சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சியை ஊக்குவிக்க தொண்டாற்றி வருகிறது தெண்டாயுதபாணி கோயில். சிங்கப்பூர் எழுத்தாளர் கழக நிகழ்ச்சிகள், கண்ணதாசன் விழா, திருமுறை மாநாடு போன்ற தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்குத் தனது மண்டபத்தை இலவசமாக வழங்கி வருகிறது.
தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி மானியங்களையும் உபகாரச் சம்பளங்களையும் வழங்கு வதுடன் தமிழ்மொழி விருதையும் மாணவர்களுக்கு இக்கோயில் வழங்கி வருகிறது.
வசதிகுறைந்த உடற்குறையுள்ளோருக்கு இலவச சக்கர நாற்காலிகளை இக்கோயில் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அத்துடன், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், ஜாமியா இல்லம், அதிபர் சவால் ஆகியவற்றுக்கும் நிதி வழங்குகிறது கோயில்.
ஆண்டுதோறும் மக்களுக்காக இலவச சுகாதாரப் பரிசோதனைகளையும் இக்கோயில் நடத்தி வருகிறது. தீபாவளி மட்டுமன்றி சீனப்புத்தாண்டு, நோன்புப் பெருநாள் போன்ற கொண்டாட்டங்களையும் சமூக மன்றங்களுடன் இணைந்து நடத்துகிறது.

