சிங்கம், கரடி, கழுதைப்புலி போன்ற விலங்குகளுடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ளார் ராஜேஸ்வரி. இளநிலை விலங்குக் காப்பாளராக 'நைட் சஃபாரி'யில் பணிபுரியும் இவர், மிருகங்களின் நலனை உறுதிப்படுத்தியும் வருகிறார்.
26 வயது ராஜேஸ்வரி உயிர்தொழில்நுட்பத் துறையில் கால்பதிப்பார் என்றே எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுநராக அவர் மேற்கொண்ட வேலைப் பயிற்சி அவரின் கண்ணோட்டத்தை மாற்றியது.
"நான்கு சுவர்களுக்குள் தினமும் ஒரே மாதிரியான பணியில் ஈடுபட்டது என்னை முடக்கியது," என்றார் ராஜராஜேஸ்வரி மாரியப்பன்.
மாற்றத்தை நாடிய அவர், பட்டயக்கல்வி முடிந்து வேலைக் கண்காட்சி ஒன்றில் விலங்கியல் தோட்டத்தில் மிருகக் காப்பாளர் பணி குறித்து அறிந்துகொண்டார். வெள்ளைப் புலிகள், பனிக்கரடிகள் முதலிய மிருகங்களின் புத்துணர்வூட்டும் உலகுக்கு அவர் அறிமுகமானார். அவருக்கு அதில் கிடைத்த மகிழ்ச்சி அலாதி.
"முதன்முதலாக புலி, கரடி போன்ற பெரிய மிருகங்களுக்கு அருகில் சென்று பழகும் வாய்ப்பு உற்சாகமளித்தாலும் சிறிது தயக்கமும் இருந்தது. அவற்றுக்கு உணவூட்டி, இடங்களைச் சுத்தம் செய்வது மட்டுமல்ல இந்தப் பணி. மருத்துவப் பரிசோதனைகள் செய்யவேண்டும், வளமூட்டும் பயிற்சிகள் அளிக்கவேண்டும். இப்பணி எனக்கு முழுமையான ஓர் உணர்வை ஏற்படுத்த வல்லது என்று உணர்ந்துகொண்டேன்," என்றார் அவர்.
விலங்குப் பராமரிப்புத் துறையில் தனது கவனத்தைத் திருப்பினார். மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல், பாதுகாப்பு உயிரியல் துறையில் பட்டம் பெற்றார் ராஜேஸ்வரி. அது அவரின் கண்களைத் திறந்து வைத்தது.
அருகிவரும் உயிரினங்களின் பரிதாப நிலை ராஜேஸ்வரியின் மனதை உருக்கியது. விலங்குகளின் தேவைகள் குறித்தும் அவர் கூடுதலாக புரிந்துகொண்டார். தனது பராமரிப்பில் உள்ள விலங்குகளுக்குச் சிறந்த நல்வாழ்வை அளிப்பதை ராஜேஸ்வரி தன் இலக்காகக் கொண்டார்.
சவால்மிக்க விலங்குப் பராமரிப்பைக் குழந்தை பராமரிப்பு போலவே பார்க்கிறார் ராஜேஸ்வரி. வேலையால் களைத்துப் போனாலும் இதில் மனநிறைவு காண்கிறார் அவர்.
"ஒவ்வொரு மிருகத்துக்கும் மனிதர்கள் போலவே வெவ்வேறு குணாதிசயங்கள் உண்டு. கோபம், சோர்வு எனச் சில நேரங்களில் அவற்றின் குணங்கள் மாறும். ஆனால் அவை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நம்மால் உணரமுடியும்," என்றார் அவர்.
பராமரிப்புடன் நைட் சஃபாரியில் தனது பணியின் வாயிலாக விலங்குப் பாதுகாப்பு முயற்சிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ராஜேஸ்வரி. வருங்காலத்தில் விலங்கு மருத்துவத்தில் ஈடுபடும் ஆர்வமும் அவருக்கு உண்டு.

