இலட்சியப் படிகள்

11 mins read

சிறுகதை

கி.சுப்பிரமணியம்

அது ஒரு சிறிய முடி திருத்­தும் கடை. உள்ளே செல்­வோ­ருக்கு ஏதோ தமி­ழ­கத்­தில் இருக்­கும் ஒரு கடைக்­குள் செல்­வது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்­தச் செய்­யும்.

சுவ­ரில், அறி­ஞர் அண்ணா, கலை­ஞர் கரு­ணா­நிதி, நாவ­லர் நெடுஞ்­செ­ழி­யன், எம். ஜி. ஆர், கலை­வா­ணர் போன்ற அர­சி­யல் மற்­றும் கலைத்துறை சார்ந்­தோ­ரின் புகைப்­ப­டங்­கள் மாட்­டப்­பட்­டி­ருக்­கும். தமி­ழ­கத்­தில் திரா­விடக் கட்­சி­கள் எழுச்சி பெற்ற அறு­ப­து­க­ளின் கால­கட்­டம் அது என்­ப­தால், அதன் தாக்­கம் சிங்­கப்­பூர், மலே­சியா போன்ற கடல் கடந்த தமி­ழர்­கள் வாழ்ந்த நாடு­க­ளி­லும் எதி­ரொ­லித்­தது. அதன் எடுத்­துக்­காட்­டின் தோற்­றம்தான் இரா­ம­லிங்­கத்­தின் கடை­யில் காணும் காட்சி.

முப்­பது வயது மதிக்­கத்­தக்க இரா­ம­லிங்­க­மும், அவ­ரை­விட ஐந்து வயது இளை­ய­வ­ரான அவ­ரின் தம்பி சுப்­பை­யா­வும் கடையை நடத்தி வந்­த­னர். கூடவே ஐம்­பது வயதைத் தாண்­டிய முனி­யாண்டி என்ற உற­வி­னர், உத­விக்கு இருந்தார். அவரை மாமா என்றே இரு­வ­ரும் அழைத்­த­னர்.

ஆரம்­பத்­தில் இந்தக் கடையைத் தொடங்­கிய இரா­ம­லிங்­கத்­தின் தந்தை, பின்பு முனி­யாண்­டியை தமி­ழ­கத்­தி­லி­ருந்து வர­வ­ழைத்­துக்­கொண்­டார். இரு­வரு­மாக சில காலம் சேர்ந்தே உழைத்­த­னர். அதன்­பின் முத­லில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து, இரா­ம­லிங்­கத்தைதான் அழைத்து வந்­தார் அவர் தந்தை.

சிங்­கப்­பூர் வந்த இரா­ம­லிங்­கம், இங்கு தந்­தைக்கு உத­வி­யாக கடை­யில் இருந்­தார். ஒரு வரு­டத்­திற்­குப்­பின், இரா­ம­லிங்­கம், தன் மனைவி மற்­றும் இரண்டு பிள்­ளை­க­ளோடு கூடவே தம்பி சுப்­பை­யா­வை­யும் இங்கு அழைத்­துக்­கொண்­டார்.

மகன்­கள் இரு­வ­ரும் தொழி­லில் ஈடு­பட்­ட­பின், முனி­யாண்­டியை அவர்­க­ளுக்குத் துணை­யாக வைத்­து­விட்டு, தந்தை நிரந்­த­ர­மாக தமி­ழ­கம் திரும்­பி­விட்­டார். தொழில் அனு­ப­வம் பெற்ற முனி­யாண்­டி­யு­டன் கடையை இரா­ம­லிங்­க­மும் சுப்­பை­யா­வும் தொடர்ந்து நடத்தி வந்­த­னர்.

முடி­தி­ருத்த பல­ரும், இன, மொழி பேதம் பாராது இக்­கடைக்கு வருகை புரி­வர். தமி­ழர்­க­ளின் வரு­கையே அதி­கம்.

கடைக்கு முடி­தி­ருத்த வரு­ப­வர்­கள், அமர்ந்து தங்­க­ளின் முறைக்கு காத்­தி­ருக்க நாற்­கா­லி­கள் போடப்­பட்­டி­ருக்­கும். அவர்­களின் காத்­தி­ருக்­கும் நேரத்தை சோர்­வின்றி போக்­கிட, தமிழ் முரசு, தமிழ் நேசன் மற்­றும் தமிழ் மலர் போன்ற நாளே­டு­களும், சில ஆங்­கில, மலாய் மற்­றும் சீன இதழ்­களும் வைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

வரு­கின்ற வாடிக்­கை­யா­ளர்­களில் பலர், கடையை நடத்­து­பவர்­க­ளுக்கு பழக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருப்­ப­தால், மனம்­விட்டு பல­வற்றை பற்றி பேசிக்­கொள்­வார்­கள். அவர்­கள் பேச்சு அக்­கம்­பக்­கத்­தில் நடப்­பவை பற்­றி­யும், உள்­ளூர் நாட்டு நடப்பைப் பற்­றி­யும், மெல்ல தமி­ழக அர­சி­யல் நிலை பற்­றி­யு­மாக இருக்­கும்!

அந்தப் பேச்­சில் அதி­கம் கலந்துகொள்­ப­வர் இரா­ம­லிங்­க­மும், முனி­யாண்­டி­யும் மட்­டுமே. குறை­வாக பங்­கிட்டு கொள்­ப­வர் சுப்­பை­யா­தான். அர­சி­யல் அதி­கம் பேச­மாட்­டார். ஆனால் இலக்­கிய ம் தொடர்பான பேச்சு வந்­தால், கொஞ்­சம் பேசு­வார். அது­வும் பேசு­கின்ற ஆளை பொருத்­து­தான். வீண் விவா­தத்தை தவிர்ப்­பார்.

தன் முறைக்­காக காத்­தி­ருந்த பாவா­டை­சாமி, அன்­றைய ஞாயிறு தமிழ் முரசைப் படித்­த­வண்­ணம் பேசத் தொடங்­கி­னார்.

'பாத்­தீங்­களா அண்ணே இன்­னைக்கு வந்த ஞாயிறு முர­சின் சங்­கப் பலகை பகு­தியை?' 'இலக்­கிய கட்­டு­ரை­கள் அருமை!' என்று இரா­ம­லிங்­கத்தை நோக்கிக் கேட்­டார்.

'என் தம்பி சுப்­பை­யாவைக் கேளுங்­கள், அவ­னுக்குப் பிடித்த இலக்­கிய பக்­கம் அது. மிக­வும் ஆர்­வ­மாகப் படிப்­பான். மற்ற பக்­கங்­களைவிட, இதை­யும் நல்ல சித்­தி­ரங்­க­ளோடு வரும் கவிதை பக்­க­மும்தான் அவ­னுக்குப் பிடித்­தது,' என்று புன்­மு­று­வ­லு­டன் தன் தம்­பியைப் பெரு­மி­தத்­து­டன் பார்த்தவண்­ணம் பதில் சொன்­னார் இரா­ம­லிங்­கம்.

"ஆமாம், தம்பி சுப்­பையா நல்ல இலக்­கியப் பற்­றுள்­ள­வர். நிறைய படிக்­க­வும், எழு­த­வும் செய்­வார்," என்று முனி­யாண்­டி­யும் சேர்ந்து புகழ்ந்து பேசி­னார்.

பதில் ஏதும் சொல்­லாது, வந்த ஒரு வாடிக்­கை­யா­ள­ரின் முடியை திருத்­திய வண்­ணம், ஒரு குறு­நகை மட்­டும் சுப்­பை­யா­வின் உதடு­களில் தோன்றி மறைந்­தன.

"பர­வா­லப்பா. நல்ல பழக்­கம்­தானே அது. என் வீட்டுப் பய­லுக, எடுத்­த­வு­டன் பத்­தி­ரி­கை­யின் பின்­பக்­கத்­தைத்­தான் முதல்ல பார்­பா­னுங்க," என்று பாவா­டை­சாமி சொல்­ல­வும் எல்­லோ­ரும் லேசாக சிரித்­தார்­கள்.

"பின்­பக்­கத்­தில் வரும் கவர்ச்­சி­யான சினிமா நடி­கர்­க­ளின் புகைப்­ப­டங்­க­ளுக்­கா­க­வும், திரைப்­படச் செய்­தி­க­ளுக்­கா­க­வும் நாளி­தழை வாங்­கும் இளை­யர்­கள், எந்தக் காலத்­தி­லும் இருக்­கத்­தான் செய்­கி­றார்­கள் அண்ணே. மேலும் நாளி­தழை விற்­பனை செய்­வ­தற்­கான உத்­தி­யில், இது­வும் ஒன்று," என்று பாவா­டை­சா­மிக்கு தன் கருத்தை சொன்­னார் இரா­ம­லிங்­கம்.

ஆமாம் என்ற தோர­ணை­யில் தலையை மெல்ல அசைத்த வண்­ணம் தொடர்ந்து நாளி­த­ழில் மூழ்­கி­னார் பாவா­டை­சாமி.

இப்­ப­டித்­தான் ஒவ்­வொரு நாளும், இதுபோன்ற கல­க­லப்­பான பேச்­சு­க­ளோடு, தொழி­லில் ஈடு­பட்­ட­வாறே பொழு­தும் சுக­மாக போகும்.

அவர்­கள் பேசிக்­கொண்­ட­து­போல் சுப்­பை­யா­விற்குத் தமிழ்ப் பற்­றும், இலக்­கிய ஆர்­வ­மும் உண்டு என்­ற­போ­தும், இவர் தமி­ழ­கத்­தில் இருக்­கும்போது குடும்பச் சூழ்­நிலை கார­ண­மாக படிப்பை பாதி­யிலே நிறுத்­திக்­கொண்­டார். அதை நினைத்து பிற்­கா­லத்­தில் மிக­வும் வருந்­தி­னார்.

தமி­ழின் மீது என்­ன­தான் ஆர்­வம் இருந்தபோதி­லும், அது தன் மன­நி­றை­விற்கு மட்­டு­மா­கத்­தான் இருந்­தது. பள்ளிச் சான்­றி­தழ் ஏதும் முறை­யாக இல்­லா­த­தால், இங்கு எந்தத் தமிழ் துறை­யி­லும் சுப்­பை­யா­வால் எளி­தில் வேலைக்குச் சேர முடி­ய­வில்லை. ஆயி­னும் கதை, கவிதை என நாளி­தழ்­க­ளுக்கு அவ்­வப்­போது எழு­து­வார்.

சில படைப்­பு­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும், சில திரும்­பி­வி­டும். ஆயி­னும் சுப்­பையா நேரம் கிடைக்­கும் போதெல்­லாம் படிப்­ப­தை­யும் எழு­து­வ­தை­யும் தொடர்ந்­தார். ஆனால், இதை­யெல்­லாம் மீறி அவர் உள்­ளத்­தில் தன் வருங்­கா­லம் மற்­றும் பொரு­ளா­தார உயர்வு பற்­றிய சிந்­த­னையே மேலோங்கி நின்­றது.

'இல்­லானை இல்­லா­ளும் வேண்­டாள், மற்று ஈன்­றெ­டுத்த தாய் வேண்­டாள், செல்­லாது அவன் வாயிற் சொல்' என்­றாளே ஔவை. எவ்­வ­ளவு பெரிய உண்மை.

பொரு­ளா­தா­ரத்­தில் உயர்ந்து, மக்­க­ளால் அடை­யா­ளம் கண்­டு­கொள்­ளப்­ப­டு­ப­வ­னின் எழுத்தை, பேச்சை, தடை­யின்றி உல­கம் ஏற்­றுக்­கொள்­கிறது. சிலரே அதற்கு விதி­வி­லக்கு என தோன்­றிற்று சுப்­பை­யா­விற்கு. ஆகவே முத­லில் தன்னை பொரு­ளா­தா­ரத்­தில் உயர்த்­திக்­கொள்­ள­வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தார்.

சிங்­கப்­பூர் வந்து சில ஆண்டு­கள் ஆயி­னும், தொடர்ந்து தகப்­பன் காலம்­தொட்டு இதே முடி­திருத்­தும் கடை­யில் ஈடு­பட்டு வரு­வதை அவ­ருக்கு சோர்வை ஏற்­ப­டுத்­தி­யது. இது அந்த தொழில் மீது கொண்ட வெறுப்­பி­னால் அல்ல. அதில் மேலும் வளர்ச்­சி­ய­டைய முடி­ய­வில்லை என்ற எண்­ணம்­தான் கார­ணம்.

கடை­யில் வரு­கின்ற வரு­மானத்­தில் அண்­ணன் குடும்­பத்­தோடு தானும் பங்­கிட்டு வாழ்­வது, அண்­ண­னுக்கு எவ்­வ­ளவு சிர­மம் உள்­ளது என்­பது சுப்­பை­யா­விற்கு நன்­றா­கவே தெரிந்­தது.

இந்த சிர­மங்­களைப் பற்றி அவர் அண்­ணன் இரா­ம­லிங்­கம் ஒரு­நாள்கூட முணு­மு­ணுத்­த­தில்லை.

இந்த லட்­ச­ணத்­தில் சுப்­பை­யா­விற்கு தன் உற­வு­வழிப் பெண்ணை மணம் செய்­து­மு­டிக்­க­வேண்­டும் என்ற, ஊரில் இருக்­கும் தன் தந்­தை­யின் தொடர் கடி­தங்­களும், அதற்கு ஆமோ­தித்து தன் அண்­ண­னும் தன்னை நச்­ச­ரிப்­ப­தும் சுப்­பை­யா­விற்கு எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யது.

தான் எப்­ப­டி­யும் இங்­கேயே வாழ்ந்து, உழைத்து, உள்­ளூ­ரி­லேயே மண­மு­டித்து முன்­னே­ற­வேண்­டும் என்ற வலு­வான எண்­ணம் சுப்­பை­யாவைப் பற்­றிக்­கொண்­டது.

ஒரு கடை­யோடு நின்று விடாது இன்­னும் சில கிளை­கள் ஏற்­ப­டுத்தி சிறந்த தொழி­ல­தி­ப­ராக முன்­னே­ற­வேண்­டும் என கனா காணு­வார்.

உள்­ளு­வ­தெல்­லாம் உயர்­வுள்­ளல் என்­றாரே வள்­ளு­வர், அதுவே சுப்­பை­யாவை ஆட்­கொண்­டது. புது கிளை திறப்­பது பற்றி தன் அண்­ண­னு­டன் பேசி­யி­ருந்­தா­லும், இராம­லிங்­கத்­திற்கு அதில் நம்­பிக்கை இல்லை.

இதற்­கெல்­லாம் நிறைய பணம் தேவைப்­படும் என்று சொல்லி மழுப்பி விடு­வார்.

ஆயி­னும் சிங்­கப்­பூரை சார்ந்த மலாய்க்­காரத் தொழில் அதி­பர் ஒரு­வர், ஒரு முடி­தி­ருத்­தும் கடையைத் தொடங்கி, பின்பு பல கிளை­களை ஏற்­ப­டுத்தி வெற்றி பெற்­றதைப்போல் தானும் ஆக­வேண்­டும் என்ற எண்­ணம் ஆழ­மாக சுப்­பை­யா­வின் உள்­ளத்­தில் புதைந்து கிடந்­தது.

அது­வெல்­லாம் சரி­தான். ஆனால் தன் அண்­ணன் இரா­ம­லிங்­கம் சொன்­னதுபோல், புதுப் கிளை திறப்­ப­தற்­கான முத­லீட்­டிற்கு வழி?

சிங்­கப்­பூர் அதி­வே­கத்­தில் முன்­னே­றிக்­கொண்­டி­ருந்த காலம் அது. தொழில்துறை­யில் முன்­னே­றும் சிங்­கப்­பூ­ரில் புதிய தொழிற்­சா­லை­கள் உயர ஆரம்­பித்­தன. முத­லீட்டை பெருக்­கிக்­கொள்ள, ஏதே­னும் வேலை­யில் சேர்ந்து, சில காலம் சம்­பா­திக்க வேண்டும் என்ற முடி­விற்கு வந்­தார் சுப்­பையா.

நன்­றாக சிந்­தித்துப் பார்க்­கை­யில், இப்­பொ­ழு­துள்ள கடையை அண்­ண­னையும், முனி­யாண்­டி­யையும் கொண்டே நடத்­தி­வி­ட­லாம் தானும் உடன் இருப்­பது வீண் என்றே நினைத்­தார். அதை தன் அண்­ண­னி­டம் நேர­டி­யாக சொல்­லி­யும் விட்­டார்.

"இரண்டு பேரைக் கொண்டே கடையை நடத்­த­லாம். நான் தொழிற்­சா­லை­யில் வேலை செய்யத் தொடங்­கி­னால் நமது குடும்பச் சுமை குறை­யும், புதிய கிளை தொடங்க கொஞ்­சம் முத­லீட்­டிற்­கும் வழி­பி­றக்­கும் அண்ணா," என மெல்ல எடுத்து சொன்­னார் சுப்­பையா.

"முடி­தி­ருத்திப் பழக்­கப்­பட்ட நீ தொழிற்­சா­லை­யின் கடு­மை­யான வேலையைத் தாங்க முடி­யுமா, வேண்­டாம் அங்­கு­போய் கஷ்­டப்­ப­டாதே சுப்­பையா. பணக்­க­வலை உனக்கு வேண்­டாம். இந்தக் கடை­யில் வரும் வரு­மா­னத்தை கொண்டு எல்­லா­வற்­றை­யும் நான் கவ­னித்­துக்­கொள்­கி­றேன்," என்­றார் சற்று கனி­வு­டன்.

இது தன் தம்பி மீது கொண்ட பாசத்­தி­னால் வந்த சொற்­கள் என்றபோதி­லும், நிதி­நி­லையை அவர் உண­ராது இல்லை. என்­ன­தான் கடை­யில் வரு­மா­னம் ஓர­ள­விற்கு வந்தபோதி­லும், கடைக்­கும் கடை­யோடு ஒட்­டிய வீட்­டிற்கு கொடுக்­கும் வாட­கை­யும், முனி­யாண்­டிக்கு தரும் சம்­ப­ளத்­தை­யும் கழித்­த­பின் வரும் மிச்ச வரு­வாயைக்கொண்டே சமா­ளித்து வரும் இரா­ம­லிங்­கத்­திற்கு அதன் சிர­மத்தை உணர்ந்­தா­லும் அதைத் தனக்­குள்­ளேயே வைத்­துக்­கொண்­டார்.

"அப்­படி இல்லை அண்ணா எனக்­கும் ஒரு மாற்­றம் தேவை படு­கிறது. கொஞ்ச காலம் தொழிற்­சா­லை­யில் வேலை செய்துபார்­க்கி­றேன். முடி­ய­வில்­லை­யென்­றால் விட்­டு­விட்டு மீண்­டும் கடை­யில் சேர்ந்து விடு­கி­றேன்,'' என்று அண்­ணனை சமா­தானப் படுத்­தி­னார் சுப்­பையா.

ஏதோ முடி­விற்கு வந்­து­விட்­டான் தம்பி என்­பதை உணர்ந்த இரா­ம­லிங்­கம்.

"சரி, இனி­யும் நான் சொல்லி நீ கேட்கப் போவ­தில்லை. ரொம்­ப­வும் சிர­ம­மில்­லாத வேலை கிடைக்­குமா என்று பார்," என்று தன் தம்பி மீது கொண்ட அக்­க­றையை வெளிப்­ப­டுத்­தி­னார்.

தன் நண்­பர் ஒரு­வ­ரி­டம் சொல்­லி­வைத்­த­படி, அஹ்­மாட் இப்­ரா­கிம் சாலை­யில் உள்ள மர ஆலை­யொன்­றில் சுப்­பை­யா­விற்கு வேலை கிடைத்­தது. நாளொன்­றிற்கு நான்கு வெள்ளி சம்­ப­ளம். அதை மாதம் இரு­மு­றை­யாக பிரித்துத் தந்­த­னர். மூன்று ஷிப்டு வேலை.

வெட்­டப்­பட்ட பெரிய மரத்தை இரு­பு­றத்­தி­லும் இயந்­தி­ரம் கொண்டு இறுக்­க­மாகப் பொருத்தி, நடு­வில் கன­மான நீண்ட இரும்புக் கத்தி போன்ற ஒன்றை இணைத்து, மரத்தைச் சுழற்­றச் செய்து, சீவு­வார்­கள்! பார்க்க ஏதோ பென்­சில் சீவும் பெரிய இயந்­தி­ரம்போல காட்சி தரும்.

ஒரே வேறு­பாடு, இது முழு மரத்­தின் தண்டைச் சீவும். சீவப்­பட்ட மரத்­தின் கர­டு­மு­ர­டான புறத் தோல் பகு­தி­கள், அக­ல­மான பெல்ட் போன்ற விரிப்­பில் வந்­து­கொண்டே இருக்­கும். அவை தேவை­யற்ற மரத்­தின் பகு­தி­கள்! அவற்றை அந்த விரிப்­பி­லி­ருந்து விரை­வாக இழுத்து வெளிக்­கொணர்ந்து பெரிய இரும்­புத் தொட்டி போன்ற ஒன்­றில் தூக்­கிப் போட­வேண்­டி­யது சுப்­பை­யா­வின் வேலை.

எட்டு மணி­நேர வேலை­யில் உடல் களைத்­துப் போகும் சுப்­பை­யா­விற்கு. ஆயி­னும் விடாது உழைத்­தார். வேகத்­தில் வரும் மரப்­பட்­டை­கள், சில சம­யம் சுப்­பை­யா­வின் கைக­ளை­யும் உடம்­பை­யும் பதம்­பார்த்­து­வி­டும். அவ்­வப்­போது ஏற்­படும் காயங்­களை முழுக்கை சட்டை போட்டு கொஞ்­சம் மறைத்­துக்­கொள்­வார். அண்­ண­னுக்­குத் தெரிந்­தால் மனம் புண்­ப­டு­வார் என்­ப­தற்­காக.

மாதத்­திற்கு இரு­முறை வழங்­கும் சம்­ப­ளத்தை அண்­ண­னி­டம் கொடுத்­து­விட்டு அவ­ரி­ட­மி­ருந்து செல­விற்குக் கொஞ்­சம் பணம் பெற்­றுக்­கொள்­வார்.

இப்­ப­டியே ஆறு மாதம் ஓடி முடிந்­தது. சுப்­பையா கொண்­டு­வந்த பணத்தை தனி­யொரு கணக்­கில் சேமித்து வைத்­தார் இரா­ம­லிங்­கம்.

கடை­யில் தலை­காட்­டு­வது குறைந்­தது. அவ்­வப்­போது தமிழ் நூல்­க­ளைப் படிப்­ப­தும், கவி­தை­கள் எழு­து­வ­தும் தடை­ப்பட்­டது சுப்­பை­யா­விற்கு.

மிக­வும் களைத்­துப்­போய் ஓர் இரவு வீடு திரும்­பிய சுப்­பை­யாவை வீதி­யில் கண்­டு­கொண்­டார் முனி­யாண்டி.

"என்ன சுப்­பையா, ரொம்ப களைத்­துப்­போய் வர்றியே. வேலை ரொம்ப கஷ்­டமா?" என்று பரி­வு­டன் வின­வி­னார்.

அவரே சுப்­பை­யா­வின் தோல்­மீது கைபோட்டு, சாலை­யோர கல்­லொன்­றின் மீது அம­ரச்­செய்­தார்.

"ஆமாம் மாமா. கொஞ்­சம் கடி­னம்­தான். ஆனா­லும் பர­வா­வில்லை சமா­ளிக்க முடி­கிறது," என்று சமா­தா­னம் சொன்­னார் சுப்­பையா.

"கடை­யில் அண்­ண­னின் நிலை­மையை முன்­னிட்­டும், புதிய கிளை திறக்­கும் ஆர்­வத்­தி­லும் "நீ கடு­மை­யாக உழைத்து பணத்­தைச் சேர்ப்­பது, பாராட்­டத்­தக்க விஷ­யம் தான். ஆனா­லும் நீ கடை­யில இல்­லாத மனக்­குறை உன் அண்­ணன் முகத்­துல நல்லா தெரி­யுது. அது இயற்­கை­தான் விடு.

"இனி­யும் எவ்­வ­ளவு நாள் இப்­படி கஷ்­டப்­பட்டு உழைக்­கப்­போரே. நான் ஒன்று சொன்­னால் அதைப்­பற்றி கொஞ்­சம் சிந்­திப்­பாயா?" என்று அந்த மங்­கிய தெரு­வி­ளக்­கில், சுப்­பையா முகம் பார்த்­துக் கேட்­டார் முனி­யாண்டி.

"சொல்­லுங்­கள்,'' என்­றார் சுப்­பையா.

'உன் அண்­ண­னி­டம் நான் பேசி இருக்­கி­றேன். உன் திரு­மணத்­திற்­காக அவர் சிறு­கச்­சி­றுக பணம் சேர்த்து வைப்­பதை பற்றி சொல்­லி­யி­ருக்­கி­றார். அது ஒரு கணி­ச­மான தொகைதான்! ஆகவே அந்தப் பணத்தை இன்­னும் கொஞ்­சம் பெருக்கி, நீ கொடுத்­து­வைத்த பணத்­தை­யும் கொண்டு முத­லில் உனக்கு தனி­யாக கடை­யொன்றை ஏற்­பாடு செய்­ய­லாம் என்று எடுத்துச் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.

"தனி­யாகக் கடையை நல்ல முறை­யில் நடத்த ஆரம்­பித்­த­பின், உன் திரு­ம­ணம் பற்றி யோசிக்­க­லாம் என்­றும் சொன்­னதை அவர் ஒரு­வாறு ஏற்­றுக்­கொண்­டார்," என்­றார் முனி­யாண்டி.

இதைக் கேட்ட சுப்­பையா ஒரு நிம்­ம­திப் பெரு­மூச்சை விட்­டார்.

"இன்­னொரு நல்ல செய்தி இருக்­கிறது," என தொடர்ந்­தார் முனி­யாண்டி.

"புக்­கிட் தீமா ஏழாங் கல்­லில் உன் அப்­பா­விற்கு தெரிந்த பழைய நண்­பர் ஒரு­வர் நம்மை போல முடி­தி­ருத்­தும் கடை­யொன்றை பல கால­மாக நடத்தி வரு­கி­றார். அவ­ருக்­கும் வய­தா­கி­விட்­டது. கடையை யாருக்­கா­வது விற்­று­விட்டு ஊருக்கு போகும் எண்­ணத்தை என்­னி­டம் சொன்­னார். என்­னி­டம் சொன்­னதை உன் அண்­ண­னி­ட­மும் சொன்­னேன். அந்­தக் கடைக்­கா­ரர் கேட்­கும் தொகை கொஞ்­சம் அதி­கம்­தான் என்ற போதி­லும், அது நல்ல மக்­கள் நட­மாட்­டம் கொண்ட பகுதி என்­ப­தால் எடுத்து நடத்­தி­னால் நல்ல பயன் தரும்," என்று விற்­ப­வர் கேட்­கும் தொகை­யை­யும் சொல்லி முடித்­தார்.

இதைக்கேட்ட சுப்­பை­யா­வின் முகம் சற்று மலர்ந்த போதி­லும்...

"ஆயி­னும் விற்­ப­வர் கேட்­கும் தொகையை நம்­மால் சமா­ளிக்க இய­லாதுபோல இருக்­குதே மாமா," என்று சோர்­வு­டன் தலை­யைத் தாழ்த்தி பதில் சொன்­னார் சுப்­பையா.

சிறிது நேரம் அமைதி நில­வி­யது.

மீண்­டும் முனி­யாண்டி பேச தொடங்­கி­னார்.

'சுப்­பையா, நான் உங்க அப்பா காலத்­துல இருந்து உங்க கடை­யில வேலை செய்­யு­றேன். நான் திரு­ம­ணம் ஏதும் செய்­யல. ஊரில் என்­னோட அம்மா இருந்­தாங்க. அவங்­க­ளுக்­குத்­தான் கொஞ்­சம் பணம் அனுப்­பிக்­கிட்டு இருந்­தேன். அவங்க கால­மா­ன­தும் அது­வும் நின்­னு­போச்சு. அதுக்­கப்­பு­றம் நான் ஊருக்குப் போகல. போற விருப்­ப­மும் இல்ல. அத விடு, என் கையில ஒரு இரண்­டா­யி­ரம் வெள்ளி சேமிப்­புல இருக்கு. இந்­தப் பணத்­தை­யும் சேர்த்தா, அந்தக் கடைக்­கா­ரர் கேட்­கும் பணத்தை நாம் கட்­டி­வி­ட­லாம். அந்­தக் கடையை நீ எடுத்து நடத்­த­லாம். என்ன சொல்­லுற? என்று தன் மன­தில் உள்­ளதை வெளிப்­ப­டை­யாக சொன்­னார் முனி­யாண்டி.

உற­வி­னர் என்­றா­லும், எத்­தனை பேருக்கு இந்த மனம் வரும்.

"வேண்­டாம் மாமா. இது உங்­கள் முது­மைக்­கா­லத்­திற்­கான சேமிப்பு. இதை நான் கடைக்­காக எடுத்­துக்­கொள்ள எனக்கு மனம் வர­வில்லை," என்று சற்று உணர்ச்­சிப் பெருக்­கு­டன் மறுத்­தார் சுப்­பையா.

"அட, நீ அப்­படி நினைக்க வேண்­டாம். உங்க அப்பா என்னை நம்­பித்­தான் ஊருக்கு போனார். அத­னால உங்க இரண்டு பேரோட கஷ்­ட­நஷ்­டத்­துல எனக்­கும் பங்கு இருக்கு. நீ இதைக் கட­னா­கவே எடுத்­துக்க. கடை நல்லா நடக்­கும்­போது, மெல்ல, கொஞ்ச கொஞ்­ச­மாக நீ திருப்­பிக் கொடுக்­க­லாம்," என்று உரி­மை­யு­டன் எடுத்துச் சொன்­னார் முனி­யாண்டி.

இதைக்கேட்ட சுப்­பையா நன்­றி­யு­ணர்ச்­சி­யு­டன் முனி­யாண்­டி­யின் கைகளைப் பற்­றிக்­கொண்டு தன் நெகிழ்வை வெளிப்­ப­டுத்­தி­னார்.

முனி­யான்டி மீண்­டும் தொடர்ந்­தார்.

"உன் அண்­ண­னி­டம் இந்த பண விஷ­யத்தை பற்றி சொல்­லிட்­டேன். நாளைக்கு உனக்கு இரவு ஷிப்டு என்­ப­தால் காலை­யில போய் ஒப்­பந்­தம் செய்­து­விட்டு வர­லாம் என்ன? என்று கூறி, சுப்­பை­யா­வின் பாசத்­து­டன் தோளைத் தட்டிக்கொடுத்­து­விட்டு இரு­வ­ரு­மாக மெல்ல வீடு நோக்கி நடந்­த­னர்.

அன்று இரவு சுப்­பை­யா­விற்கு தூக்­கம் பிடிக்­க­வில்லை. இரவு வெகு­நே­ரம், முனி­யாண்­டி­யின் கைகொ­டுத்து உத­விய பெருந்­தன்மை பற்­றி­யும், தானும் ஒரு புதிய கடைக்கு முத­லாளி ஆகப்­போ­வதைப் பற்­றி­யு­மான சிந்­த­னை­யில் மூழ்­கிக்கிடந்­தது அவர் மனம்.

மறு­நாள் மூவ­ரு­மாக முனி­யாண்டி குறிப்­பிட்ட கடை­யைப் பார்­வை­யிட்­ட­னர். அந்தக் கடை­யின் பரா­ம­ரிப்பு அரு­மை­யாக இருந்­த­தோ­டல்­லா­மல் சுற்­ற­மும் மக்­கள் புழக்­க­மும் இருந்­தது. இங்­கும் தமி­ழர்­கள் கணி­ச­மாக வாழ்ந்து வந்­த­னர்.

உனக்குக் கடை பிடித்து இருக்­கி­றதா என்று இரா­ம­லிங்­கம் தன் தம்பி சுப்­பை­யாவை பார்த்து கேட்க, தன் ஒப்­பு­தலை ஒரு புன்­ன­கை­யு­டன், ஏற்­றுக்­கொண்­டதை வெளிப்­ப­டுத்­தி­னார் சுப்­பையா. அதன்­பின் முறை­யாக ஒப்­பந்தப் படி­வத்­தில் எல்­லோ­ரும் கையொப்­ப­மிட, கடை சுப்­பை­யா­வின் பெய­ருக்கு மாற்­றப்­பட்­டது.

தான் செய்து வந்த தொழிற்­சாலை வேலை­யி­லி­ருந்து விலகி, தன் முழு நேரத்தை கடை­யில் செல­வ­ழித்­தார் சுப்­பையா. வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­க­ரிக்­கவே, நாள­டை­வில் கடை நல்ல இலா­பத்­தில் ஓடி­யது. இப்­பொ­ழுது, தனக்கு உதவ இன்­னொ­ரு­வ­ரை­யும் வேலைக்கு அமர்த்­திக்­கொண்­டார்.

நாட்­கள் ஓடின. இப்­பொ­ழு­தெல்­லாம் படிக்­க­வும் எழு­த­வும் இர­வில் நேரம் ஒதுக்­கிக்­கொள்­வார் சுப்­பையா. முனி­யாண்டி கொடுத்­து­த­விய பணத்­தை­யும் மெல்ல திருப்­பிக் கொடுத்­தும்­விட்­டார். தன்­னம்­பிக்கை பிறந்­தது. நிறைய எழு­தி­னார். இப்­பொ­ழுது பல­ருக்கு அவ­ரைப்­பற்றி தெரி­ய­வ­ரு­கிறது.

ஆகா! இது­வல்­லவா வாழ்க்கை என்று உற்­சா­கப்­ப­ட்டுக்கொள்வார். அந்த உற்­சா­கத்­திற்கு வேறொரு கார­ண­மும் இருந்­தது. தன் இலட்­சிய பய­ணத்­தின் முதல் படி­யாக மற்­றோர் இடத்­தில் இன்­னும் ஒரு புதிய கிளை­யொன்றை திறக்­கப்­போ­கி­றார் என்­ப­தால்.

முற்றும்