எனக்கான சொற்கள்

எனக்கான சொற்கள்

1 mins read

எதிர்பாராத நேரத்தில்

புயலாகத் தாக்கியது

பரவசச் சொற்கள்..

கடைத்தெரு, புல்தரை,

மணல்வெளி எங்கும்

துரத்தி, துரத்தி..

சேதப்படுத்தாமல்

சிலிர்க்கச் செய்ததால்

ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்

விடிந்தன அதிகாலைகள்..

பனித்துளியின் ஆயுளாக

திடுமெனத் தொலைந்தன

எனக்கே எனக்கான

அந்தப் பரவசச் சொற்கள்..

வானவில் கறுப்பு வெள்ளையான

வருத்தத்தோடு,

எங்கேனும் தென்படுமா என

தேடிக்கொண்டே நடக்கையில்

எல்லா திசைகளின் நெரிசலிலிருந்தும்

வசைச் சொற்களே வரிசையாய்..

மெளனச் சிறைக்குள்

மாட்டிக் கொண்டதோ?

மறுபடியும் வேறெங்கோ

எனைத் தேடுகின்றதோ?

சந்திப்புக்கான நம்பிக்கையோடு

தொடர்கிறது என் தேடல்

இன்றும்..!!

- பனசை நடராஜன்