மௌன மொழி

10 mins read

வேலை­யைத் துவங்க எத்­த­னித்­த போது அந்த இடமே எவ்­வித சிறு சத்­த­மு­மின்றி அமை­தி­யில் போட்ட திறன்­பே­சியைப்போல் கிடந்­தது. நான் ஒரு மரங்­க­ளின் மருத்­து­வர் என்று கூட வைத்­துக் கொள்­ள­லாம்; அவ்­வாறு சொல்­லிக்கொள்­வ­தில் எனக்கு தனி கர்­வ­மும் உண்டு.

மர­வளர்ப்­பியல் (அர்­போரி கல்ச்­சர்) துறை­யில் பட்­டம் பெற்று, இயற்கை வனப்­பு­டைய நிலம் சார்ந்த துறை­யில் (லேண்ட்ஸ்­கேப்) கடந்த 17 வரு­டங்­க­ளாக அர்­போ­ரிஸ்ட் (மரப் பாது­காப்பு நிபு­ணர்) ஆக பணி­பு­ரி­கி­றேன்.

சிறு வயது முதற்­கொண்டு இயற்­கையை நேசிக்­கும் நான், குடியிருப்புப்பேட்டைகளில் உள்ள மரங்­கள், சாலை­யோர மரங்­கள் மற்­றும் பள்­ளி­களில் உள்ள மரங்­களை பாது­காப்­புக் கருதி ஒரு குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­யில் சோதித்து அறிக்­கை­களை ஒப்­ப­டைப்­பேன்.

இப்­ப­டித்­தான் போன வாரம் கூட ஒரு காட்­டிற்கு மரங்­க­ளை ஆய்­வு செய்யச் சென்­றபோது அங்கு அல்­பீ­சியா, கரு­வேலம், இல­வம், பாதாம் முத­லிய மரங்­கள் அடர்ந்து உய­ர­மாக வளர்ந்து நின்­றன.

காட்­டிற்­குள் நுழைந்­த­தும் 'கீச் கீச்' என்று ஆங்­காங்கே கேட்ட பற­வை­க­ளின் கான இசை­கள் மனத்தை மயக்­கி­னா­லும், அங்கு ஊர்ந்து சென்ற பாம்­பு­களும்பூச்சி வகை­களும் உள்­ளுக்­குள் பயத்­தைத் தோற்­று­வித்­தன. அன்று வேலை­யி­லி­ருந்து திரும்­பி­ய­தும் என் கைகளில் உள்ள தடிப்­பு­க­ளைப் பார்த்து என் மனைவி நான்சி உடனே,

"என்­னங்க கையெல்­லாம் இவ்­வ­ளவு தடிப்பா இருக்கே" எனப் பத­றிப்­போய் நுண்­ணு­யிர்க் கொல்லி எனப்­படும் ஆண்­டி­ப­யா­டிக் மருந்­தைத் தடவிவிட்­டாள். நாங்­கள் இரு­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் காத­லைப் பரி­மா­றிக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு இல்­லற வாழ்க்­கை­யில் அடி­யெ­டுத்து வைத்­த­வர்­கள். எங்­க­ளு­டைய இனிய வாழ்க்கை ஓங்கி செழித்து வள­ரும் மரங்­க­ளைப் போல உயர்ந்து விளங்­கி­னா­லும் இத்­தனை ஆண்டுகள் கடந்­தும் குழந்­தைப்­பேறு கிட்­டா­தது கிளை­கள் இல்லாத தனி­ம­ரத்­தைப் போலவே எங்­க­ளுக்­குத் தோன்­றி­யது.

ஆரம்­ப காலத்­தில் இரு­வ­ரும் பார்க்­காத மருத்­து­வர் இல்லை. செய்­யாத வைத்­தி­ய­மும் இல்லை. இரு­வ­ரி­ட­மும் எந்­தக் குறை­யும் இல்லை என்­பதே நாங்­கள் பார்த்த அனைத்து மருத்­து­வர்­க­ளின் ஒரு­மித்த குர­லாய்ப் போக, சில சிகிச்­சை­க­ளுக்­கும் கூடப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டோம். எவ்­வ­ள­வு­தான் தொழில்­நுட்­பம் வளர்ச்­சி­ய­டைந்­தா­லும் வச­தி­கள் பெரு­கி­னா­லும் சில­வற்றை விலை கொடுத்து வாங்க முடி­யாது என்­பது எங்­கள் வாழ்க்­கை­யில் உண்­மை­யா­கிப் போனது. அத­னால்­தான் என்­னவோ, பள்­ளி­களில் மரங்­களை சோதிக்க எப்­போ­தா­வது வரும்­போது சில நேரங்­களில் கண்­ணுக்­குத் தென்­பட்ட பிள்­ளை­களைக்கூட என் சொந்­தப் பிள்­ளை­யாக பாவித்து, மனத்­திற்­குள்­ளேயே கற்­ப­னைக் கோட்­டையை கட்டிவிடு­வேன்.

இன்று காலை என் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்து ஒரு பள்ளி உத­வியை நாடி­யி­ருப்­ப­தால் உடனே போகும்­படி கூறி­னார்­கள். யாரோ ஒரு வழிப்போக்­கர் அங்­குள்ள ஒரு பெரிய தூங்­கு­மூஞ்சி மரம் பார்க்­கவே ஆபத்­தா­ன­தாக தோன்­று­கிறது எனப் புகார் அளித்­தி­ருக்­கி­றார். அதன் அடிப்­ப­டை­யில் இன்று நான் வந்­தி­ருப்­பது, 'அங் மோ கியோ' வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு உயர்­நி­லைப் பள்ளி. பள்­ளி­யின் நுழை­வா­யில் கத­வ­ருகே நான் சோதிப்­ப­தற்­காக வந்த கம்­பீ­ர­மான தோற்­ற­மு­டைய அந்த தூங்­கு­மூஞ்சி மரம் என்னை வர­வேற்­றது. பொது­வா­கவே தூங்­கு­மூஞ்சி மரத்­தின் அடி­ம­ரம் குட்­டை­யா­க­வும், மேற்­ப­குதி குடை போல் பரந்­தும் இருக்­கும். அங்­கி­ருந்த அந்த மரத்­தில் ஆங்­காங்கே இளஞ்­சி­வப்பு நிறத்­தில் பூக்­கள் பூத்­துக் குலுங்க, அது அந்­தப் பள்­ளிக்கே ஒரு தனி அழ­கைக் கொடுத்­தது என­லாம். அதோடு மட்­டு­மல்­லா­மல் சுற்­றும் முற்­றும் திரும்பி அந்­தப் பள்­ளியை பார்­வை­யி­னாலே அல­சி­னேன். அங்கே கண்­ணுக்­கெட்­டிய தூரத்­தில் உள்ள விசா­ல­மான பச்­சைப்­ப­சேல் என்ற தோட்­டம் என்னை அதி­க­மா­கக் கவர்ந்­தது.

நினை­வு­க­ளின் ஊடே, அந்த மரத்தை மிக­வும் நுணுக்­க­மாக அடிப்­படை மதிப்­பீடு செய்து கொண்­டி­ருந்­தேன். என் அனு­பவத்­தில் என்­னால் மரத்­தின் இலை­க­ளைப் பார்த்­தாலே அதன் ஆரோக்­கி­யத்தை ஓர­ளவு கணக்­கிடமுடி­யும். இருந்­தா­லும் சிங்­கை­யைப் பொறுத்தவரை­யில் எங்­குமே விதை போட்டு மரம் வள­ரு­வ­தில்லை. அத­னால் பாது­காப்­புக் கருதி மிக­வும் கவ­ன­மா­கவே வேலை­யில் ஈடு­பட்டு அறிக்கை தாக்­கல் செய்­வது என் வழக்­கம். முத­லில் அந்த தூங்­கு­மூஞ்சி மரத்­தின் கிளை­க­ளைச் சோதிக்­கும் பணி­யைத் துவங்­கி­னேன்.

அதற்­குள் மதிய உணவு இடை­வேளை நெருங்க, பள்ளி மணி­யும் ஒலித்­தது. அவ்­வ­ள­வுதான், அமை­தி­யில் கிடந்த தொலை­பேசி உயிர்ப்பெற்று கிணு­கி­ணுப்­ப­தைப் போல பள்ளி முழுக்க மாண­வர்­களின் பேச்­சுக் குரல்­கள் கேட்க ஆரம்­பித்­தன. அப்­போ­து­தான் அவளை முதன்­மு­றை­யா­கப் பார்த்­தேன்.. சில மாண­வர்­கள் விளை­யாட்­டுத் திட­லி­லும் மற்­றும் சிலர் உண­வங்­கா­டி­யி­லும் மொய்த்­துக் கிடக்க அவள் மட்­டும் சிட்­டாய்ப் பறந்து என் கண்­ணுக்­கெட்­டிய தூரத்­தில் உள்ள பள்­ளித் தோட்­டத்­திற்­குள் நுழைந்­தாள். மாநி­றத்­திற்­கும் சற்று தூக்­க­லான நிறம், வட்­ட­மான முகத்­தில் சிறு முத்­துப் போல் சில பருக்­கள், நேர் வகிடு எடுத்­துப் போடப்­பட்ட குதி­ரை­வால் பின்­னல் என பார்ப்­ப­தற்கே அழ­காக இருந்­தாள்.

அவள் முத­லில் தன் மிரு­து­வான கைக­ளால் தோட்­டத்­தில் இருந்த செடி­க­ளின் இலை­களை மெல்ல வரு­டிக்கொடுத்­தாள். அப்­போது அவ­ளின் பளிங்­குக் கண்­கள் அந்த தோட்­டத்­தைச் சுற்­றி­லும் சுற்­றுப் பய­ணி­கள் போல் வலம் வந்துகொண்­டி­ருந்த பட்­டாம் பூச்­சி­க­ளோடு சேர்ந்து சுழன்­றது. சிறிது நேரம் அங்­கேயே நின்­று கொண்டு செடி­க­ளோடு உற­வா­டி­ய­வள் பிற­கு­தான் என்­னைக் கவ­னித்­தாள். அவ­ளு­டைய அக­ல­மான அந்த நெற்­றி­யில் குழப்ப ரேகை­கள் படர, தயங்­கி­ய­வாறே மெல்ல என்­னி­டம் வந்து,

"ஹாய் அங்­கிள்" என்­றாள்.

"ஹாய்"

"இந்த மரத்­துல என்­ன பண்­றீங்­கன்னு தெரிஞ்­சிக்­க­லாமா?" என ஆர்­வத்­து­டன் விசா­ரித்­தாள்.

"மரம் ஆரோக்­கி­யமா இருக்­கான்னு பார்க்க வந்­து­ருக்­கேன்"

"ஏன் அங்­கிள், பார்த்தா நல்­லாத்­தானே இருக்கு?"

"உடம்பு நமக்கு நல்லா இருக்­கப்­பவே பொது மருத்­து­வப் பரி­சோ­தனை செஞ்­சிக்­கி­றோம்ல, அது­போ­லத்­தான் இது­வும்," என்­றேன் அவ­ளுக்­குப் புரி­யும்­படி.

"ஓ..அப்­ப­டியா?" என்­ற­வாறே என்­னி­டம் விடை­பெற்று பள்­ளிக்­குள் சென்­றாள்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்­டிற்­குக் கிளம்­பி­னேன். அங்கு நான்சி மிக­வும் சோர்­வு­டன் படுத்­துக் கிடந்­தாள். என்னை நிமிர்ந்­து பார்த்த அவ­ளின் கண்­கள் கலங்­கின. அரு­கில் சென்று அவளை நான் ஆத­ர­வாய் அணைக்க, அந்த அணைப்பு அவ­ளின் வலியை எனக்­குள் கடத்­திச் சென்­றது. பாவம் அவள், மாதா­மா­தம் இந்­தப் பிரச்சினை வேறு அவ­ளைப் பாடாய்ப்படுத்­து­கிறது. சிகிச்­சை கார­ண­மாக நிறைய மாத்­தி­ரை­களை எடுத்­துக்கொண்­ட­தால் மன­வ­லி­யோடு இப்­போது உடல் வலி­யும் அவ­ளி­டம் தஞ்­சம் புகுந்துகொண்­டது. அவள் தலை­யைக் கோதி­யப­டியே,

"ஏதா­வது சாப்­பிட்­டியா?" என்­றேன். அவள் இல்லை என தலை­ய­சைக்க, பழச்­சா­று பிழிந்து கொடுத்து அவளை குடிக்க வைத்­தேன்.

அவ­ளது கவ­னத்தை திசை திருப்ப எண்ணி அன்று பள்­ளி­யில் பார்த்த சிறு­மி­யைப் பற்றி அவ­ளி­டம் கூற, அதை முழு­வ­து­மா­கக் கேட்ட அவளோ, "நமக்கு குழந்தை பிறந்­தி­ருந்­தால் அவள் வய­து­தானே இருக்­கும்?" எனக் கூறி கண்­ணீர் வடித்­தாள்.

"சரி, விடும்மா," என்­ற­படி அவளை நான் அமைதிப்படுத்த, சிறிது நேரம் பேசிக்கொண்­டி­ருந்­த­வள் பிறகு ஆயா­சம் தீரக் கண்­ண­யர்ந்­தாள்.

மறு­நாள் காலை பள்­ளியை நெருங்­கி­ய­தும் நான் கண்ட காட்சி என்னை மெய்­சி­லிர்க்க வைத்­தது. அங்கு நேற்று நான் சந்­தித்த அதே சிறுமி, அந்த தூங்கு­மூஞ்சி மரத்தை அவ­ளு­டைய இரு கைக­ளை­யும் சேர்த்து அணைத்­த­படி அத­னி­டம் ஏதோ முணு­மு­ணுத்­துக் கொண்­டி­ருந்­தாள். அப்­போது மரத்­தில் ஏரா­ள­மான உணர்­வு­கள் தோன்றி, அது தன் இலை­களை அசைத்து மகிழ்ச்­சி­யைத் தெரி­விப்­பதை என்­னால் ஓர­ளவு புரிந்­துகொள்ள முடிந்­தது. நான் அரு­கில் சென்­ற­தும் என்­னைப் பார்த்­த­வள்,

"குட்­மார்­னிங் அங்­கிள்!" என்­றாள். நானும் பதி­லுக்கு வாழ்த்­தி­விட்டு,

"வாட்ஸ் யுவர் நேம்?" என்­றேன்.

"யாழினி" என்­ற­வ­ளி­டம்,

"ஆமா, யாழினி மரத்­துக்­கிட்ட ஏதோ சொன்­ன­மா­திரி இருந்­திச்சே?"

"ஆல் இஸ் வெல்"ன்னு சொன்­னேன் அங்­கிள்".

யாழி­னி­யின் அந்த வார்த்தை என் மனத்­திற்­கும்கூட ஏதோ ஒரு வகை­யில் ஆறு­தல் கொடுத்­தது.

"மரம், செடின்னா யாழி­னிக்கு ரொம்ப பிரி­யமோ?"

"ஆமாம் அங்­கிள், அத­னா­லதான் நான் பள்­ளி­யில 'கிரீன் கிளப்' இணைப்­பாட நட­வ­டிக்­கை­யில இருக்­கேன். அதோ அங்­கேத் தெரி­யுதே பள்­ளித் தோட்­டம், அது நானும் என் நண்­பர்­களும் சேர்ந்து உரு­வாக்­கி­னது," என சொல்­லச் சொல்ல அவள் கண்­க­ளுக்­குள் அவ்­வ­ளவு பர­வ­சம்.

"உங்­க­ளோட தோட்­டம் ரொம்ப அழ­கா­யி­ருக்கு," என்று நான் அவ்­வாறு சொன்­ன­வு­டன் அவள் உச்சி குளிர்ந்­து போனாள். அப்­போது ஒலித்த பள்ளி மணிச் சத்­தம் எங்­கள் உரை­யா­ட­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க, "ஸீ யூ லேட்­டர் அங்­கிள்" என்­ற­படி பள்­ளிக்­குள் விரைந்­தாள். என்­னைப் போல் அர்­போ­ரிஸ்ட் பணி­யில் இருப்­ப­வர்­கள் ஒரு மரத்தை பரி­சோ­த­னைச் செய்­யும்போது கிளை­கள், தண்டு, வேர் என முதற்­கட்ட சோதனை மேற்­கொள்ள வேண்­டும்.

மும்­மு­ர­மாக பணி­யில் மூழ்­கி­யி­ருந்த எனக்கு, நான்­சி­யி­டம் இருந்து உடல்­நிலை சரி­யில்லை என்ற குறுஞ்­செய்தி வர, அன்று மதி­யத்­திற்கு மேல் வேலை­யி­டத்­தில் அனு­மதி பெற்­றுக்கொண்டு வீடு திரும்பிவிட்­டேன்.

"வந்­துட்­டீங்­களா?" என்ற நான்­சி­யி­டம்,

"ஆல் இஸ் வெல்" என்­றேன்.

"என்­னங்க சொல்­றீங்க?" என்­ற­வ­ளி­டம் யாழி­னி­யின் நம்­பிக்­கை­யைப் பற்­றிக் கூறி­ய­தும் நான்­சி­யி­டம் கூட ஒரு தெளி­வு பிறந்­தது.

அடுத்த வாரம் பள்ளி விடு­முறை வந்­தது. அமை­தி­யான பள்­ளி­யில் அன்று காலை­யில் நுழைந்த எனக்கு எங்­கும் சிட்­டுக் குரு­வி­க­ளின் கீச்­சொ­லி­கள் மட்­டுமே கேட்­டன.

பிள்­ளை­கள் போக­வர இல்­லா­மல் இருந்­தது ஒரு வகை­யில் இடை­யூ­றின்றி வேலை பார்க்க ஏது­வாக இருந்­தா­லும் யாழி­னி­யைப் பார்க்­கா­தது சற்று ஏமாற்­ற­மா­கவே இருந்­தது.

ஒருநாள் அந்தி சாயும் வரை வேலை நீண்­டது. அப்­போது அந்த மரம் அதன் இலை­களை கீழ் நோக்கி தொங்­க­விட்டு, அது தேக்­கி­ய­தில் மீத­மி­ருக்­கும் நீர்த்­துளி­களை மழைச்­சா­ர­லைப்போல தனது எல்­லைக்­குள் தெளிக்க அங்­குள்ள நிலப்­ப­ரப்­போடு சேர்த்து அதில் நானும் குளிர்ந்­து போனேன் என­லாம். ஆம், இத்­த­கைய சிறப்­புத்தன்மை இந்த மரத்­திற்கு இருப்­ப­தால் இதற்கு மழை­ம­ரம் என்ற பெய­ரும்கூட உண்டு.

அந்த ஒரு வார விடுமுறைக் காலத்­தில் மரத்­தின் அனைத்துப் பாகங்­கள் மற்­றும் சுற்­றி­யுள்ள மண் என எல்­லா­வற்­றை­யும் மதிப்­பீ­டு செய்­த­தில், மரத்­தின் பலத்த தண்­டு­டைய பகு­தி­யில் மட்­டும் குறை­பாடு இருக்­குமோ என்ற ஐயம் என்­னுள் எழுந்­தது.

அதன்­ப­டியே அறிக்­கை தயா­ரித்து சமர்ப்­பிக்க, அவர்­கள் இரண்­டாம் கட்ட பரி­சோ­தனை செய்ய என்னை அறி­வு­றுத்­தி­னார்­கள்.

அடுத்து வந்த வாரத்­தில் பள்ளி திரும்­ப­வும் இயங்­கத் தொடங்­கி­யது. நானும் இரண்­டாம் கட்ட பரி­சோ­த­னைக்­காக சங்­கிலி­வாள், மர­வெட்டி, பெரிய கத்­த­ரிக்­கோல் முத­லிய கரு­வி­க­ளோடு பள்­ளிக்­குச் சென்­றேன். அன்று காலை தாம­த­மாக வேலைக்­குச் சென்­ற­தால் யாழி­னி­யைப் பார்க்க முடி­ய­வில்லை. மதிய உணவு இடை­வே­ளை­யின்போது அவள் வழக்­கம்போல் தோட்­டத்­திற்­குச் சென்றுவிட்டு என்­னைப் பார்க்க வந்­தாள். அங்கு சுற்­றி­யுள்ள கரு­வி­களை கண்­ட­தும், "மரத்­துக்கு என்­னாச்சு அங்­கிள்?" என்­றாள் பதற்­றத்­து­டன்.

"ஒரு சின்ன சந்­தே­கம், அதான் அடுத்த கட்­டப் பரி­சோதனை," என்­றேன்.

அதைக் கேட்­ட­து­தான் தாம­தம், ஒரு­விதப் பதற்றத்துடன், "அப்­ப­டின்னா ஏதும் பிரச்­சி­னையா?" என்­றாள்.

"அப்­ப­டி­யில்லை. நம்ப உடல் பரி­சோ­த­னை­யில மருத்­து­வ­ருக்கு சிறு சந்­தே­கம் வந்தாகூட ஸ்கேன் பாப்­பா­ருல்ல.. அது­போலத்­தான் இது­வும்" என அவள் போக்­கி­லேயே புரி­யும்­படி விளக்­கிய நான், அவ­ளின் முக வாட்­டத்தை மாற்ற முயன்­றேன்.

"அது­சரி, உன் செடி­கள் எல்­லாம் எப்­படி இருக்கு?"

"எது அங்­கிள்? இங்­கேயா? வீட்­டு­லேயா?"

"ஓ.. வீட்லகூட செடி இருக்கா?"

"எங்க குடி­யி­ருப்­புக்­குக் கீழே அனு­ம­தி­யோடு 8 பேர் சேர்ந்து பெரிய தோட்­டமே போட்­டு­ருக்­கோமே," என்று அவள் கூறி­ய­தும் எனக்­குள் வியப்பு மேலிட்­டது. இவ­ளு­டைய சின்­னஞ்­சிறு உல­கத்­தில் உள்ள இனிமையான பக்­கங்­கள் என் உள்­ளத்­தைக் கவர, அதை இன்­னும் புரட்­டிப் பார்க்­கும் ஆவ­லில், "உனக்கு இந்த தோட்­டக்­க­லை­யில எப்­படி இவ்­வ­ளவு ஆர்­வம் வந்­துச்­சின்னு தெரிஞ்­சிக்­க­லாமா?" என வின­வி­னேன்.

"ஊர்ல என்­னோட தாத்தா நான் விடு­மு­றைக்­குப் போகும் போதெல்­லாம் என்னை அழைச்­சிக்­கிட்­டுப் போயி அங்­குள்ள மரங்­கள், செடி­களை காமிச்சி அதைப் பத்தி நிறைய பய­னுள்ள தக­வல்­கள் எல்­லாம் சொல்­லிக் கொடுப்­பாரு... அதோடு இங்க கொஞ்­சம் பாருங்­க­ளேன்," என்­ற­படி அவ­ளு­டைய திறன்­பே­சியை உயிர்ப்­பித்து அதி­லுள்ள படங்­களை என்­னி­டம் காண்­பித்­தாள்.

அதைப் பார்த்த என் விழி­கள் அகல விரிந்து எனக்­குள்­ளும் தூங்­கிக் கிடந்த என் பால்ய நினை­வு­க­ளைத் தட்­டி­விட்­டது.

திறன்­பே­சி­யில் அவள் காட்­டிய புகைப்­ப­டத்­தில் நிறைய வித­வி­த­மான மரங்­கள், செடி கொடி வகை­கள் என எல்­லா­வற்­றை­யும் தன் பேத்­தி­யோடு சேர்த்து படம் பிடித்­தி­ருந்­தார் அவ­ளின் பாசக்­கா­ரத் தாத்தா.

மேலும் யாழினி என்­னி­டம், "என்­கிட்ட தாத்தா உலக வெப்­ப­ம­ய­மா­தல் குறித்­தும் நிறைய பேசு­வாரு..

அதைத் தடுக்க என்­னால முடிஞ்ச ஒரு சிறு பங்­காக செடி வளர்க்க ஆரம்­பிச்­சேன்.

இப்போ அதுவே எனக்கு பிடிச்ச பொழு­து­போக்கா மாறிப் போச்சு" என்­றாள். அதைக் கேட்ட நான் வியந்­து போய், "உங்க தாத்தா அறி­வி­யல் ஆசி­ரி­யரா?" என்­றேன்.

"இல்லை, அவர் ஒரு விவ­சாயி" என்ற அவ­ளின் பதி­லைக் கேட்டு வாய­டைத்­துப் போனேன். 'அப்ப இவ­ளுக்­குள் அவுங்க தாத்தா விதைச்ச விதை­தான் இப்ப செடியா வளர்ந்­துக்­கிட்டு இருக்கு' என யோசித்த என்னை நினை­விற்கு மீட்­டது அவ­ளின் கேள்வி.

"அங்­கிள், இதேபோல தூங்கு­மூஞ்சி மரம் எங்க தாத்தா வீட்­டிற்கு பின்­னாடி இருக்கு. நான் போன விடு­மு­றை­யில ஊருக்­குப் போனப்ப அதுல பறவை கூடு கட்­டி­யி­ருந்­திச்சி."

"ஓ... அப்­ப­டியா?"

"அப்ப, இது­லை­யும் கூடு கட்­டும்­தானே அங்­கிள்?" என்­றாள் வாஞ்­சை­யு­டன்.

அவ­ளின் அந்­தக் கேள்­விக்கு உடனே பதில் சொல்ல முடி­யா­மல் தடு­மா­றி­னேன்.

என்­னு­டைய இத்­தனை வருட பணி அனு­ப­வத்­தில் காட்­டில் உள்ள மரங்­களில் நிறைய சம­யங்­க­ளி­லும், குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள மரங்­களில் எப்­போ­தா­வ­தும் கூடு­க­ளைப் பார்த்­த­துண்­டே தவிர, எந்­தப் பள்ளி மரங்­க­ளி­லும் இது­வரை பற­வைக் கூடு என் கண்­க­ளுக்­குத் தென்­பட்­ட­தில்லை. இருந்­தா­லும் அவ­ளு­டைய விருப்­பத்தை உடைக்க விரும்­பா­மல், "கட்­ட­லாம்மா," என்­றேன்.

அன்று இரவு நான்­சி­யி­டம் யாழி­னி­யைப் பற்­றிப் பேசி பூரித்­துப் போனேன். அவ­ளும் இமை கொட்­டா­மல் கேட்­டுக் கொண்­டி­ருந்­தாள். நாட்­கள் நகர்ந்­தன. அடுத்­த­டுத்த நாட்­களில் சிங்­கப்­பூ­ரில் ஏற்­பட்ட தொடர் மழை­யினால் இடை­யி­டையே வேலை­கள் தடைப்­பட, பொது­வாக 2 வாரங்­களில் முடி­யும் இம்­மா­தி­ரி­யான வேலை மேலும் சில நாட்­கள் நீண்­டன. பணி நிறை­வ­டை­யும் அந்தநாளும் வந்­தது. அன்­று­தான் நான் யாழி­னியை கடை­சி­யா­கப் பார்த்­தேன்.

அவள் பதற்­றத்­து­டன் மரத்­தின் மதிப்­பீட்­டைத் தெரிந்­துகொள்­ளும் ஆவ­லில் என்­னைப் பார்க்க, "ஆல் இஸ் வெல்" என்று அவ­ளின் மொழி­யி­லேயே பதி­ல­ளித்­தேன்.

அதைக் கேட்­ட­தும், "தேங்­கியூ அங்­கிள்" என்­ற­படி மகிழ்ச்­சி­யு­டன் துள்­ளிக் குதித்து ஓடி மறைந்­தாள்.

நான் கிளம்­பத் தயா­ராகி மரத்தை ஒருமுறை தொட்­டுப் பார்த்­தேன்.

அப்­போது அன்று மருத்­து­வ­மனை சென்­றி­ருந்த நான்­சி­யி­ட­மி­ருந்து வந்த குறுஞ்­செய்தி எனக்­குள் இதமான தென்­ற­லாய்த் தீண்­டிச் செல்ல, மேலே நிமிர்ந்­து பார்த்த என் கண்­களில் ஓச­னிச்­சிட்­டுப் பறவை அழ­கிய கூடு கட்­டிக்கொண்­டி­ருப்­பது தென்­பட்­டது.

(குறிப்பு: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முத்தமிழ் சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற கதை)

நன்றி: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்