ரத்தினக்கற்களால் கவர்ந்திழுக்கப்பட்ட சரவணன் காசிநாதன், தமது 16 ஆண்டுகால ஆசிரியர்ப் பணியிலிருந்து விலகி, பொழுதுபோக்கை முழுநேரமாக மேற்கொள்ள முடிவெடுத்தார். ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராய்வது தனது மன உளைச்சலைப் போக்குவதாகக் கூறினார் இவர். இவரின் தனிப்பட்ட சேகரிப்பில் தற்போது 400 ரத்தினக்கற்கள் உள்ளன.
இவர் 2006ல் ராசி பலன் கருதி நீலமணி ஒன்றினைத் தேடியபோது ரத்தினக்கல் உலகத்துக்கு அவர் அறிமுகமானார். சாதாரண நீலமணி முதல் ஆக அரிய 'பப்பரட்சா' நீலமணிக்கும் சொந்தக்காரர் ஆனார் சரவணன்.
"ஒவ்வொரு ரத்தினக்கல்லும் தனித்துவமான நிறத்தைக் கொண்டுள்ளது," என்றார் சரவணன்.
வெவ்வேறு நிறங்களிலான ரத்தினக்கற்களைச் சேகரிக்க வேண்டும் என்பது சரவணனின் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கு நிதியும் தேவைப்பட்டது. பணிபுரியும் காலத்திலேயே இந்தப் பொழுதுபோக்கிலும் மும்முரமாக இறங்கினார்.
பொழுதுபோக்கை ஒரு வர்த்தகமாக்கும் யோசனை சரவணனுக்குள் உதயமானது.
ரத்தினக்கல் வியாபாரியாகக் கடந்த ஆண்டு மாறிய இவர், ரத்தினக்கற்கள் தனித்துவம் வாய்ந்தவை என்றும் நிறத் துல்லியமே இந்த வியாபாரத்தில் முக்கியமானது என்றும் கூறினார்.
"சிறிதளவுகூட பழுப்பு, ஊதா நிறக் கலப்படம் இருந்தால் அதன் விலை சில நூறு வெள்ளி, சில ஆயிரம் வெள்ளி என வேறுபட வாய்ப்புண்டு," என்றார், 'ஃபார் ஈஸ்ட்' வளாகத்தில் கடை திறந்துள்ள இவர்.
"ஒரு கேரட் அளவில் உள்ள மாணிக்கக் கல் 400 வெள்ளிக்கு விலை போகுமா 15,000 வெள்ளிக்கு விலை போகுமா என்பதை நிறம்தான் நிர்ணயிக்கும்," என்றார் அவர்.
செதுக்கப்படா கற்களைச் செதுக்குவதற்கு ரத்தினக்கல் வெட்டுபவர்கள் தேவை. இதற்கு, வியட்னாமில் உள்ள ஒருவரின் சேவையை சரவணன் நாடி வருகிறார்.
கற்களை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பிப் பரிசோதனை செய்வதற்கும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் தனிச் செலவுகள் உண்டு. ஆகையால், இது ஓர் ஆடம்பரப் பொழுதுபோக்குதான் என்று ஒப்புக்கொண்டார் சரவணன்.
இதன் பின்னணியில் பலரின் ரத்தமும் வியர்வையும் உள்ளது. சில நாடுகளில், ரத்தினச் சுரங்க ஊழியர்கள் வதைக்கப்படுகின்றனர்.
அவர்களில் சிலரின் வாழ்க்கையை இலங்கையில் நேரில் கண்ட சரவணன் மனமுருகினார்; ரத்தினக்கல் துறை பல குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு அடித்தளம் என உணர்ந்துகொண்டார்.

