தன்னுரிமைத் தொழிலாளர்களுக்கான அனுகூலங்கள் அதிகரிக்கப்பட்டாலும் அவர்களது சம்பளமோ சேமிப்போ உயரும் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. எனவே அவர்களின் தேவைகளை வேலைச் சந்தை ஈடுகட்ட வேண்டும் என்று தமிழ் முரசிடம் பேசிய வல்லுநர்கள் கூறினர்.
"தன்னுரிமைத் தொழிலாளர்களுக்கும் முதலாளிகள் மசேநிதிச் சந்தா செலுத்தினால் அவர்களுக்கும் நிறுவனத்திற்காக வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறையலாம்," என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மனிதவள நிர்வாகம், உளவியல் விரிவுரையாளரான ரமேஷ் சந்திரசேகரன்.
சுயதொழில் செய்பவருக்கு சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டால் அவருக்கும் வேலையிட ஊழியருக்கும் உள்ள வேறுபாடுகள் குறையும் என்றும் அவர் கூறினார்.
தன்னுரிமைத் தொழிலாளருக்கு மசே நிதி சந்தாவைச் செலுத்த முதலாளிகளைக் கட்டாயப்படுத்துவது, தற்போதைய நிச்சயமற்ற பொருளியல் சூழலில் முதலாளிகளுக்குச் சுமையாக இருக்கும் என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராணி டான்.
ஓய்வுக்காலத் தேவைகள், வீட்டுத் தேவைகள், மருத்துவச் செலவு ஆகியவற்றுக்குப் போதிய தொகை கைவசம் இருப்பதை உறுதிசெய்வதே மசே நிதித் தொகை நோக்கம். முழுநேர வேலையில் இல்லாவிட்டால் அத்தொகை விரைவில் கரைந்துபோகும் அபாயம் இருப்பதை அவர் சுட்டினார்.
மசே நிதியில் இருந்து சிறு தொகைகளை வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமுன், அதற்கான வரம்புகள் வலுவாக இருக்கவேண்டும் என்றார் திரு ரமேஷ்.
அக்கூற்றை வழிமொழிந்த டாக்டர் ராணி, முன்னர் மசேநிதித் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி இருந்தபோது பலர் தங்கள் சேமிப்பைக் கரைத்துத் தீர்த்ததைச் சுட்டினார்.
முழுநேர வேலை செய்யாதோரின் திறன் மேம்பாட்டுக்கு அரசாங்கம் தாராளமாக உதவியிருப்பதை வல்லுநர்கள் சுட்டினர்.
தனிமனிதர்கள் தங்கள் நிதிநிலைமையை சொந்தப் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார் திரு ரமேஷ்.
"திறன்களை வெற்றிகரமாக மேம்படுத்தும் இத்தகைய ஊழியர்கள், அவற்றுக்கேற்றபடி கூடுதல் ஊதியத்தைப் பெற்று தங்கள் வாழ்நாளுக்காகச் சேமிக்கலாம்," என்றார் அவர்.
"முழுநேர வேலையில் இல்லாதோர், வேலை செய்யும் நாள், நேரம் ஆகியவற்றில் அதிக நீக்குப்போக்கை அனுபவிப்பதால் சுய நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்," என்றார் டாக்டர் ராணி.
அத்தகையோரின் தேவைகளை ஆராய, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் 2015ல் 'யூஎஃப்எஸ்இ' என்ற பிரிவை அமைத்தது. தேசிய டாக்சி சங்கம், தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், ஒளி, ஒலி, ஆக்கபூர்வ உள்ளடக்க நிபுணர்கள் சங்கம் போன்றவை அதில் அங்கம் வகிக்கின்றன.
ஊழியர்களின் வருவாய், வேலை வாய்ப்பு, நலன் ஆகியவற்றை வலுப்படுத்த அது முனைவதாகக் கூறினார் தேசிய டாக்சி சங்கம், தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் ஆகியவற்றின் ஆலோசகர் இயோ வான் லிங்.
"எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் 'யூஎஃப்எஸ்இ' நிதிஉதவித் திட்டத்தைச் செயல்படுத்தினோம். அனைத்துத் தரப்பினரும் வெற்றிபெற அரசாங்க அமைப்புகள், தொழில்துறை, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எனப் பல்வேறு பங்காளிகளுடன் தொடர்ந்து செயலாற்றுவோம்," என்றார் திருவாட்டி இயோ.
முழுநேர வேலையில் இல்லாதோரை இரண்டாந்தரமாகக் கருதும் மனப்போக்கு மாறவேண்டுமென வலியுறுத்தும் வல்லுநர்கள், அனைத்து ரக ஊழியர்களையும் ஒருங்கிணைப்பதில் எல்லாருக்கும் பங்குள்ளது என்கின்றனர்.
தன்னுரிமைத் தொழிலாளர்க்கான நிதி நிர்வாக ஆலோசனைகள்
* தன்னுரிமைத் தொழிலில் அல்லது சுயதொழிலில் ஈடுபடுவதற்குமுன், உங்களுக்குக் குறைந்தபட்சமாக எவ்வளவு வருவாய் தேவைப்படும், அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்வீர்கள் எனக் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
* ஈட்டும் வருவாய்க்கும் சேமிப்புக்கும் தனித்தனிக் கணக்குகளை வைத்திருங்கள். இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வருவாய் ஈட்டினால் உரிய நேரத்திற்குள் தொகை வந்துவிட்டதா என்பதைப் பார்வையிடுவதற்கு உதவியாக இருக்கும்.
* மத்திய சேமநிதியின் சாதாரணக் கணக்கிலும் சிறப்புக் கணக்கிலும் பணத்தைச் செலுத்துவது கட்டாயமில்லை என்றாலும் அதை நீங்களாகவே செய்வது நல்லது. பதினைந்து ஆண்டுகளில் முதன்முறையாக சிறப்புக் கணக்குகள், மெடிசேவ் கணக்குகள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் 4 விழுக்காட்டிலிருந்து 4.01 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
* கூடுதல் வட்டி அளிக்கும் வங்கிக் கணக்குகளிலும் வைப்புத் தொகைக் கணக்கிலும் தொகையைச் சேமித்து வைப்பது நல்லது.

