அழகு

அழகு

1 mins read

ஒருகையில் அம்மாவின் விரலும்

மறுகையில் தின்பண்டமுமெனக்

கற்கண்டுப்பூக்களாய்க் கடக்கும்

காலைநேர மழலைப் பூஞ்சிட்டுகள்.

கைப்பிடியில் தேநீர்ப்பை தொங்க

கடகடவென்று ஓசையெழுப்பும்

வண்டியுடன் கடமையாற்றும்

தூய்மைப் பணியாளர்கள்.

நண்பகல் உணவிடைவெளியில்

காணொளி அழைப்பினில்

காதல் கடத்திவிட்டுக்

கிடைத்த இடத்தில் தலைசாய்த்துக் கண்ணயரும் கட்டுமானத் தொழிலாளர்கள்.

முதுமையின் சுருக்கங்களில்

முறுவலிக்கும் புன்னகைபூசித்

திறந்தவெளி உணவுக்கடைகளில்

எச்சில்குவளைகளை அகற்றியும் மேசைகளைத் துடைத்தும் பணியாற்றும் பாட்டிகள்.

பரபரப்பான வாழ்க்கையில் தன்னம்பிக்கையைப்

புன்னகையில் பொதிந்து இவ்வாழ்வினை அழகாக்கிவிடுகின்றனர்.

- அ.பிரபா தேவி