்குக் கொண்டு வந்திவிடுவாங்கள் எண்டு நான் கனவிலும் நினக்கேல்ல. நாங்கள் எங்களைப் பார்த்துக்கொள்ளுறம்"
"இல்லை அம்மா சுகந்தியும் தொடர்ந்து படிக்கவேணும் அப்பாக்கும் ஏலாது அதுதான்..." என்று இழுத்தான்.
தாய் ஏதோ சொல்ல முயல தந்தை அவரை தடுத்தார். "அவனுக்கு எது விருப்பமோ அதை நாங்கள் செய்வம். தம்பி நீ ஒண்டும் யோசிக்காத" அதுவரை தன்னுடன் இயல்பாகவோ சினேகமாகவோ பேசாத அவரின் பரிவான வார்த்தைகள் அவனை ஏதோ செய்தது. அவரும் எதிர்காலம் பற்றிய பேச்சுக்களை தவிர்க்கவே விரும்பினார்.
சட்டென்று திரும்பி "சுகந்தி படிப்பு எப்படிப் போகுது?" இறுக்கமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளை கேட்டான். இதுதான் முதல் தடவையாக சிங்கப்பூர் வந்திருக்கிறாள். வழக்கு நடக்கும் சமயத்தில் தாயும் தந்தையும் மட்டுமே வந்து போனார்கள்.
"படிக்கிறன்" சோபை இழந்த ஒற்றை வார்த்தையில் பதிலுரைத்தாள்.
"சிங்கப்பூர் எப்படியிருக்கு?"
மேலும் பதில் அவளிடம் இல்லை. எதுக்கெடுத்தாலும் அவனுடன் சண்டைக்கு வருபவள். கலகலப்பானவளுக்கு இந்த அச்சம் நிறைந்த சூழல் எதிர்பாராதவொன்று.
"அண்ணா இதுவரைக்கும் உன்னோட ஒழுங்கா பேசக்கூட இல்லையே," அவனும் ஆமோதிப்பது போல தலையை அசைத்தான். "இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு தாராளமாகப் பேசு. நான் போனாப் பிறகு கவலைப்பட வேண்டாம்," என்றவனை தந்தை பின்னால் வந்து தலையை வாஞ்சையாக தடவினார். மீண்டும் அமைதி குடிகொண்ட அறை குளிரூட்டியின் சத்தத்தால் மட்டும் நிரவியிருந்தது. மௌனமாகவே வார்த்தைகள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன. அவனுக்கு இந்த மணித்தியாலங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. குடும்பத்தினரை சந்தித்து பேச இரண்டு மணித்தியாலங்கள் வழங்கப்பட்டிருந்தது.
தந்தையும் தாயும் இறுக கட்டியணைத்த கடைசி நொடி அவர்களின் இதயத்துடிப்பை உணர்ந்தான்.
கதவு திறக்கப்பட வெளியே இருந்து சூடான காற்று உள்ளே வந்து குளிரூட்டிய அறையை விழுங்க தொடங்கியது.
தங்கை திரும்பி அவனின் கையை நடுக்கத்துடன் பற்றினாள். வார்த்தைகள் இல்லாத அனுதாபம் மட்டுமே பரிமாறப்பட்டன.
உள்ளே வந்த காவல் அதிகாரி அவனின் கைகளின் விலங்கை மாட்டினார். இன்னொரு காவல் அதிகாரி சாந்தனின் உடைமைகள் சிலவற்றை பிளாத்திக்கு பையில் வைத்துக் கொடுத்தார்.
"இதில் உங்கள் மகனின் ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி இருக்கிறது," என்று பர்சை தனியாக கொடுத்தார். மூவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
"நீங்கள் அந்தப்பக்கம் வந்து காத்திருங்கள். பின் கதவு வழியாக பெட்டியில் வைத்து தருவோம்," என்று சொன்னது சாந்தனின் காதில் பட்டும் படாமல் விழுந்ததுதான் தாமதம் அதுவரை அடக்கி வைத்திருந்த ஒரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தின் ஓரம் நழுவியது.
(முற்றும்)
(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை).

